நகைச்சுவையும் உளவியல் சிக்கல்களும்
நவீன உலகில் உளவியல் கோளாறுகள் என்பன கண்ணுக்குத் தெரியாத நோய்க்கூறுகள் ஆகும். இந்த உளவியல் கோளாறுகளின் முக்கியமே இவற்றை நாம் தொட்டு, பார்த்து அறிந்துகொள்ளமுடியாத நிலையில் இருப்பதாகும். அது மட்டுமல்ல அவை எமது நாளாந்த அசைவியக்கத்தின் ஒவ்வொரு அம்சத்திலும், நாங்கள் எவ்வாறு பேசுகிறோம், எவ்வாறு நடக்கின்றோம், எவ்வாறு செயலாற்றுகின்றோம், எவ்வாறு அன்பு செலுத்துகின்றோம் என்பனவற்றிலெல்லாம் பாதிப்பு செலுத்தக்கூடியனவாக உள்ளன. அத்தோடு நகைச்சுவையை நாம் எவ்வாறு ரசிக்கின்றோம், ஹாஷ்யமான நிகழ்ச்சிகள் குறித்து நாம் எவ்வாறு சிந்திக்கின்றோம், நகைச்சுவையை நாம் எவ்வாறு எதிர்கொள்கின்றோம் என்பனவற்றையும்கூட இவை பாதிக்கின்றன.
என்னைச் சிரிப்பிலாழ்த்தும் பிரபல்யமான நகைச்சுவை ஆளுமைகள் ஏன் தொடர்ச்சியான உளவியல் கோளாறுகளுக்கு உட்படுகிறார்கள் என்பதுபற்றி நான் நீண்டகாலமாக வியப்புற்று வந்திருக்கிறேன். நகைச்சுவைக்கும், உளவியல் சிக்கல்களுக்குமிடையில் உள்ள தொடர்புகள் குறித்து நிறையவே பேசப்பட்டுள்ளது.
உண்மையில் உளவியல் கோளாறுகளுக்கு உட்பட்டவர்கள் தங்களின் உள்மனதில் வியாபித்துக்கிடக்கின்ற இந்த ராட்சகர்களிடமிருந்தே தங்கள் நகைச்சுவைக்கான பெருந்தூண்டுதலைப் பெற்றிருக்கிறார்கள்.
உளவியல் சிக்கல்கல்களும்;, மன அழுத்தங்களை சீராக்கும் செயற்பாடுகளும் அடிப்படையில் நகைச்சுவையுடன் சேர்ந்தே செயற்படுவதைக் காணலாம். சிறந்த ஹாசிய நிகழ்ச்சியானது உணர்ச்சிகள் மற்றும் மன எழுச்சிகளுக்கு சாதமாகத் திகழ்கின்றன. நிலைமைகள் மோசமாகிப்போகின்ற கட்டங்களில் இவை உளவியல் ரீதியான அடிதாங்கியாக அமைகின்றன. பகிடிகள் விடுவதன் மூலம் நவீன உலகம் தங்களுடைய உணர்ச்சிகளை உற்சாகத்தோடு வைத்திருக்க உதவுகின்றது என்று மேக்றோ (McGraw) என்ற அறிஞர் கூறுகின்றார். நகைச்சுவைக்கும் மன அழுத்தத்திற்கும் இடையிலான தொடர்புகளைப் பற்றிய எனது முதலாவது சிந்தனை ஃபிராங்கி பொயில் (Frankie Boyle) என்ற நகைச்சுவை ஆளுமையில் இருந்தே ஆரம்பமாகின்றது. பார்த்தும் பார்க்காமலும் நகைச்சுவையை அள்ளி எறிகின்ற இவரின் நகைச்சுவைகளைக் கேட்டுச் சிரிப்பீர்களானால் அதற்காக நீங்கள் தேவாலயத்தில் பாவசங்கீத்தனம் செய்ய நேரலாம். ஆனால் பிரபல்யமான நகைச்சுவையாளரான பொயில் தனது இளமைக் காலங்களில் மன அழுத்த நிவாரணங்களுக்கான பயிற்சி மையங்களில் கலந்துகொண்டிருக்கிறார். அத்துடன் உளவியல் கோளாறுகளுக்கு சிகிச்சை வழங்கும் ஒரு நிலையத்திலேயே முதன் முதலில் வேலை பார்த்திருக்கிறார். நகைச்சுவைக்கும் உளவியலுக்கும் சம்பந்தமில்லாது போனாலும்கூட இவரது தொழிலானது மனக்கோளாறுகளைத் தீர்க்கும் ஒரு செயல்முறையாகவே காணப்படுகின்றது. பொயில் மட்டுமல்ல பிரபலமான நகைச்சுவை ஆளுமையான ஸ்ரீபன் ஃபிறை (Stephen Fry) என்பவரும் மனக்கோளறுகளுடன்; போராடியே வந்திருக்கிறார். இருமுனைக் கோளாறால் (Bipolar Disorder) இவர் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தம் மனதில் ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்பால் சிறிது காலம் அதீத மகிழ்ச்சியாலும் மிகையான உற்சாகத்தாலும் திளைக்கிறார்கள். பின் இதற்கு நேர் எதிரான மிகையான சோகத்தில் அதாவது ஆழ்ந்த மனச்சோர்வில் சிலகாலம் வருந்துவார்கள். ஸ்ரீபன் ஃபிறை 2012 ஆம் ஆண்டில் தற்கொலை முயற்சியை மேற்கொண்டார் என்பது குறிப்பிட்டுக் கூறவேண்டியதொன்றாகும்.
றொபின் வில்லியம்ஸ் (Robin Williams)) என்ற மற்றுமொரு காலமெல்லாம் பேசத்தக்க சிறந்த நகைச்சுவை ஆளுமைகொண்டவர்; ஆகஸ்ட் 2014 இல் தற்கொலை செய்துகொண்ட துயர நிலைமையையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், நாங்கள் மேடையில் பார்க்கும் ஒரு ஹாசிய நிகழ்ச்சி உண்மையைத்தான் பேசுகிறது என்று யோசிக்கும்போது சிக்கலாகவே இருக்கிறது.
இந்த நகைச்சுவையாளர்களுக்கும் அவர்களின் சொந்த உளக்கோளாறுகளுக்கும் இடையில் காணப்படுகின்ற வலிமையான தொடர்பானது, இத்தகைய அரும்பெரும் ஆற்றலும் மற்றவர்களைச் சிரிப்பிலாழ்த்தும் அரிய திறனும் கொண்ட இவர்கள் அமைதியாக தங்களின் சொந்தச் சோகங்களோடு போராடிக்கொண்டிருப்பதுபற்றி எனக்குள் ஒரு கேள்வி எழுந்திருக்கிறது. ஒருவேளை தங்களுடைய தனிமை உணர்வுகளும் அந்நியமாகி நிற்கும் உணர்வுகளும் இந்த முரண்பாடான நிலைமைகளை உருவாக்கி இருக்கக்கூடும். இந்த நிலைகளே உளவியல் நோய்களோடு மிக நெருக்கமான சம்பந்தம் கொண்டவையாகக் காணப்படுகின்றது. நகைச்சுவை என்பது வெறும் களிப்பூட்டும் ஒன்று மட்டுமல்ல அது மற்றவர்களைச் சிரிப்பிலாழ்த்தும் சமூகக் கூட்டுறவின் ஒரு பகுதியாகவும் அமைகிறது.
இந்த நகைச்சுவையானது நகைச்சுவை என்ற பொதுத்தளத்தில் மக்களை இணைத்து ஒரு களிப்பூட்டும் விஷயத்தில் தங்களின் சொந்தத் துயரங்களைத் தங்களின் நேயர்களுக்கு வழங்குகின்றார்கள் போலும். இது ஒருவித களிப்பூட்டும் வடிவத்தின் முரண்பாட்டைக் காட்டுகிறது. தங்களின் நேயர்களுக்குக் களிப்பூட்டும் நிகழ்வு என்ற போர்வைக்குள் தங்களின் வலிகளைச் சாதுரியமாக வெளிப்படுத்துகிறார்கள். என்ன காரணங்கள் கூறப்பட்டாலும் உளவியல் கோளாறுகளால் அவதியுறுவோருக்கு நகைச்சுவை என்பது இத்தகைய நவீன உலகில் உளவியல் கோளாறுகளை நிவர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஐக்கிய ராச்சியத்தில் ஆயுதப்படையினர் (யுகு) ராணுவ வீரர்களின் மத்தியில்; உளவியல் கோளாறுகளைச் சீர் செய்யும் விதமாக சில முயற்சிகளை மேற்கொண்டனர். இதற்காக அவர்கள் மேற்கொண்ட ஒரு பரீட்சார்த்த நிகழ்வில் உளவியல் சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு பிரபல ஹாஷ்ய நடிகர்களின் நகைச்சுவை ஓரங்க நாடக நிகழ்ச்சிகளைப் பாவித்தனர்;. அந்த நிகழ்வில் பின்வரும் முடிவுக்கு அவர்கள் வந்து சேர்ந்தனர்: ‘உளவியல் ஆரோக்கியம் சாந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விளக்கங்களை இவ்வாறு ஹாஷ்ய நிகழ்ச்சியின் மூலம் காட்டியது திருப்தியாக அமைந்ததுடன் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் சூழலையும் உருவாக்கியது’ என்பதுதான்.
நவீன உலகில் நீண்ட காலமாகவே உளவியல் நோய்கள் என்பன ஒரு தீண்டத்தகாத ஒன்றாகவே நோக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் இன்று நிலைமை மாறியுள்ளது. விசித்திரம் என்னவெனில் ஹாஷ்யமே இந்த உளவியல் நோய்க்கான தீர்வாக அமைந்திருப்பதுதான்.
ஆங்கிலத்திலிருந்து தமிழில் : நவஜோதி ஜோகரட்னம்.