நட்பு சிறு கதை
கவிதா, மாலினி, பிரியா, அவர்களின் தோழி சித்ரா நால்வரும் சிறு வகுப்பிலிருந்தே ஒன்றாய் படித்து வரும் நல்ல தோழிகள். படிப்பிலும் நால்வரும் மோசமில்லை. அதிலும் சித்ரா நன்றாக படிக்கும் பெண். எல்லா பாடங்களிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறக்கூடியவள். தன் தோழிகளுக்கும் புரியாத பாடங்களை சொல்லித்தந்து அவர்களையும் மேலே கொண்டுவரச் செய்பவள்.
இப்போது அவர்கள் 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 9 ம் வகுப்பு செல்லவிருக்கிறார்கள். இன்று பள்ளிக்கு செல்லும் முதல் நாள் .
கவிதா, மாலினி, பிரியா மூவரும் அவர்கள் தோழி சித்ராவின் வீட்டுக்கு போனபோது அவள் வீடு பூட்டி இருந்தது. பக்கத்துக்கு வீட்டில் விசாரித்த போது சித்ரா அவள் அம்மாவுடன் வேலைக்கு போய்விட்டதாக சொன்னார்கள்.
அதை கேட்டதும் மூவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
' சித்ரா பள்ளிக்கு வராமல் வேலைக்கு செல்வதாவது?! '
குழப்பத்துடன் மூவரும் சித்ரா வேலை செய்யும் வீட்டை விசாரித்து சென்றபோது சித்ரா அங்கு வீடு துடைத்துக் கொண்டிருந்தாள். இவர்களைக் கண்டதும் வெளியே வந்தவளை மாலினி கேட்டாள்.
" என்னடி ஸ்கூலுக்கு வராம இங்க வந்திருக்கே..?!"
" நான் இனி ஸ்கூலுக்கு வரமாட்டேன்." கண்ணீருடன் சொன்ன சித்ராவை " ஏன் ?" - வினவினாள் கவிதா..
" உங்களுக்கே தெரியும். எங்கப்பாதான் ரொம்ப கஷ்டப்பட்டு வேலைக்கு போயி என்னை படிக்க வச்சார் . போன மாசம் அவர் ஆக்சிடெண்ட்செத்துப்போய்ட்டார். வந்த வருமானம் நின்னுருச்சு. எங்கம்மா படிக்காதவங்க. அவங்க வேலை பார்த்து , வர்ற சம்பளம் சாப்பாடுக்கே பத்தல. இதுல என் படிப்புக்கு எங்க போயி செலவு பண்ணறது.? என் தம்பி வேற இருக்கான். அதான் நானும் வேலைக்கு வந்துட்டேன்,. நாங்க ரெண்டு பெரும் வேலைக்கு போய்தான் அவனை படிக்கவைக்கணும். நான் இனி படிக்க வரமாட்டேன்டி. "
தேம்பி தேம்பி அழும் தோழியை தேற்றி விட்டு திரும்பினார்கள். மூவரும்.
-----
மறுநாள் காலை வேலைக்கு கிளம்பி வெளியே வந்த சித்ராவை வழி மறித்தனர் தோழிகள் மூவரும்.
" நீ வேலைக்கு போக வேண்டாம் .. ஸ்கூலுக்கு கிளம்பு முதல்ல. "
கவிதா அதட்டினாள்.
" என்னடி நான்தான் சொன்னனே .. பின்ன எப்டி... ? "
" நீ ஒண்ணும் சொல்லவேண்டாம். உன்னை பத்தி எங்க வீட்ல சொன்னோம். எங்க மூணு பேரு அப்பாவும் சேர்ந்து நீ படிக்க ஆகிற செலவை ஏத்துக்கறோம்னு சொல்லிருக்காங்க." அவளை தட்டி கொடுத்தபடி சொன்னாள் பிரியா.
சந்தோஷத்தில் கண் கலங்கினாள் சித்ரா.
" தேங்க்ஸ்டி. இந்த உதவிய நான் மறக்கவே மாட்டேன். "
" எதுக்குடி தாங்க்ஸ். நாம் பிரண்ட்ஸ்டி. எங்களுக்கு பாடம் சொல்லித் தந்தவ நீ. உனக்கு ஒரு கஷ்டம்னா நாங்க கேர் பண்ணாம போக முடியுமா ?"
" இருந்தாலும் என்னாலதானே உங்களுக்கு சிரமம். "
" இதுல என்ன சிரமம். எங்கப்பாக்களுக்கு நீயும் ஒரு பொண்ணுதான் . அவங்க மூணு பேரும் சேர்ந்து உனக்கு ஹெல்ப் பண்றதுல ஒண்ணும் நஷ்டமாகாது. நாங்க மட்டும் ஜாலியா ஸ்கூலுக்கு போகும்போது நீ வேலைக்கு போய் கஷ்டப்படறதை பார்த்துட்டு சும்மா இருக்க முடியுமா?.. கஷ்டமோ சந்தோசமோ ஷேர் பண்ணிக்கறது தானேடி ப்ரண்ட்ஷிப். "
நெகிழ்ந்து போய் மூவரையும் அணைத்துக்கொண்டாள் சித்ரா .
******