நண்பி
பள்ளி ஆண்டு விழாவில்
பின்னூசி தேடிக் கொண்டிருந்தாய்,
அந்த பதற்றம் ஏனோ என்னைத்
தொற்றிக்கொள்ள,
படார் என்று காலில்
இருந்த ரப்பர் செருப்பை கழற்றி,
ஒரு வாரில் தைத்திருந்த பின்னூசியை,
பிய்த்தெடுத்து தந்த அன்று தான் -நீ
எனக்கு முதல் அறிமுகம்.
சிரித்துகொன்டே தாவணியை
நுனி நாக்கில் கடித்துகொன்டே,
மேடை ஏறினாய்,
உன் கொண்டை பூவின்
பாதுகாவலானாய் - என்
பின்னூசி.
அடுத்த நாளே,
சிறுபிள்ளை போல் ஓடி வந்து,
ஆட்டம் எப்படி இருந்ததென்று,
கேட்டாய்?
பெண் பிள்ளையிடம் பேசதெரியாத நான்,
ஊமைபோல் கை ஜாடை செய்தேன்.
நீயும் புரிந்தது போல் தலையாட்டிவிட்டு,
சென்றாய்.
நான் உன் தோழன் ஆனேன்,
நீ என் நண்பியானாய்.
தினம் தினம் அரட்டை...
நான் ஏழாம் வகுப்பு ஏ பிரிவு,
நீ ஏழாம் வகுப்பு டி பிரிவு.
உணவு வேலை வரை
உற்சாகமின்றி இருப்பேன்,
மதிய உணவிலோ பீட் ரூட் பொரியல் கூட
உருளை கிழங்குபோல் உண்டு முடிப்பேன்.
சேர்த்தே நடப்போம்,
சத்தமாய் சிரிப்போம்,
சண்டை மட்டும் நிதானித்து
நிகழ்த்துவோம்.
இப்படியே ஓடியது சில வருடங்கள்...
தீடீரென்று நீ சமைந்து விட்டதரிந்து,
பேசத் தயங்கிய என்னை,
குடிசை கூரை விளக்கி,
என் தலையில் குட்டுக் கொட்டி
கூச்சத்தை குழி தோண்டி புதைக்க வைத்தாய்.
பள்ளி முடித்து,
கல்லூரியும் நம் நட்பிற்க்கு
நன்மை செய்தது.
தோழர்கள் நம்மை
காதலர்களாய் முத்திரை குத்தி,
காற்றுவாக்கில் கசிய விட்டனர்.
அப்போதும் நீ,
அசரவில்லை.
தொட்டு பேசுவதை நிறுத்தலாம்
என்றேன்.
அதற்கு நீ,
காதலர்கள் தொடாமல்
பேசுவது காதலுக்கு நல்லது,
தொட்டு பேசுவதே,
நட்புக்கு நல்லது என்றாய்...!
பிரமித்துப் போனேன்.
கனவிலாவது காமக்
கணைகள் எனையும்
அறியாமல் எதிர்வரும்,
உன்னோடு இருக்கும் போது,
கடுகளவு கூட தலை
தூக்கியது இல்லை.
இது சத்தியம்.
வீட்டிக்கு அழைத்து வந்தபோது,
பொதுவான பயத்தில் என் அம்மா
இருந்ததை உணர்ந்த நீ,
அம்மா நான் உங்களின்
மருமகளாக முடியவே முடியாது,
ஏனென்றால், உங்களின் மகன் எனக்கு
எப்பொழுதே நிச்சயிக்கப்பட்ட நண்பனாகிவிட்டான்,
ஆகையால் வருந்தாதீர் என்று
யாரால் புரியவைக்க முடியும்,
உன்னைத் தவிர?
ஏதோ ஒரு சமயத்தில்,
உன்னை விட்டு விலகினேன்,
நீயும் அதை அனுமதித்தாய்.
விலை மதிப்பில்லா நட்பை
வீதியில் வீசி விட்டோம்...
அது இன்றோ,
மின்மயானம் ஏறி,
விண்ணுலகமே சென்றிருக்கும்
என்று நினைக்கிறன்.
ஆண் பெண் நட்பினுள்,
எதை பற்றி பேசினாலும்,
சுவாரஸ்யம்.
ஆழமாய் பேசலாம்,
அலுக்காமலும் பேசலாம்,
ஆக்கப் பூர்வமாகவும் பேசலாம்.
காதலியிடமோ,
அழகை பற்றி ஆராதிக்கலாம்,
காமத்தில் திளைந்திருக்கலாம்
வருங்காலத்தைப் பற்றி வருந்தி இருக்கலாம்...
இதைத் தவிர,
அரசியல்,
ஆராய்ச்சி,
புத்தகங்கள்,
எழுத்தாளர்கள்,
சமூகம்,
உணர்வுகள்,
அல்லது பொதுவான எதுமே
கலந்தாலோசிப்பது கடினம்.
ஆண்களும் பெண்களும்,
காதலர்களாய்,
கணவன் மனைவிகளாய்,
இருக்கும் எண்ணிக்கை அளவைவிட,
நண்பன் நண்பிகளாய் இருக்கும் எண்ணிக்கை
மிக மிக குறைவு.
கல்லூரி கடைசி நாளன்று,
பிரியா விடைபெற்று
பிரிந்து செல்கிறோம்,
அதோடு அனைத்தையும்
முறித்து விடுகிறோம்.
நண்பன் நண்பியாய்
இருந்து பாருங்களேன்,
முடிந்தால் தொடர்ந்து பாருங்கள்,
மனசுமைகள், மன அழுத்தங்கள்,
வெகுவாக குறைந்து போகும்,
இந்தச் சமூகம் செழித்து ஓங்கும்....!