தமிழ் மகள் அழகு
தமிழ் என்றால் நல்லமுது.
தமிழ் மகள் என்றால் தன்னழகு.
கடைகண்ணில் கருவிழியால்
கனல் சேர்த்து காதலினால்
காளையரைப் பார்ப்பதிலே
தமிழ் மகள்தான் பேரழகு.
விரகத்திலே குளித்தாலும்
வெட்கத்தில் முகம் கழுவி
சொர்க்கத்தைக் காட்டுகின்ற
தமிழ் மகள்தான் விண்ணழகு.
கரமெங்கும் வளைகுலுங்க
முகமெங்கும் நகைததும்ப
முந்தானை சரசரக்க நடக்கும்
தமிழ் மகள்தன் நடையழகு.
கண்டாங்கி சேலைகட்டி
கைபிடிக்க கொசுவம் வைத்து
பின்பக்கம் சொருகிவரும்
தமிழ் மகள்தன் உடையழகு.
ஒருகையில் நாத்தெடுத்து
மறுகையில் பிரித்து நட்டு
சேற்று வயலாடுகின்ற
தமிழ் மகள்தன் பணியழகு
மார்குடித்த குழந்தைதனை
தூளியிட்டு தூங்க வைக்க
ஆராட்டித் தாலாட்டும்
தமிழ் மகள்தன் பாட்டழகு.
வரவுக்குள் செலவு செய்த
வரம்பென்ற கோட்டைகட்டி
சீரோடு வாழுகின்ற அந்த
தமிழ் மகள்தன் வாழ்வழகு.
மாமுகி.