என்ன பிறப்பு இது
என்ன பிறப்பு இது?
இரை தேடச்சென்ற இடத்தில் தற்செயலாக இரு ஓணான்கள் சந்தித்துக் கொண்டன.இரண்டும் உலக விஷயங்கள் குறித்தும், தங்களுடைய வாழ்க்கை பற்றியும் பேசிக் கொண்டிருந்தன. “என்ன பிறப்பு இது? ஏதோ சாப்பிடுகிறோம்,சுற்றுகிறோம், தூங்குகிறோம். இதெல்லாம் ஒரு வாழ்வா? நமக்கென்று ஒரு பெயர் உண்டா? மரியாதை உண்டா? இல்லை நம்மைப்பற்றி யாராவது பெருமையாகப் பேசுகிறார்களா? ஒன்றுமே கிடையாது. புள்ளிமானாகப் பிறந்திருந்தாலாவது ராஜாவின் தோட்டத்தில் சுற்றித் திரியலாம். நம்மை நன்கு கவனித்துக் கொள்வார்கள்.
வேளாவேளைக்கு உணவு கிடைக்கும். இப்படி காடு முழுக்க சுற்றித்திரிய வேண்டிய அவசியமில்லை” என அலுத்துக் கொண்டது ஒரு ஓணான். இப்படி அது பேசிக்கொண்டிருக்கும்போதே, இரண்டு வேட்டை நாய்கள் ஒரு புள்ளிமானை துரத்திக் கொண்டு வந்தன. உயிர் பிழைக்கும் ஆசையில் மிக வேகமாக ஓடிக் கொண்டிருந்தது புள்ளிமான். இருந்தாலும் வேட்டை நாய்கள் அதைப் பிடித்து விட்டன. தங்கள் கண் முன்னாலேயே புள்ளிமான் வேட்டையாடப்படுவதை இரண்டு ஓணான்களும் பார்த்தபடி இருந்தன. வேட்டை நாய்கள் சென்றபிறகு, அதுவரை பொறுமையாக இருந்த மற்றொரு ஓணான் பேசத் தொடங்கியது. “இங்கு நடந்ததைப் பார்த்தாயா? எல்லா உயிர்களுக்குமே ஆபத்து இருக்கிறது. நாம்தான் அதிலிருந்து கவனமாக நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும். புள்ளிமானின் நிலையைப் பார்த்தாவது நீ திருந்துவாய் என நினைக்கிறேன்” என்றது. ஓணானும் அதைப் புரிந்து கொண்டது போல தலையை ஆட்டியது. கதையின் நீதி: எப்போதுமே இருப்பதைக் கொண்டு திருப்தியடையக் கற்றுக் கொள்ள வேண்டும். -திருப்தி ***
thanks malaimalar