திருக்குறளும் திருமந்திரமும்-2
ஒரு பாடு பொருளினை கவிதையாக, செய்யுளாக, யாப்பு இலக்கணப்படியோ, அல்லது புதுக் கவிதை வடிவிலோ நாம் உருவாக்கும் போதுதான், சரியான சொல்லை தெரிவு செய்தல், சீர், அசை, தொடை, எதுகை, மோனை, இயைபு என கட்டமைப்பதில் உள்ள உள்ள கட்ட நட்டங்களும்,. பாடுபொருள் எண்ணியது எண்ணியபடி கைக்கு அடங்குவதும் புரியும். மனத்திலிருப்பதை அப்படியே மரபு மாறாமல் பாட வல்லார் அநேகர் வாழ்ந்த நாடு நம் தமிழ் நாடு என்பதனால், யாப்பருங்கலச் செய்யுளியற் புறனடை சூத்திரவுரையில் ஆரிடப்போலி எனும் செய்யுள் அமைப்பினை விளக்கக் கருதிய யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர்,
“மனத்தது பாடும் மாண்பினோரும்
சினத்திற் கெடப்பாடுஞ் செல்வியோரும்
மூனிக்கணச் செய்யுள் மொழியவும் பெறும”
என்பது பாட்டியல் மரபு எனக் குறித்தனர்.
இவ்வாறு மனதில் தோன்றும் பாடுபொருள் கைக்கு அடங்காமல், எழுத்துக்கு அடங்காமல் போவதை, தப்பிப் போவதை தெளிவாகக் கூற வந்த கவிஞர் பிரமீள், பின் வரும் தவளைக் கவிதையை எழுதினார்.
தனக்கு புத்தி
நூறு என்றது மீன் –
பிடித்துக் கோர்த்தேன் ஈர்க்கில்
தனக்குப் புத்தி
ஆயிரம் என்றது ஆமை –
மல்லாத்தி ஏற்றினேன்
கல்லை.
‘எனக்கு புத்தி
ஒன்றே’
என்றது தவளை,
எட்டிப் பிடித்தேன் –
பிடிக்குத் தப்பித்
தத்தித் தப்பிப்
போகுது தவளைக்
கவிதை –
’நூறு புத்தரே!
கோர்த்தரே!
ஆயிரம் புத்தரே!
மல்லாத்தரே!
கல்லேத்தரே!
ஒரு புத்தரே!
தத்தரே!
பித்தரே!
இவ்வாறு ஞானம் கைவரப் பெறாமல் இருப்பதையே இறுதியில் ஒரு புத்தரே எனும் ஒற்றைச் சொல்லால் அவர் விளக்கி இருப்பது நாம் சுவைக்க மட்டும் என்றிலாது, முயற்சிகள் தொடர்ந்து செய்ய வேண்டும் கவிதைப் பித்தரே எனக் குறிக்கத்தான். இது நாம் வாழும் காலத்தில் வாழுகின்ற கவிஞர்களைப் பற்றிய ஒரு சாடல் எனவும் கொள்ளலாம். எனவே வாழும் காலத்தில் முக்கியத்துவம் கருதி திருமூலரின் மற்றும் திருவள்ளுவரின் காலங்கள் பற்றி இங்கு ஆய்வோம்.
சாத்திர நூலாகவும் தோத்திர நூலாகவும் படைக்கப்பட்ட திருமந்திரத்தை, கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அருளாசிரியர் ஆகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள், தாம் பாடிய திருத்தொண்டத் தொகையில், “ நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்: எனத் திருமூல தேவ நாயனாரைப் பெயர் சொல்லி போற்றிப் பாடியுள்ளார்.
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்து தேவாரம் பாடிய திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோர் பாடிய திருப்பதிகங்களில், திருமந்திரச் சொற்றொடர்களும், பொருள்களும் பலவிடங்களில் எடுத்தாளப்பட்டு இருப்பதாலும் திருமூலரின் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்பது தெள்ளிதின் விளங்கும்
மேலும் “பண்டிதராவர் பதினெட்டுப் பாடையும் என வரும் திருமந்திரப் பாடல் எண். 59 ல் உள்ளபடி பதினெட்டு மொழிகள் எனத் தொகைப்படுத்தும் வழக்கம் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் காணப்படவில்லை என்பதால், திருமந்திரம் கடைச் சங்க காலத்திற்குப் பின் இயற்றப் பட்டதெனக் கருதுவது பொருத்தமாகும்.
தமிழகம், சேர, சோழ பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டதாய், மூன்று தனி நாடுகளாய் விளங்கியது என்பது ,
“வான்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு”
(தொல்-செய்யுளியல்-சூ-79)
எனத் தொல்காப்பியனார் தமிழ் நாட்டினைக் குறிப்பிடுவதால் இனிது விளங்கும். மேலும், தமிழகம், சேர மண்டலம், பாண்டி மண்டலம், சோழ மண்டலம், தொண்டை மண்டலம், கொங்கு மண்டலம் என ஐந்து மண்டலங்களாகப் பிரிந்து தனித் தனி ஆட்சியில் நிலை பெற்ற காலம் கடைச் சங்க காலத்திற்குப் பின் கி.பி. மூன்றாம் நூற்றாண்டினை ஒட்டியதாதல் வேண்டும். இந்த ஐந்துமண்டல பிரிவினை குறித்து திருமந்திரம் சுட்டுவதால், இந்த நூல் தோன்றிய காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதென்பது ஒருவாறு துணியப்படும்.
இதற்கெல்லாம் மேல், திருமந்திரத்தில் தில்லைத் திருச் சிற்றம்பலத் திருக்கோயில் பொன்னம்பலம் எனப் போற்றப் பட்டிருத்தலால் தில்லையில் கூத்தப் பெருமான் ஆடல் புரிந்தருளும் திருவம்பலம் பொன் வேயப்பெற்ற பின்னரே இத்திருமந்திரப் பனுவலை திருமூல தேவ நாயனார் இயற்றி இருத்தல் வேண்டும் எனக் கருதுவது மிகவும் பொருத்தமாக உள்ளது.
தில்லையம்பதிக்கு பொன்னம்பலம் முதன் முதலில் வேய்ந்த புகழுக்கு உரியவன், கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த பல்லவ மன்னன் சிம்ம வர்மன் என்பர் வரலாற்று அறிஞர். எனவே இந்த ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியிலோ அல்லது ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியிலோ இந்த நூல் நிறைவு பெற்றதாகக் கருதலாம் என தி. வை. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் எழுதிய தமிழிலக்கிய வரலாறு (இருண்ட காலம்) பக்கம் 89 ல் காணலாம்.
எனவே திருமூலர் இப்புவி மேல் மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகத்தமர்ந்து இருந்து தமிழ் மூவாயிரம் ஆகிய திருமந்திர மாலையைப் பாடியருளினார் எனச் சேக்கிழாரடிகள் கூறுவதால், திருமூலர், திருவாவடுதுறையில் சிவபோதியின் கீழ்ச் சிவயோகத்தமர்ந்திருந்த காலம் கி.பி. ஐந்தாம் நூற்றண்டிற்கு முன் பண்ணூறாண்டுகள் எனக் கருதுவதும் பொருத்தமே.
திருமூலர், மூலனுடம்பிற் புகுமுன் தனக்குரிய முன்னைய உடம்புடன் கூடிய நிலையில் அவர் பாண்டி நாட்டிற் பிறந்தவர் என்றும், அவர்க்குப் பெற்றோர் இட்ட பெயர் சுந்தரன் என்பதும் மரபுவழிச் செய்திகள் ஆகும். அவர் பொதிய மலையில் அகத்தியர் பால் தமிழ்க்கல்வி பயின்றாரென்றும், பின் அவர் அருளால் கயிலைக்கு ஏகி நந்தி பெருமான்பால் ஞான நூல்களைக் கற்றுத் தேர்ந்தார் என்பதால் நாதர் என்னும் சிறப்புப் பெயர் பெற்றார் என்பதும், அவர் திருக்கயிலையில் இருந்து தென் திசை போந்தது கி.மு. 600க்கும் கி.மு. 3100க்கும் இடைப்பட காலம் என்றும் கூறுவர்.
கி.மு. 6000இல் பதஞ்சலி வியாகிரபாதர் ஆகிய முனிவர்களுடன், திருக்கயிலையில் இருந்து தில்லைக்கு வந்து திரு நடன தரிசனம் கண்டு வட கயிலை சென்று தவம் செய்தார் என்றும், கி. மு. 3100இல் மீளவும் அகத்திய முனிவரைக் காண தென் திசைக்கு வந்தாரென்றும், வரும் வழியில் தான் சாத்தனூரில் பசு படும் துயர் கண்டு மூலன் என்பான் உடம்பினுள் புகுந்து, திருவாவடுதுறையில் 3000 ஆண்டுகள் சிவயோகத்தமர்ந்திருந்து மூவாயிரம் திருமந்திரங்களை அருளிச் செய்து கி.மு. 100ஆம் நூற்றாண்டில் மீளவும் வடகயிலை சென்று பிறவா நெறி பெற்றார் என்றும் திருமூலராகிய சிவயோகியாரது முன்னைய உடம்பின் பிறப்புப் பற்றியும் அவர் வாழ்ந்த காலம் பற்றியும் ஊகித்து ஆராய்ந்து முடிவு கூறுவாருமுளர் என்பது துடிசைக் கிழார் அ. சிதம்பரனாரவர்கள் எழுதிய திருமூலர் வரலாறு எடுத்து இயம்புகிறது. முற்பிறப்பில் அவரது பெயர் சுந்தரன் என்பது
வந்த மடமேழு மன்னுஞ்சன் மார்க்கத்தின்
முந்தியுதிக்கின்ற மூலன் மடவரை
தந்திரம் ஒன்பது சார்வு மூவாயிரஞ்
சுந்தர வாகமச் சொல் மொழிந்தானே (திருமந்திரம்-101)
என்பது குருமடவரலாறு கூறும் பாடல் ஆகும். ஆயினும், சொல் மொழிந்தானே என வருதலால், இது அவர் இயற்றிய பாடலாய் இராமல் பின்னவர் ‘சுந்தர ஆகமம்” என அடைமொழியாய் இறைவன் அருளிய திவ்விய ஆகமம் எனும் சிறப்பு உணர்த்த வந்ததாகும் எனவும் கொள்ளலாம்.
வளரும் .