உழைப்பாளி

உழைத்து வாழ்வான் தொழிலாளி –அவன்
உலகில் என்றும் முதலாளி !
பழையதை மாற்றும் பாட்டாளி –தினம்
புதுமைகள் காட்டிடும் கூட்டாளி!

சேற்றில் இறங்கி உழைத்திடுவான் –நம்
சோற்றுக்கு வழிவகைச் செய்திடுவான்
நாற்றினை வயலில் நட்டிடுவான்-இந்த
நாடு உயர்ந்திட வித்திடுவான்.

உழைப்பவன் இன்றேல் உலகில்லை –மனித
உயிர்கள் வாழ்வுக்கும் வழிஇல்லை!
உழைப்பே என்றும் உயர்வாகும் –அது
உண்மை என்பதும் தெளிவாகும்.

கல்லை உடைத்துத் தந்திடுவான் –அதில்
கடவுள் சிலையினைச் செதுக்கிடுவான்
இல்லை என்றொரு சொல்லினையும்- அவன்
இல்லை என்றே ஆக்கிடுவான்.

அடுக்கு மாடிகள் கட்டிடுவான் –தன்
ஆற்றலை அதிலே காட்டிடுவான்
எடுக்கும் செயல்கள் யாவினிலும் –தன்
இடுக்கண் மறந்து உழைத்திடுவான்.

காடு மலைதனைத் திருத்திடுவான் –தன்
கடமை அதுவென உணர்த்திடுவான்
பாடு பட்டே பிழைத்திடுவான் –அவன்
பேச மறந்தே இளைத்திடுவான்.

நீள்கடல் சென்றே மீன்பிடிப்பான்-அந்த
நெஞ்சுரம் தன்னில் உயிர்பிடிப்பான்
பாழ்பட்டு அவனும் வீழ்வதுவோ ?-அந்த
பாமரன் வாழ்வதுவும் தாழ்வதுவோ?


உழைப்பவன் தன்னை போற்றிடுவோம் –அவன்
உயர்ந்திட கொள்கைகள் ஏற்றிடுவோம்
தழைத்து வாழ வைத்திடுவோம் –அவன்
தரணி ஆள முனைந்திடுவோம்.

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (19-May-16, 8:43 pm)
பார்வை : 65

மேலே