ஒரு நிமிடக்கதை - கல்லும் கனியும்

விளாச்சேரி ரங்கய்யரின் சகோதரர் மணிஐயர். முரட்டுப் பேர்வழி. மணிஐயர் பள்ளியில் பகவானுக்கு சீனியர். பலசாலி. எந்தக் கோவிலுக்கும் போகமாட்டார். யாரையும் நமஸ்கரிக்கவும் மாட்டார். எல்லோரும் 'போக்கிரி மணி' என்றே கூப்பிடுவார்கள்.

பகவான் திருவண்ணாமலை வந்து சில வருடங்களுக்குப் பின், தன் தாயாருக்குத் துணையாக திருப்பதி சென்றார் போக்கிரி மணி. ரங்கய்யரின் தாயார் பகவானை பார்த்துவிட்டு செல்லலாம் என்றார். போக்கிரி மணி ஒத்துக்கொள்ளவில்லை.

ஊர் திரும்பும் வழியில் தாயார் மீண்டும் தன் ஆசையைக் கூறினார்.

போக்கிரி மணி, 'நான் அந்த போலிச் சாமியாரை யெல்லாம் பாக்க வரமாட்டேன். நான் வந்தா, காதை திருகி அவனை ஊருக்கு கூட்டிண்டு போயிடுவேன். அவா அம்மா, அண்ணா, சித்தப்பா மாதிரி எங்கிட்டே பாச்சா பலிக்காது. தூக்கிண்டே போயிடுவேன்' என்றார்.

'சரி ! என்னமோ செய் ! என்றார் அன்னை.

இருவரும் திருவண்ணாமலையில் இறங்கி விருபாக்ஷ குகைக்குச் சென்றனர். அம்மா போக்கிரி மணியின் குணம் தெரிந்ததால் பயந்தபடி வந்தாள்.

பகவான் குகையில் வீற்றிருந்தார். அம்மா, பார்த்த உடன் நமஸ்கரித்து விட்டு அமர்ந்தாள்.

போக்கிரி மணி பகவானை எடை போடுவதுபோல் பார்த்தார்.

பகவானும் பார்த்தார்.

போக்கிரி மணி பார்த்தார்... பார்த்தார்... பார்த்துக்கொண்டே இருந்தார்.

கண்களில் நீர் அவரையும் மீறி வழியத் துவங்கியது.

வாழ்க்யையில் எந்த தெய்வத்துக்கும், மனிதனுக்கும் வணங்காத போக்கிரி மணி, முதல் முறையாக மனித தெய்வத்துக்கு வணங்கி சாஷ்டாங்கமாய் கும்பிட்டார்.

பகவானுக்கே அடிமை பூண்டார். அடிக்கடி வரலானார்.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (29-May-16, 8:00 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 198

மேலே