தந்தைக் கவிதைகள் பக்கம் 04--முஹம்மத் ஸர்பான்

முதன்முதலில் கரங்களால் பென்சிலை பிடித்து
நான்கு கோடுகள் இட்டேன்.ஓவியம் என்றாய்.
தாய்மொழியில் நான்கு எழுத்துக்களை எழுதி
உன்னிடம் காட்டினேன்.புதுக் கவிதை என்றாய்
என் வாழ்க்கையின் நான்கு திசைகளிலும் உன்னை ஓவியமாகவும்
சுவாசத்தின் கவிதையாகவும் வாசிக்கிறேன் தந்தையே
பிள்ளை முகம் பார்த்தே தேவைகள் அறிவாய்
உன்னால் முடியும் வரை முயன்று பார்ப்பாய்.
சில தடவைகள் தோற்பாய்.தலையை அடமானம்
வைத்துக் கூட நான் ஆசைப்பட்ட கனவுகளை
முள்ளிடம் மண்டியிட்டு பூவென விழிகளில் காட்டிடுவாய்.
பாமரனாய் நிலத்தினை உழவு செய்த போதிலும்
கூலிக்காரனாய் தோளில் மூடைகளை சுமந்த போதிலும்
தன் பிள்ளையின் ;விரலில் சூரியனும் சுடக் கூடாதென
கை பிடித்து ரசித்து பள்ளிக்கு கூட்டிச் சென்று தான்
காணாத முதலெழுத்தை உயிர் எழுத்தாய் கொடுக்கிறான்.
உடலின் வியர்வையை கூட துடைக்காமல் பிள்ளையின்
புன்னகைக்கு முதல் ரசிகனாகும் ஒவ்வொரு தந்தையும்
கடல் மணலில் பல தடவைகள் வீடுகள் கட்டுகிறேன்.
ஒவ்வொரு தடவையும் அலைகள் உடைத்து விட்டு போகிறது
ஆனாலும் என் முயற்சி சோர்வடையவில்லை.உன்னால் முடியும்
என்ற நம்பிக்கையோடு என் தந்தை நிழலாக அருகிலிருப்பதால்
காலச் சக்கரத்தின் சுழற்சியில் ஒவ்வொரு மனிதனும்
தான் தந்தைஎன்ற அந்தஸ்தை பெற்ற பின் தான்
தந்தையின் மகிமை உணர்கிறான்.அருகிலிருக்கும் போது
புரியாத அன்பு தூரமாகி போகையில் தான் வலிக்கிறது
ஒவ்வொரு தந்தையின் நிழலிலும் பிள்ளைகள் தான் காட்சிகள்