ஊரு குளிக்கும் ஒரு மழை

மேவி வரும் மேகம் கண்டு
நடை கூடி வரும் வரப்பில்
வயலுக்கு சென்று திரும்பும் பெண்டுகள்

இடி இடிக்கும்
மின்னல் வெட்டும்
ஆடும் மாடும் அனத்தும் ஓசையோடு
வெரசாக வீடு விரையும்
இளங்குமரி களின் கொலுசும் சேர்ந்திசை பாடும்

கூரை மேல காய வச்ச
சொளகு மிளகாயும்
மாடியில உலர வச்ச
உளுந்தும் துவரையும்
ஓடி ஓடி அள்ளி
குச்சும் மச்சும் வந்து சேரும்

மரு மருவாய்
வெடித்துக் கிடக்கும் ஊருணி குளமோ
மக்கா நாள்
மாடு நீந்தும் பேரணி ஆகும்

வண்ணான் காய வச்ச
உருப்படிகள்
உருண்டோடி பொதி ஆகும்
மழை நனைத்த கழுதைகளோ
மஞ்சள் நிறம் பொழியும்

அடி முளைக்குச்சியோடு பசுவும்
மடி முட்டி துள்ளி வரும் கன்றும்
தொழு வந்து சேரும்

ஊரு குளிக்கும் ஒரு மழை
அம்மியும் உரலும் கூட
மழைச் சிற்பி செதுக்கிய
அம்மணச் சிலை போல அழகுற நிற்கும்

தாழ்வாரங்களில் ஒழுகும் மழை
திண்ணை வேடிக்கைச் சாக்காய்
வெள்ளமெனப் பெருக்கெடுக்கும்
காமமோ காதலோ

வீதிகளில் விட்டெறிந்த
அத்தனையும் அடித்து செல்லும்
கங்கை போல அத்தனையும் சுத்தமாகும்

மாசக் கணக்கில் குளிக்காதவனும்
அழுக்கு தீர
ஆசைதீர குளிக்கும் மழையாகும்

ராப்போது வரும் மழையோ
ஊரு வந்த விருந்தாளியென
ராத்தங்கி அமுதூற்றி போகும்

தவளைகளின் கிக்கிரி பக்கிரி
கச்சேரி இரவெல்லாம் களை கட்டும்

கால மற கலப்பைக்கு வேலை வரும்
மழையோட ஒத்தகூட்டுக்கு சொல்லி வச்சு
குல தெய்வ நினப்போட
கை கூப்பி தூங்கி போவோம்
மழை என்று பேர் கொண்ட மாரியின் தாலாட்டோடு.

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (16-Jun-16, 10:43 am)
பார்வை : 143

மேலே