அடிமனதின் ஆதங்கம்

அடிமனதின் ஆதங்கம்.......

விடியல் இல்லா இரவு......
விடாது பொழிந்த சாரல் மழை....
வழித் துணையாய் என்னுடன்
வரமாய் நீ கை கோர்த்து.....

மடல்விரித்த மலர்கள் மணம்
மண்வாசத்துடன் குழைந்து......
மாயக் கண்ணனின் குழல் கானமாய்
மயக்கத்தில் பாடும் குயிலின் ஓசை......

அந்திக் காற்றின் அசட்டை வருடல்
அறிந்தும் அறியாது உன் சேட்டை உரசல்
ஆசை நெஞ்சில் அரும்பிவிட
அகில் நேசத்தின் வாசம் நாசியில்.......

இடைவெளித் தூர்ந்து
இடைப் பற்றிய உன் கரம்.....
இதமான தவிப்புக் கதகதப்பு
இதயத்தில் இன்பப் படபடப்பு.....

நீண்ட நெடும்சாலை வழி
காட்சிப்பிழை போல் தொடராய்.....
ஆயுள் முழுதும் இப்பயணம் தொடர
அடி மனதில் ஆதங்கமாய்...

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை .அமுதா (20-Jun-16, 3:14 pm)
பார்வை : 107

மேலே