இனம் காணாத பிணங்கள்

மண்ணுலகில் பிறக்கின்ற
மனிதம்யாவும் பிணமாதல்
கண்களினால் காணுகின்ற
காட்சியன்றோ உலகினிலே .


விண்ணுலகைச் சென்றடைதல்
விந்தையல்ல . இஃதுண்மை .
எண்ணிலடங்காப் பிணங்களெல்லாம்
இனம்காண முடிவதில்லை .


இனம்காணாத பிணங்களது
இவ்வுலக வாழ்க்கையிலே
மனம்பொருக்க முடிவதில்லை
மண்ணுலகில் மனிதஇனம் .


தினந்தினமே பிணமாதல்
திக்கெல்லாம் நரபலிகள் .
உணர்வின்றிச் சமுதாயம்
உருக்குலைந்து போனதுவே .


தமிழகத்தை நாசமாக்கும்
தரமில்லா இனக்கொலைகள்
இமைப்பொழுதும் மறக்கமுடியா
இரக்கமில்லா வன்முறைகள் .


சுமைதாங்கும் மக்களினம்
சுடலைக்குள் போயிற்றே .
தமிழகமே கலங்கிநிற்கும்
தலையில்லா முண்டங்கள் .


சாதிவெறிப் பிடித்ததனால்
சமுதாயக் கொடுமையினால்
நீதிநெறி தறிக்கெட்டு
நிம்மதிக்கும் வழியில்லை .


பாதியிலே பிணமாகிப்
பாரினிலே கிடக்கின்றார் .
மேதினியில் உழல்கின்றார்
மேன்மையின்றிச் சாகின்றார் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (27-May-16, 2:05 pm)
பார்வை : 64

மேலே