முள்ளிவாய்க்கால்
அடக்குமுறையில் அடங்காத ஓரினம்
தலை நிமிர்ந்து தட்டிக்கேட்ட எம்மினம்
கயவனவன்காலடியில் கட்டுண்டு நசியாமல்
நெட்டெனநிமிர்ந்து நீதிகேட்ட தழிழினம்
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்துநில்லடா என்று
எம்மவர்கள் அன்று நெஞ்சுரத்தோடு
நேயமாய் நடைபயின்ற மண்
அந்த மண் முள்ளிவாய்க்கால் மண்
தந்தையும் தாயும் எந்தையும்
கூடிமகிழ்ந்து குலாவி அங்கே
விந்தைகள் பேசி
வீரம் வளர்த்த மண்ணில்
விதி கொண்டகோலமும்
சதி கொண்ட தருணமும்
சேர்ந்திங்குவிளையாடி
சதிசெய்து எம்மவரை
சாய்த்தழித்த தருணமதை
யாம் மறவோம் மரணம் வரை
நீதியதை புதையலாக்கி
நிமிர்ந்து நின்று வெற்றி சொல்லும்
கருமைதனை யாமொழிப்போம்
கைகோர்த்து நாம் நடப்போம்
உங்களிற்காய் குரல் கொடுப்போம்
உலகிற்கு எடுத்துரைப்போம்
முள்ளிவாய்க்கால் புளுதிகளில்
மூடப்பட்ட உறவுகளே
உங்கள் பயணம் முள்ளிவாய்க்காலோடு
முடிக்கப்படவுமில்லை – அது
மூடப்பட்ட புதைகுழியுமல்ல
எங்கள் உறவுகள் நீங்கள் அங்கே
உறங்கிக்கொண்டிருக்கிறீர்கள்