Pennin manam
நான் பிறந்து ,வளர்ந்ததெல்லாம் சேலம் .எல்லோரும் அனுபவிக்கும் அழகிய பள்ளிப் பருவத்தை இனிமையாகவே அனுபவித்தேன்.எனக்கு வாழ்வில் குறைகள் என்று எதையும் நான் அனுபவித்தது கிடையாது.என் பெற்றோர் அனுமதிக்க விடவில்லை என்ற கூற்றே சரியானதாக இருக்கும்.பள்ளிப் பருவம் முடியும் வரைக்குமே நான் அழகானவள் இல்லை என்ற எண்ணம் எனக்கு தோன்றியதில்லை.
கல்லூரி சேர்ந்தேன்.எனக்கு இரு தோழிகள் கிடைத்தார்கள் . என்னை போலவே குடும்ப சூழ்நிலை கொண்டவள்.பிறர் மனதை நோகடிக்க தெரியாதவள் ஒருத்தி .
மற்றொருவளோ நேர் எதிர் குணம் கொண்டவள் .அவளுடைய குடும்பம் மிகவும் செல்வாக்கு பெற்றது .துன்பம் என்றால் என்ன விலை என கேட்கும் ரகம்.
மூவரையும் நட்பு என்னும் பாலம் இணைத்தது முதலாம் வருடத்தில் .
இரண்டாம் வருடத்தில் என் மனதை உடைக்க தொடங்கியதோ அந்த தனியார் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி .
அணிந்த சுடிதார் இரண்டாம் முறை அணியும் போது நாட்களும் நகர்ந்து சென்று இரண்டாம் மாதத்தில் நிற்கும் உடன் பயிலும் தோழிகளுக்கு.ஆனால் எனக்கோ நாட்கள் நகரும் ஆனால் நிற்பதோ இரண்டாம் வாரத்தில் .அதுவே என் தோழி கூறி கவனித்து தெரிந்து கொண்ட விசயமே .
இயற்கையிலேயே பெண்களுக்கு இயல்பாக இருக்கும் அழகின் மீது மோகம் ,உடைகளின் மீது உண்டாகும் ஆசை எனக்கு இருந்ததில்லை.அதனாலேயே கவனிக்க தவறி இருப்பேனோ !
நிகழ்ச்சியை காண கோடி கனவுகளுடன் கல்லூரி பேருந்தில் வந்து இறங்கினேன்.நான் நிகழ்ச்சி என்பது எவ்வாறு இருக்கும் என்று அறிந்துகொண்டதே கல்லூரியில் தான் .நான் பயின்ற அரசு பள்ளியில் விழாக்கள் என்று ஏதும் நடந்ததில்லை.
நிகழ்ச்சியும் நன்றாக முடிந்தது.நானும் கண்டேன் .வீட்டிற்கு செல்லும் போது என் மனம் மிகவும் நொந்து போனது .ஏன் நான் காண ஆசையுடன் சென்று ,ரசித்து வந்த நிகழ்ச்சியை நினைத்து மகிழ்வடைய வேண்டிய மனது நொந்தது எதனால் ? அன்று நான் அணிந்த சுடிதாரை வசை பாடியதலே நிகழ்ந்தது .அதுவே என்னை பாதித்த முதல் விஷயம் .
என் பணக்கார தோழி இயற்கையிலேயே மிகவும் அழகு .அவளுடைய வெள்ளை கைகளை ஆராய்ந்தே பொழுதை போக்குவாள்.அவளுடைய அழகை விமர்சிக்காத நாளே இல்லை .
மறைமுகமாக என்னை அழகி இல்லை என கூறிக் கொண்டிருந்தவள் நேரடியாக என் முன்னாலேயே என் வெளித் தோற்றத்தை எள்ளல் பாட ஆரமித்தால் .
தேர்வின் போது நான் மாற்றிய நெற்றிபொட்டை புகழ்ந்து கூறிய உடன் அன்று அதை நினைத்தே ஆனந்த கடலில் மூழ்கியது என் மனது. அவளுடைய கேலி,கிண்டல் களிலிருந்து தப்பவே நான் கல்லூரி முடியும்வரை சாந்து பொட்டை இடவில்லை.
என்னை மிகவும் பாதித்த நிகழ்ச்சி இறுதி ஆண்டில் நடந்தது.கல்லூரியிலிருந்து மூன்று நாட்கள் சுற்றுப் பயணம் சென்றோம்.கோவிலுக்குள் நுழைகையில் எங்களை கடந்து சென்ற இரு இளைஞர்கள் ,"வெள்ள பண்ணி டா மச்சான் "என கேலி செய்ததை இரு நாட்கள் எங்கள் இருவர் காதுகளிலும் ரத்தம் வரும் வரை புலம்பியே தள்ளி விட்டால்.
எனக்கு உள்ளூர தோன்றிய மகிழ்ச்சியை நான் வெளிகாட்டவில்லை.
நேர்முக தேர்விற்கு சென்று வந்த உடன் என் இரு தோழிகளிடமும் அங்கு நடந்ததை கூறி கொண்டிருக்கும்போது
என்னை இரு இளைஞர்கள் ரசித்தார்கள் என்று கூறினேன்.
இவ்ளோ கேவலமா ஒரு பொண்ணு இருக்குமான்னு பாத்துருபானுங்க ,உன்ன யார் ரசிக்க போறா என்று அவள் கூறிய வார்த்தை என் இதயத்தை சுக்கு நூறாய் கிழித்தது .அன்று இரவு
வீட்டில் எல்லாரும் தூங்கியதும் ,என் மன வேதனையை போக்க என் தலையணை ஈரமானது .
எனக்கு அழுகை வந்தால் அடக்கி கொண்டு முழுவதையும் இரவில் அணைவரும் தூங்கியதும் கொட்டும் ஒரே இடம் என் தலையணை மட்டுமே ,கதறி அழும் வசதி என் வீட்டில் கிடையாது.சிறு தேம்பல் வந்தாலும் உடனே கேட்டுவிடும் என் அருகில் தூங்குபவர்களுக்கு.வீணாக அவர்களுக்கு என் மனக் கவலையை பகிர்ந்து கொள்ள விருப்பம் இல்லை எனக்கு .அன்று இரவு ஏகப்பட்ட கற்பனைகள் என் மனதில் ,என் பெற்றோர் ஏன் என்னை வெள்ளையாக பிறக்கவில்லை ?,எனக்கு அதிக உடைகளை வாங்கி தராதது ஏன் ?எல்லோரை போல வெளியே அழைத்து செல்லாதது ஏன் ?இப்படியெல்லாம் துளி கூட நான் யோசிக்கவில்லை .என் குடும்ப சூழ்நிலை நான் நன்றாக அறிந்ததே .மாற்றாக என்னை பற்றி அறிந்த தோழியே என்னை விமர்சிப்பது எதனால் ,அவளின் சொற்கள் என் மனதை நோகடிப்பது அவள் அறிவாளா ?என்றே யோசித்தேன் .
அதற்கு அடுத்து வந்த சனிக்கிழமை ,என்னுடய குடும்பத்தாருடன் நேரத்தை செலவிட்டேன்.அவர்களுடன் பேசி ,பொழுதை கழித்த உடன் என் மன வேதனைகள் அனைத்தும் ஒண்ணுமே இல்லாதது போல் ஆயிற்று.
தன்னுடைய தன் மானத்தை விற்று கடன் வாங்கி ,உறவினர்கள் படிக்க வைக்க வேண்டாம் என்று அறிவுரை கூறினாலும் ,என் பெண் பிள்ளைகள் மூவரையும் நான் படிக்க வைத்து நல்ல நிலைமைக்கு கொண்டு வருவேன் என்று கூறி இதுநாள் வரை ,படிக்க வைத்துகொண்டிருக்கும் அப்பா ,
வீட்டின் நிலைமையும் ,எங்களின் கல்விக்காகவும் பணம் சேர்க்க வேண்டும் என்பதற்காக மூன்று வேலை உணவைத் தவிர வேறெந்த ,சலுகையும் எதிர்பார்க்காமல் வாழும் அன்னை ,
இவர்களை விடவா என் மனம் நொந்துவிட்டது.
மறுநாள் காலை கல்லூரி கிளம்பும்போது ,அப்பா ,அம்மாவிடம் ரகசியமாக சொல்லி கொண்டிருந்தார் என் அப்பா :காலேஜ் ல ரெண்டாவது மார்க்காம் நம்ம பொண்ணு .
அம்மா :அவ படிச்சி வேலை ஒண்ணு கிடச்சா போதுமே .
நான் : அம்மா காலேஜ் போய்ட்டு வரேன்.
வாசல் படியை தாண்டும் போது என் மனது தெளிவாய் இருந்தது.