விடிந்திடும் விடியாத இரவும்

​தீண்டிய தென்றல் வேண்டியது என்னிடம் ​
​உதவிடும் எனக்கு உதவிடுவீர் நீங்களும்
தூசால் என்னை மாசாவதை தடுப்பீர்
புகையால் எனை பகையாளி ஆக்காதீர் !

பொழிகின்ற மழை வழிந்தது என்மேல்
வடிந்துக் கொண்டே கடிந்தது என்னிடம்
சேமியுங்கள் என்னை பலன் உங்களுக்கு
கடலில் கலப்பதால் இழப்பு எனக்கல்ல !

வினவியது வீதியில் உள்ள காகிதமொன்று
விளக்கித் தள்ளுவதை வீசுவதும் சரிதானா
தூய்மை என்பது அகத்திற்கும் புறத்திற்கும்
துப்புவதும் எறிவதும் ஊருக்கே கேடல்லவா !

கருகிடும் நிலையில் காய்ந்த செடியொன்று
உருகிடும் விதமாய் கோரியது விண்ணப்பம்
கடந்து செல்வோரை கரிசனமுடன் கூறியது
நீரூற்றி வளர்த்தால் பயனும் உங்களுக்கே !

சிதறுண்டு கிடந்தன மாளிகையின் வெளியே
கிழிந்த இலைகளும் மீதம்வைத்த உணவும்
எடுத்திட்ட ஏழைகள் பணிவுடன் கூறினர்
எறியாது அளித்தால் எமக்கதுவே விருந்து !

நமைச்சுற்றி நலத்திட்டங்கள் பல உண்டு
நினைத்துப் பார்த்தால் நனையும் இதயம் !
உள்ளவரை உதவிட்டால் உள்ளம் மகிழும்
உள்ளங்கள் நினைத்தால் உயிர்கள் வாழும் !

அறிவுரை அல்லாமல் அன்புரை இதுவே
பிறந்திட்ட உலகில் பிறரும் வாழ்ந்திட
முடிந்ததை செய்வோம் முடியும் வரை
விடிந்திடும் விடியாத இரவும் பலருக்கு !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (13-Jun-16, 9:01 am)
பார்வை : 492

மேலே