இருண்மையின் கனவில் முள்ளிவாய்க்கால் --முஹம்மத் ஸர்பான்

ஒவ்வொரு இரவும்
என்னுடலில் தீப்பற்றி எரிகிறது.
நிர்க்கதியான சடலங்களின்
கல்லறை ஓசைகள் என்
செவிப்பறைகளில் கேட்கிறது.

தாயின் கருவறை கல்லறையான
சேய்யொன்று கை கால்கள்
இன்றி என்னை நோக்கி வருகிறது.
பிள்ளையின் பசியாற்றும்
பால் சுரக்கும் மருமத்தில் ஈக்கள்
குவிந்து மானம் காக்கும் உடையானது.

அண்ணனென என்னை
கதறிக் கொண்டு கைகள் நீட்டிய
தங்கையின் கற்பையும் பல
நரமாமிச கிருமிகள்
பங்கு போட்டுக் கொல்கிறது.

என் கண்களில் ஆயுதங்களை
வெல்லும் வெறியும் தைரியமும் உண்டு
ஆனால் நடந்து செல்ல பாதங்களற்ற
முடவனென்று யாரோ ஒருவன்
மண்ணில் தலையை அடித்து தற்கொலை
செய்கிறான்.தடுக்க நினைத்தும்
என் மனவேகத்தால் முடியவில்லை.

பிள்ளையை ஒருமுறை
பார்த்து வருகிறேன் என்று அலை போல்
கண்ணீருடன் தந்தை ஒருவன் கதறுகிறான்
காவியணிந்த இருண்மையின் தோற்றம்
வாளால் அவன் தலையை வெட்டி பந்தாடுகிறது.

"தாயை மட்டும்
விட்டு விடு என்னை கொன்று விடு"
என்ற வாக்கியம்
எரியும் பிண வெளிச்சத்தில் தெரிகிறது.
"என் மரணத்தை ஒரு நிமிடம் தாமதி
அவள் முகத்தில் மாங்கல்ய அழகு மின்னட்டும்"
என்று தற்கொலை ஊஞ்சலொன்றின்
நிழலில் கடிதங்கள் வாசிக்கின்றேன்.

பசிக்கிறது பசிக்கிறது என்ற
துப்பாக்கி தோட்டாவின் ஓசையில்
காரணமறியா பலரின் உயிர்கள்
வாடி வதங்கி பிணமாகி பசியாற்றுகிறது.

வானம் கூட ஊமைதான்
காற்றுக் கூட காலில்லாத முடவன் தான்
கடவுளும் மெளனம் கொண்டான்,
ஏனென என்னை நோக்கி சிலுவைகள்
தோட்டம் போராட்ட யாத்திரை வருகிறது.

நான் பயந்து கதறிக்கதறி அழுகிறேன்
மரணமும் கழுத்தை நெறிக்கிறது
இடிமின்னலும் என் கண்களின் வீச்சில் தோற்கிறது.
முள்ளி வாய்க்கள் நதியை கதிரவன்
தொட்ட பின் தான் இருண்மையின் நாளென
இன்றைய கனவில் உணர்ந்தேன்..

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (18-May-16, 2:25 pm)
பார்வை : 361

மேலே