மரம் வெட்டாதே
ஒரு வங்கியின் துணை மேலாளர் பாலா . அவனது ஒரே செல்ல மகள் எல் . கே . ஜி படிக்கும் ஸ்வீட்டி குட்டி . ஒரு நாள் ஸ்வீட்டி குட்டி ஆர்வமாக ஓடி வந்து தன் அப்பாவிடம் " அப்பா அப்பா எங்க மிஸ் நாளைக்கு எங்க கிளாஸ்ல ஒரு காம்பெடிசன் வச்சிருக்காங்க . மரம் வெட்டாதே ன்னு தலைப்பு கொடுத்துருக்குறாங்க . அதைப் பத்தி 2 நிமிஷம் பேசணுமாம். யார் ரொம்ப நல்ல பேசுறாங்களோ அவுங்களுக்கு ப்ரைஸ் கொடுப்பாங்களாம் . எழுதி தாப்பா " என்றாள்.
பாலாவும் எழுதிக்கொடுக்க , அதை மனப்பாடம் செய்து ஸ்வீட்டி குட்டி தன் கொஞ்சும் மழலை குரலில் இழுத்து இழுத்து கிளாசில் பேசத் தொடங்கினாள் ":அனைவருக்கும் வணக்கம் . மரங்களை யாரும் வெட்டக் கூடாது . ஏன் என்றால் அது நமக்கு உண்ண பழம் , காய் தருகிறது . நமக்கு நாற்காலி , மேஜை எல்லாம் தருகிறது . வீட்டுக்கு ஜன்னல், கதவு செய்ய எல்லாம் பயன்படுகிறது . மரம் நமக்கு மருந்தாகக் கூட பயன்படுகிறது . எனவே , தயவு செய்து மரங்களை வெட்டாதீர்கள் . நன்றி ". மறக்காமல் முழுவதையும் ஸ்வீட்டி குட்டி பேசி விட்டாள். வகுப்பு முழுவதும் கரகொலி. அவளுக்குத்தான் அந்த பரிசு .
ஸ்வீட்டியை எல்லோரும் பாராட்டிக் கொண்டிருக்க , அங்கே யாரோ யாரையும் திட்டும் குரல் கேட்கிறது . ஆம் , பள்ளி மரங்கள் தாம் . அவை தம்மக்குள் முனங்கிக்கொண்டன . " முட்டாள் மனிதன் திருந்தப்போவதே இல்லை ".