ஓரவிழிப் பார்வையிலே
ஓரவிழிப் பார்வையிலே உள்ளத்தை ஈர்த்தவளே
தாரகையாய் என்வானத் தடாகத்தில் பூத்தவளே
பூரணமாய் ஆட்கொண்ட பொன்னெழிலே கேளாயோ ?
ஈரமனத் தோடென்னை ஏறெடுத்துப் பாராயோ ?
ஏங்கவைக்கும் மெல்லிடையும் எடுப்பான மூக்கழகும்
தேங்கிநிற்கும் புன்னகையும் சிங்காரப் பிறைநுதலும்
பாங்கான செவ்விதழும் பால்வண்ண மேனியுமே
பூங்காற்றின் மென்சுகமாய் பூரிக்கச் செய்கிறதே !
வெள்ளியிலே கால்கொலுசு வெட்கத்தால் சிணுங்கிடுதே
தெள்ளுதமிழ் இன்சுவையாய் தேனிசையும் மீட்டிடுதே
பள்ளமதைத் தேடிவெள்ளம் பாய்ந்தோடிச் செல்கிறதே
கள்ளியுனைக் காணாமல் கண்ணிரண்டும் தவிக்கிறதே
எங்கிருந்த போதுமுனை என்நினைவு சுற்றிவரும்
செங்கரும்பாய்த் தித்திக்கும் சித்திரமாய் உளமுறையும்
வங்கணத்தி நீயம்மா வந்திடுவேன் கரம்பிடிக்க
தங்கமுனை உள்ளளவும் தாங்கிடுவேன் இதயத்தில் ...!!!