பாலினப் பகுப்பில் யாம் புளிமா திருநங்கையரின் குமுறல்

பாலினப் பகுப்பில் யாம் புளிமா .....!
(திருநங்கையரின் குமுறல் )

ஆவிகளுக்குள் வெதும்பிய ஆத்மா
புவிக்கோளுக்குள் ததும்பிய மேக்மா
பூவைக்குள் பதுங்கிய அரிமா
பாலினப் பகுப்பில் யாம் புளிமா

ஏழு ஸ்வரங்களின் நீட்சி
ஆட்சியானது புது ராகம்
பாலின உயிர்செல் மீட்சி
தாழ்ச்சியானது எம் தேகம்

உயிர் உடல் மண்டலத்தில் குறையில்லை
உணர் உரு மாற்றத்தில் முறையில்லை
கலங்கி கள்ளமாய் அதை மறைத்தோம்
ஒதுங்கி உள்ளத்தால் ஊனமுற்றோம்

கருவறையில் சுமந்தவர்க்கே அங்கதமானோம்
குருதியில் குறிஅறுத்தே மங்கையாரானோம்
குலவழக்காய் திருமாங்கல்யம் சூடி
குமுறியழுது அன்றே அமங்கலி ஆனோம்

இணங்கி வாழ்ந்திட பேரளி கொண்டு
பிணங்கித் திரிந்து போராளியானோம்
ஆவினத்திற்கும் கீழாய் உழன்று
பாலுணர் புதிரால் அவிசாரியானோம்

வாழ்வாதாரமாய் மறித்துக் கையேந்தினோம்
சேதாரமாய் போனது எம் சுயமரியாதை
ஆதாரமற்று அவலமுற்ற ஆதங்கம்
அதர்மத்தை கவ்வும் விகற்பமானோம்

ஆதிஅந்தமான இறை அர்த்தநாரியென்று
வாதிக்க சாத்திர சரித்திரம் உண்டு
ஆதிக்க மனிதன் எம்முணர் மதித்தால்
சாதிக்க எமக்கும் வழியுண்டு!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (20-Jun-16, 3:11 pm)
பார்வை : 60

மேலே