ரகசிய கல்லறை

உலகிலில்லா
அதிசயமாம்!
வெள்ளைக் கல்
ஓவியமாம்!
ஆருயிர் மேவிய
காதலால்
ஷாஜகான்
அனுதினம் தீட்டிய
காவியமாம்!
கண்டிடும் கூட்டம்
ஒவ்வொன்றும்
கவர்ச்சியில் மயங்கி
பேசிடுது!
கண்டம் தாண்டிய
என் மனமோ
வாள் பூசல்களையே
காட்டிடுது!
கனவில் பற்றிய
கரத்தாளை...
அன்பில் அணைத்த
மணத்தாளை...
தினம் கட்டிலறை
ஏவலிட்டு...
நல் கட்டழகை
பருகிவிட்டு...
பிரியமுடன் வந்தவளை
பிரசவித்தே கொன்ற
ஒருவன் கொண்டது
காதலாம்!
கண்டது காவியமாம்...!
பதவி ஆசையில்
பேதலித்து
தந்தையவனை
சிறையிலிட்டு
சகோதரரென்றும்
பாராமல்
கொலைவாளுக்கு
இரையாக்கியவன்
தன் பெண்டின்பாற்
கொண்டதெப்படி
காதலாகும்?
கண்டதெப்படி
காவியமாகும்?!
மன்னன் கட்டளை
மறுக்காது
சொன்ன சொல்லது
தவறாது
எண்ணிய வண்ணமே
எழிலுடன் யாத்தளித்து
கண்களிழந்தனரே?
கைகளிழந்தனரே?!
அவர் துணைவியர்
கொண்டதன்றி
கொலை முகத்தோன்
ஷாஜகான்
கொண்டதெப்படி
காதலாகும்?
கண்டதெப்படி
காவியமாகும்?!
கண் போன்றோன்
கணவனென்ற
காவிய முறைத் தாண்டி
உயிர் போன்றோன்
உரியோனென
மன்னன்
உற்ற துயர் விளக்க...
எழில் மண்டபம்
யாத்தளிக்க...
நாயகன் ஹரின்
தலைப் பிழைக்க...
யமுனையில்
வீழ்ந்து மாய்ந்தனளே
காதலரசி திலோத்தமி!
தீர்ந்தபின்
அவள் மலரடி
தானும் ஏகினனே
ஹரின்...!
இவ்விறப்பினிலிறவா
இறும்பூது காதலைவிட
ஷாஜகான்
காமமெப்படி ஐயா
காதலானது?!
அரசனென்பதாலா?
ஆளும்
வர்க்கமென்பதாலா?!
சதை கிழிசல்தனை
மறந்து
அதரம் மட்டுமே
அடையத் துடிக்கும்...
வாச மலரதின்
கற்பை மறந்து
தேனைத் தேடி
பருகத் துடிக்கும்...
விநோத கூட்டத்தில்
காமத்தின் மறுபெயர்தான்
காதல் போல...!
பொன்னிலுடல்
போர்த்தி காத்திடினும்
பிரமிடென்பது
பிணவறைதானே?
பளிங்கில் சாயம்
கோர்த்து வார்த்திடினும்
தாஜ்மஹால்
ரத்த பலிபீடம்தானே?!
நெஞ்சில் கொண்ட
கற்பனை குழைத்து
ஏதேனும் மொழிந்திடு
கவிஞர் கூட்டமே!...
கருத்தில் முளைத்த
எண்ணம் இழைத்து
எதையேனும் எழுதிடு
அறிஞர் கூட்டமே...!
அடங்கா
காமத் தீத்தனில்
மும்தாஜ்
ஆருயிர் விழுங்கிய
கட்டிடமிது...
மன்னன் கொண்ட
சுயநலமதற்கா
காதலர் கரித்திட்ட
கட்டிடமிது...
ஆளுமை வீரியந்தனில்
மரித்த முகமறியா
சிற்பிகளின்
முடை நாற்றம்
வீசிடும் கட்டிடமிது...
மானுட சுயநல
அகோரத்தின்
மலர்ச் செண்டு பூசிய
மணிமாடமே!
ஆம்,
வாளொலித் தின்ற
கொலுசொலிகளின்
ரகசிய கல்லறை
தாஜ்மஹால்!!!
***********************