கிராமத்துக் காதல்

பெண்
சேத்துக்குள்ள பாத்தி கட்ட, எம் மனச சேறாச்சு
சேத்திலுள்ள தண்ணி போல எம்மனசு எணைஞ்சிருச்சு
மத்தியான வேளையிலும் வயலுக்குள்ள நீயிருக்க
சித்தமெல்லாம் ஏங்குதய்யா எஞ்சேலையிலே கொட புடிக்க

ஆண்:
சித்துவேல தெரியாதா..உஞ்சின்ன மனசு புரியாதா
பத்துவெரல் தேஞ்சாலும் வயலுதாண்டி என்னுசுரு
மொத்த வேலை முடிஞ்சுடனும் எம்மனசு புரியாதா
சித்தநேரம் பொறுத்திருந்தா, சீரொன்னும் கொறையாது

பெண்
சித்த நேரம் எல்லாமே, இப்போ செத்த நேரமாயிடுச்சே.
பெத்த அப்பன் மனசெல்லாம், வேற மாதிரி போயிடுச்சே.
சொத்த எல்லாம் அடகுவெச்சு, டவுனுக்கார மாப்பிள்ளைக்கி
பித்தனப் போல் பைத்தியமா, என்னக் குடுக்க நெனச்சிருச்சே.

ஆண்
மெத்தப் படிச்சவங்க, பேண்டு போட்ட பெரியவங்க.
சத்தம் போட்டு பேசாத, நாகரீகம் தெரிஞ்சவுங்க.
பித்தளை நெறத்தழகி, தளிஞ்சிப்பூ மொகத்தழகி
மொத்தமா ஒன் அழகுக்கு அவங்கதானே ஏத்த இடம்.

பெண்
பித்தம் புடிச்சிருச்சா, பேயேதும் அடிச்சிருச்சா..?
அத்தமகங் கருப்பழகுக்கு அத்தனையும் எணையாகுமா..?
மெத்த அவுங்க படிச்சாலும், மாமன் மனசு போல்வருமா..?
சித்தமெல்லா நெறஞ்சிருக்கற உங்க வேட்டிக்கது எணைதானா..?

ஆண்
எத்தனதா இருந்தாலும் எம்மனசெல்லாம் நீதாண்டி.
பித்தனப் போல் ஆனாலும் பொத்திவெக்க முடியலயே..!
இத்தன நாள் எனை நெனச்சு உடும்பாக இருக்கறியே.
மொத்தமா இது போதும், உங்க அப்பங்கிட்ட நாம்பேச.

பெண்
யுத்தமுன்னு வந்தாலும் உங்கூட வர நானிருப்பேன்.
இரத்தமுன்னு வந்தாலும் உங்கூட நானும் செத்திடுவேன்.
பெத்தவங்க சொன்னாலும் பேச்செல்லாம் கேட்கமாட்டேன்.
நித்தமும் உங்கூட எணைஞ்சிருக்க வரங்கேட்பேன்.

ஆண்
பித்து எனக்கில்ல உனக்குதாண்டி புடிச்சிருக்கு.
பெத்தவங்க பாவமெல்லாம் வேண்டாண்டி புரிஞ்சிக்க நீ.
சேத்தொழவு பக்குவம்போல், நம்ம சினேகிதத்த சொல்ல வாரேன்.
பெத்த அப்பன் ஒத்துக்கிட பேசறேண்டி மனசத் தொட்டு.

பெண்
காத்தைப் போல மனசலைய காடைக்குருவி போலானேன்.
ஏத்தம் எறைக்கும் நீராக, நீ தாலிகட்ட நெறயுதுப்போ.
சேத்துக்குள்ள ரெண்டுபேரும் சேர்ந்துழைப்போம் ஏராக..!
பெத்தவங்க ரெண்டு குடும்பம் துணைவரட்டும் ஜோராக...!

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (22-May-16, 10:56 am)
பார்வை : 571

மேலே