நானே தேடிக் கொல்வேன்

இந்த கதை நான் குமுதம் பத்திரிக்கைக்காக எழுதியது. இந்த கதை சிறுகதை போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு பெற்று இந்த வார குமுதத்தில் (25/05/2016)பிரசுரிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.

கடந்த இரண்டு வாரங்களாக அந்த செய்தி என் ரத்தத்தை கொதிப்படைய செய்திருந்தது. எப்படி மாறினாள்? என்ற கேள்விகள் என்னை துளைத்து எடுத்துக் கொண்டிருந்தன. காதலின் வலியை நம்பிக்கை துரோகம் செய்கிற ஒருத்தியால் எப்படி உணர முடியும்.படுபாவி.. பாதகி....எப்படித்தான் இப்படி செய்ய அவளுக்கு மனம் வந்தது.எந்த அளவிற்கு அவளை உயிருக்கு உயிராய் காதலிக்கிறேன் என்பது அவளுக்கே நன்றாய் தெரியும்.நம்ப முடியவில்லையே !!!.என் நண்பர்கள் மூலமாக அந்த செய்தியை உறுதிப்படுத்திக் கொண்டேன்.
விடப் போவதில்லை அவளை. எத்தனையோ முறை அவளை தொடர்புகொள்ள முயன்றேன், முடியவில்லை. விசாரித்து பார்த்ததில் ,ஏதோ அமெரிக்கா மாப்பிளையாம்.திருமணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகப் போவதாவும் கேள்வி. ஓ...வசதியான மாப்பிள்ளையை பார்த்தவுடன் என்னை கழற்றி விட பார்க்கிறாளா.?,விட்டு விடுவேனா ! அவளை.என்னுள் இருந்த மிருகம் மெதுவாக அதன் கொடுர உணர்ச்சியின் உச்சத்தை தொட்டுக் கொண்டிருந்தது என்னையும் அறியாமல்.என்னுடைய குரூர புத்தி கடைசியாக முடிவு செய்தது அவளை கொலை செய்து விடுவது என்று. இன்று இரவு எப்படியும் அவள் கதையை முடித்து விடுவது என்று ஏற்கனவே தீர்மானித்திருந்தேன்.
இன்றிலிருந்து ஒரு வாரத்தில் அவளுடைய திருமணம் ஏற்பாடாகியிருந்தது.எங்களுடைய விசயம் அவர்களது குடும்பத்திற்குத் தெரிந்த காரணத்தால் ஒரு ரகசியமாண இடத்தில் மிக நெருங்கிய சொந்தங்களை மட்டும் வைத்து செய்துவிடுவதாக தீர்மாணிக்கப்பட்டிருந்தது. என்னுடைய மூளை அவளை முடித்துவிட திட்டம் போட ஆரம்பித்தது. கடந்த சில நாட்களாக அவளது வீட்டை நோட்டமிட ஆரம்பித்தேன்.
இரண்டு அடுக்கு மாடி கொண்டது அவள் வீடு. எப்படி உள்ளே நுழைவது? என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கும் போது, பால்கனியின் கதுவுகளை பெரும்பாலும் திறந்தே விட்டுருப்பதை அறிந்தேன்.என் மூளை சுறுசுறுப்படைந்தது. என்னையா ஏமாற்றுகிறாய் நீ! தொலைந்தாயடி.. என்று மனதிற்குள் சந்தோசப்பட்டுக் கொண்டேன்.

நானும் அவளும் ஒரே கல்லூரியில்தான் பி.எஸ்.சி ஃபிசிக்ஸ் படித்தோம். பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பாள். அவளை முதன் முதலாக கல்லூரியில் பார்த்த போதே என்னையறியாமல் ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது. நான் மட்டும் அல்ல, அவளின் பின்னால் ஒரு கூட்டமே சுற்றித் திரிந்தது. ஆனால் பெரிதாக யாரையும் கண்டு கொள்ளமாட்டாள்.கிட்டத்தட்ட ஒரு வருடம் அவள் நினைவாகவே சென்றது. எனது நினைவுகளில் அதிகமாக அவள் எண்ணங்களே கொடி கட்டிப் பறந்தது. எப்படி அவளிடம் சொல்வது? .என்னுள் ஒரு யோசனை தோன்றியது.
அவளுடைய தோழிகளின் வாயிலாக அவளது பிறந்த நாளை தெரிந்து கொண்டேன். ஒரு வாழ்த்து அட்டையில் தைரியமாக எனது காதலை வெளிப்படுத்தி எனது பெயரைப் போட்டு கல்லூரி முகவரிக்கே அனுப்பி வைத்தேன். அனுப்பிவிட்டேனே தவிர ஒரு பயம் என்னை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது. ஒரு வேளை கல்லூரி நிர்வாகத்திடம் பிரச்சனையை எடுத்துப் போய்விட்டால் என்ன செய்வது. இரண்டு நாட்கள் என்னுடைய பொழுதுகள் பயத்தின் உணர்வுகளாலேயே கடந்து கொண்டிருந்தது.இரண்டு நாள் கழித்து அவளது கையிலிருந்த புத்தக கட்டுக்கு மேலேயே என்னுடைய வாழ்த்து அட்டை.
என்னுடைய இதய ஓட்டம் கன்னாபின்னாவென்று ஓடியது. முகத்தில் வியர்வைத் துளிகள் பயத்தில் தயங்கி வெளியே வந்து கொண்டிருந்தது. என்ன நடக்குமோ என்ற அச்சத்துடன் அவளை உற்று நோக்கினேன். அவளும் என்னைப் பார்த்தாள்.சிறிது நேரம் யோசித்தவளாய் என்னை நோக்கி நடந்து வந்தவள், தன் கையிலிருந்த அந்த வாழ்த்து அட்டையை என் கையிலேயே தினித்துவிட்டு, தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள், இதிலெல்லாம் எனக்கு இன்ட்ரெஸ்ட் கிடையாது, என்னுடைய நோக்கமெல்லாம் என்னுடைய படிப்புதான். இதற்குப் பிறகு என்னைத் தொந்தரவு செய்ய மாட்டீர்கள் என்று நம்புகிறேன் என்று கூறிவிட்டு விறுவிறு என நடந்தாள்.
அன்று இரவு முழுவதும் என் முகத்தை தலையனைக்குள் புதைத்துக் கொண்டு அழுதேன். ஒரு வழியாக் மூன்று நான்கு மாதங்கள் ஆனது நான் ஒரு சராசரி நிலையை அடைவதற்கு. இருந்தாலும் அவளது நினைவுகள் என் உயிரில் கலந்து இருந்ததை என்னால் உணர முடிந்தது. கல்லூரியின் மூன்று ஆண்டுகள் முடிந்து அன்று நிறைவு விழா. விழாவும் இனிதே முடிந்து வீடு திரும்பும் போது, செந்தில் என்ற குரல் கேட்டு திரும்பிப் பார்த்தேன். அவள் நின்று கொண்டிருந்தாள்.
என்னருகில் வந்தவள், உங்களைப் போல் ஒரு ஜென்டில்மேனை பார்ப்பது மிகவும் அரிது. நான் சொன்ன ஒரு வார்த்தைக்கு பிறகு என்னை ஒருநாள் கூட தொந்தரவு செய்யவில்லை. இதுதான் ஒரு ஆண் மகனுக்கு அழகு என்றாள். எனக்கு உச்சி குளிர்ந்த்து. ஒரு பெண்ணுக்கு விருப்பமில்லை என்ற பிறகு அவளை தொந்தரவு செய்வது எந்த வகையில் நியாயம் என்று என் பங்கிற்கு எடுத்துவிட்டேன் ஏக்கத்துடனேயே. சரி வருகிறேன் என கிளம்பும் போது, செந்தில் என்று தயங்கினாள். என்ன? என்று சற்று குழம்பி நின்ற நிலையில், செந்தில் நான் உங்களை காதலிக்கிறேன், என்னை ஏற்று கொள்வீர்களா என்றாள்.
அவ்வளவுதான் இறக்கையை கட்டிக்கொண்டு அந்தரத்தில் பறப்பது போல பரவசம் அடைந்தேன். அதன் பிறகு ஒரு காபி ஷாப்பிற்க்கு சென்று மனம் விட்டு பேசினோம். பிறகு எங்கள் சந்திப்பகள் அடிக்கடி தொடர்ந்தன. அதன் பிறகு அவள் ஒரு பெரிய எம்.என்.சி கம்பனியில் சேர்ந்து மிக பெரிய சம்பளம். நானும் ஒரு தனியார் நிறுவனத்தில் சேர்ந்துவிட்டேன். அவளுடைய சம்பளத்தை கணக்கிடும் போது அதில் மூன்றில் ஒரு பங்குதான். எனக்கு கூட ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்தது. அவள்தான் நான் சம்பாதித்தால் என்ன?,நீங்கள் சம்பாதித்தால் என்ன? எல்லாம் ஒன்றுதானே என்று என்னை சமாதானம் செய்வாள்.எங்களுடைய திருமணத்தைப் பற்றி தீவிரமாக சிந்தித்து கொண்டிருந்தோம். அவளுடைய வீட்டில் எதிர்ப்பு இருப்பதாக அடிக்கடி புலம்புவாள். இந்த சமயத்தில்தான் இந்த செய்தி இடியாய் என் தலையில் விழுந்தது. கடந்த ஒரு மாதமாகவே என்னை முழுவதுமாக தவிர்த்திருந்தாள். அப்படியென்றால் அவள் பேசியது எல்லாம் வெறும் நடிப்புதானா?.நான் குறைந்த சம்பளம் வாங்குகிறேன் என்றுதான் என்னை நிராகரித்துவிட்டாள்.
விடுவேனா அவளை ,இன்று இரவு எப்படியும் தீர்த்துவிட வேண்டும் .. சரியாக பத்து மணி ,என் வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டேன். கூரிய கத்தி என் இடுப்பில் மறைந்து இருந்தது. அவள் வீட்டை அடையும்போது சரியாக பத்து மணி நாற்பது நிமிடம். அவளது வீட்டின் விளக்குகள் அணைக்கப்பட்டிருந்த்து. பதினோரு மணிவரை காத்திருந்தேன். இதுதான் சரியான தருணம் என்று மெதுவாக காம்பவுண்டின் பின்பக்கம் ஏறிக் குதித்தேன். மாடி செல்லும் படியின் வழியாக மொட்டை மாடியை அடைந்தேன். மொட்டை மாடியிலிருந்து மெதுவாக லிண்டலில் கால் வைத்து பால்கனியில் இறங்கினேன். பால்கனி வழியாக வீட்டிற்குள் செல்லும் கதவை மெதுவாக தள்ளினேன். கதவு திறந்து கொண்டது.
ஒரு வழியாக அவள் இருக்கும் அறையை அடைந்தேன். நன்றாக கண்ணை மூடி தூங்கிக் கொண்டிருந்தாள். என்னை அனாதையாக விட்டு விட்டு உனக்கு தூக்கம் ஒரு கேடா?. என் இடுப்பில் இருக்கும் கத்தியை உருவினேன். அவள் பக்கத்தில் கிடந்த ஒரு தலையணையை மெதுவாக எடுத்து அவள் முகத்தை பலம் கொண்ட மட்டும் அழுத்தி கொண்டு மார்பில் பல முறை குத்தினேன், என் வெறி அடங்கும் வரை.. எந்த வித எதிர்ப்பையும் காட்டியதாக தெரியவில்லை. ஒருவேளை, தலையனையால் பலமாக அழுத்தியதால் மூர்ச்சையாகி இருப்பாளோ! எப்படியோ தொலைந்தாள் சண்டாளி என்று யோசித்தவாறே புறப்படத் தயாரானபோது மடிக்கப்பட்டு மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்த அந்த காகிதம் மங்கிய இரவு விளக்கு வெளிச்சத்தில் என் கண்ணில்பட்டது. முதலில் அதைப்பற்றி கவலைப் படாதவனாக புறப்பட தயாரான என்னை ஏதோ ஒன்று அதை எடுக்க தூண்டியது. நடுங்கிய கைகளுடன்,மெதுவாக எடுத்து பிரித்துப் பார்த்தேன்.
அன்புள்ள அம்மா, என்னுடைய செந்திலுடனான காதல் உங்களுக்கு பிடிக்கவில்லை. எனக்கும் பிடிக்காத ஒரு திருமணத்தை செய்துகொண்டு வாழ விருப்பமில்லை. எனவே என் முடிவை நானே தேடிக்கொள்கிறேன். எனது சாவிற்க்கு யாரும் காரணம் இல்லை.நான் உயிருக்கு உயிராக விரும்பும் செந்திலை என் அடுத்த பிறவியிலாவது கரம் பிடிப்பேன் என்று நம்புகிறேன். அவரைப் பார்த்தால் எனக்காக வருத்தபட வேண்டாம் என்று சொல்லுங்கள். அவ்ரை ஒரு திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக வாழச் சொல்லுங்கள், இப்படிக்கு அனுராதா என்று முத்து முத்தான கையெழுத்துடன் அந்த கடிதம் நிறைவுபெற்றிருந்தது.

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (19-May-16, 10:17 pm)
சேர்த்தது : கோனேஸ்வரன்
பார்வை : 487

மேலே