அன்னை மடியில்
அன்னை மடியில் தலை சாய்ந்து
தன்னந் தனிமையில் இன்று உறங்குகிறேன்...
அவள் முகம் பார்க்க முடியாது
நொடி பொழுதும் நான் ஏங்குகிறேன்...
தாய் பாசத்தோடு பசி ஆற்றியதால்
இந்த பல்சுவை உணவும் கசக்கிறதே...
பத்து மாதங்கள் எனை சுமந்தவளை
பிரிந்து வந்ததை நினைத்து
உள் நெஞ்சம் தினம் வலிக்கிறதே......
அன்னை மடியில்......
பூ வாடும் போது நீரூற்று
அது அழுகும் முன்னே மருந்தூற்று
சோகம் வந்தால் அவள் தாலாட்டு
மனம் உறங்கும் தேன் குரல் கேட்டு......
பாசத்தால் எனை கைது செய்தாள்
அதை அறியாது அவளை பிரிந்து செல்ல
பதறிப் போன நெஞ்சோடு
மகனே என்று கட்டி அனைத்தாள்......
அந்தப் பாசக் கரங்களை உதறிவிட்டு
உள்ளத்தால் அவளை அழ வைத்ததை
நினைத்துப் பார்க்கும் போது
இதயமே இடி விழுந்து நொருங்குதே......
அன்னை மடியில்......
ஒரு நாளும் ஓய்வு இல்லாது
வயல் காட்டில் வேலை செய்து
கைரேகை தேயும் அளவிற்கு
உழைத்து அவள் எனை வளர்த்தாள்......
ஊதக் காற்று வீசும் போது
மார்பு சூட்டால் இதம் தந்து
அனல் காற்றிலும் வாட விடாமல்
அவள் அன்பாலே எனை நனைத்தாள்......
இந்த பாவியோ தாய் வேண்டாமென்று
அவளைத் தள்ளி வைத்துப் போனனே...
உள்ளே இருக்கும் என் உசுருக்கு
நானே கொள்ளி வைத்தேனே......
அன்னை மடியில்......