கோடை மழையே வா

குடைக்குள்ளும் ஊடுருவி
உச்சி மண்டையைக் குடைந்தது வெயில் !
எரிந்தது தேகம்
வியர்க்குருவின் அரிப்பால் !
செருப்பின்றி சாலையில்
நட(ன)மாடிய கால்களில் கொப்பளங்கள் !
கருணையின்றி சுட்டெரிக்கும்
கத்திரியில் கதிரவனின்
உக்கிரத்திலிருந்து
சற்றேனும் விடுதலை பெற
வானமுதே சிந்தாயோ ?
வறண்டு வெடித்த பூமியைக் குளிர்விக்க
கோடைமழையே வாராயோ ?
தூசுகளால் மாசுபட்ட
மரம் செடிகளும் காத்திருக்கிறது
உன் நீராட்டுக்கு !
வானவில் காட்டி வசந்தம் பாடி
தென்றலோடு தவழ்ந்தாடி
மேனி நனைத்து விளையாட
கோடை மழையே நீ வா !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (22-May-16, 10:26 pm)
பார்வை : 83

மேலே