பட்டாம் பூச்சி

பட்டாம் பூச்சி பறக்குது-அது
பார்வைக் கழகாய் இருக்குது
தொட்டுப் பார்க்கத் துடிக்குது-மனம்
துரத்திப் பிடிக்க நினைக்குது.

வண்ணச் சிறகைக் கொண்டது-அது
வட்ட மடித்துப் பறக்குது
எண்ணம் தன்னில் இனிக்குது-நம்
எண்ணம் வானில் மிதக்குது.

மலரில் அமர்ந்து இருக்குது-ஒரு
மனமகிழ்வைக் கொடுக்குது
பலரும் பார்த்து மகிழ்ந்திட-அது
பறந்து பறந்து சுற்றுது.

கூட்டுப் புழுவாய் இருக்குது-பின்
கூடு உடைந்து பிறக்குது
பாட்டுப் பாடத் தோணுது-தினம்
பார்க்க மனது துடிக்குது.

பட்டு வண்ண சிறகினால் -அது
பறந்து பறந்து செல்லுது
எட்டி நின்று பார்ப்பினும்-நம்
இதயம் தன்னை ஈர்க்குது.

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (10-Jun-16, 8:51 pm)
Tanglish : pattaam poochi
பார்வை : 98

மேலே