சிறுகதை ‘பால்’ திரிந்த வேளை

சிறுகதை: ‘பால்’ திரிந்த வேளை!
vidhai2virutcham
“சும்மாவா சொன்னாங்க ஆண அடிச்சு வளர்க்கணும்; பொண்ண புடிச்சு வளர்க்கணும்னு, ஒரு குடும்பம் நடத்துற பயலா இவன்? மணி ஆறாகுது.. இன்னும் தூங்கிட்டு கெடக்கான்…” மாமியார் மரகதம்மாள் குரல் ஊடுருவ திடுக்கிட்டு எழுந்தான் மூர்த்தி.

அய்யய்யோ இவன வேற ஸ்கூலுக்கு கௌப்பணும்.. சாப்பாடு வேற கட்டணும்.. தலைவலின்னு நேத்து போட்ட மாத்திரை ஆளையே அசத்திடுச்சு… மனதில் பதட்டத்தின் ரேகைகள் கூட “டேய் எழுந்திரு, எழுந்திரு” மகன் ராகுலை எழுப்ப கண்களை திறக்காமலே எழுந்தவன், அந்த இடத்திலே ஒண்ணுக்கு போக டவுசரைத் தூக்க.. “டேய்.. டேய்.. மாடு கண்ணத் தொறயேன்.. ” என்று கத்தியபடி.. பாத்ரூமுக்குள் அவனைத் தள்ளிக் கொண்டு போய் நிறுத்தினான்.
மனைவி முகத்தைப் பார்த்தே சரியில்லை என்று புரிந்து கொண்ட மூர்த்தி அவசர அவசரமாக கேஸ் அடுப்பைப் பற்றவைத்து பால் பாத்திரத்தை வைத்தான்.

ஆமாம்.. இவன் டீயப் போடுறதுக்குள்ள.. நான் ஆபீசுக்கே போய் சேர்ந்துடுவேன். வந்து வாச்சுது பாரு எனக்குன்னு.. ஒரு குடும்பப் பய காலைல எழுந்தமா, வேலையப் பாத்தமான்னு இருக்கணும்.. பொண்டாட்டில்ல வந்து எழுப்ப வேண்டியிருக்கு.
தோ.. ரெடியாயிடுச்சு.. இடைப்பட்ட நேரத்தில் அரையும் குறையுமாக பல் துலக்கியபடி.. ராகுலைத் தேட, அவன் பாத்ரூமிலேயே நின்று கொண்டிருந்தான். எருமை மாடு.. ஒண்ணுக்கு போக சொன்னா அங்கேயே நின்னுக்கிட்டு கெடக்கிறியே.. வா இங்க.. நீங்க கொஞ்சம் அவன் முகத்த கழுவக் கூடாதா? மனைவி சுதாவைப் பார்த்து கேட்டபடி ராகுலை இழுத்து வைத்து அவன் தேம்பத் தேம்ப முகத்தை பாத்திரம் கழுவுவது போல சலிப்புடன் கழுவி எடுத்தான்.

நீ சீக்கிரம் எழுந்து வேலையப் பாக்காம.. கோவம் வேற வருதா.. வேலைக்கு லாயக்கில்ல. வாய்தான் நீளுது.. ஆயி, அப்பன் வளர்ப்பு அப்படி.. சுதா தலைவாரிக் கொண்டே பொரிந்து தள்ளினாள்.
மரகதம்மாளும் சேர்ந்து கொண்டாள்.. எல்லாம் உன் அவசரம். வேற பையன் பாக்கலாம்னா பாத்தவுடனேயே புடிச்சு போச்சுன்ன.. உங்க அப்பாவும் பாய்ஞ்சுகிட்டு முடிச்சாரு ! அந்த வைத்தீஸ்வரன் கோயில் சோசியன் அப்பவே சொன்னான்.. இது கேட்ட நட்சத்திரம்.. ஒத்து வராதுன்னு. அதான் கேட்டவங்கள அடிச்சது.. அவுரு போய் சேர்ந்துட்டாரு .. ! இப்ப குத்துது கொடையுதுன்னா..
எதிர்த்துப் பேசினால் வம்பு அதிகமாகும் என்பதைப் புரிந்து கொண்ட மூர்த்தி.. மாமியாரை ஒரு திராவகப்பார்வை மட்டும் பார்த்துவிட்டு திரும்புவதற்குள் அவன் மனசாட்சியைப் போலவே சோறும் பொங்கியது. அவசர அவசரமாக அடுப்பை சின்னது செய்துவிட்டு.. டீ ஆற்றி எடுத்து வந்தான்.. இந்தாங்க டீ..

மணி என்னாவுது.. உன் டீய குடிச்சிகிட்டு உட்கார்ந்தா அங்க வேலை போயிடும்.. மொதல்ல டிபனை கொடு.. கௌம்புறேன்… மனைவி அரக்க பறக்கடிக்க.. வேகமாக மதிய உணவைக் கட்டி டிபன் பாக்சு அடியை கைலி தலைப்பால் துடைத்துக் கொடுத்தான்… இட்லி ரெண்டாவது சாப்புட்டு போங்க.. கெஞ்சினான்.. திருப்திதான.. நீயே தின்னுட்டு நிம்மதியா தூங்கு.. மேற்கொண்டு பேச நேரம் அனுமதிக்காததால் வசவியபடியே கிளம்பிப் போனாள் சுதா.
சே ஒருநாள் லேட்டா எழுந்திருச்சது எவ்வளவு தப்பா போச்சு.. என்று தன்னைத்தானே நொந்தபடி.. மகனுக்கு அவசர அவசரமாக இட்லியை வாயில் திணித்தபடி.. மாமி ராகுலை ஸ்கூல்ல விட்டு வர்றீங்களா.. நான் தண்ணி தூக்கியாந்துர்றேன்.. மூர்த்தியின் வேண்டுகோளைக் கேட்டு ஆத்திரமானாள் மரகதம்மாள்.
“என்னமோ நடக்குதாம் கதையில.. எலி ரவிக்கை கேட்டுதாம் சபையிலன்னு.. நானே மவ சாப்பிடாம போயிட்டாளேன்னு வேதனையில இருக்கேன். இந்த கால வெய்யில்ல நம்பாள முடியாதுப்பா.. இதுவும் வேற ரோட்ல எங்கிட்ட அடங்காது..” என்று வெடுக்கென மறுத்தாள்.
வேறு வழியில்லாமல் மகனை ஸ்கூலுக்கு கொண்டுபோய் விட்டுவிட்டு தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்கும் நினைப்போடு ஓடிவந்தவனை, என்ன மூர்த்தி நேத்து சொர்க்கம் பாத்தியா.. என்று எதிர்வீட்டு மணி ஆரம்பிக்க.. நீ வேற நம்ப பாடே நரகமா இருக்கு! ஒரு நாள் லேட்டா எழுந்திருச்சதுக்கு இன்னிக்கு நான் பட்டபாடு எனக்குதான் தெரியும். இந்தக் கெழம் வேற மவளை நிண்டி விடுது.
என் மாமியார் பரவாயில்ல.. கூடமாட வேல பாக்குது. மவள் புரியாம பேசுனா கூட, அவன் பொழுதுக்கும் வேல செய்யுறான்.. தண்ணி கூட எழுந்திருச்சு குடிக்கக் கூடாதான்னு மவளையே கண்டிக்கும். என் வீட்ல இப்படி.. உனக்கு வாச்சது அப்படி.. என்னா பண்றது. ஆணா பொறந்தா எல்லாத்தையும் அனுபவிச்சுதான் ஆகணும்..

சரி வாரேன்.. மலையாய் குவிந்திருக்கும் துணியும், சமைத்த பாத்திரங்களும் கண்ணில் நிழலாட.. தண்ணீர் குடத்தின் எடை அதை விட குறைவானது போல வேகமாக வந்தான் மூர்த்தி.. களைப்பும், வறட்சியும் ஒருசேர, காலையில் மனைவிக்கு போட்டு அவள் குடிக்காமல் வைத்துச் சென்ற தேநீர் கண்ணில் பட்டது. ஆறிப்போய் அந்நியமாக இருந்த தேநீரை ஆதரவாக ஊற்றிக் கொண்டான். துணிகளை அலசி எடுத்து நிமிரும்போது இடுப்பு தனியாகக் கழண்டு விழுவது போல் வலி பின்னியெடுத்தது. தஸ், புஸ் என்று நாவில் குழறிய காற்றின் வழி ‘அம்மா’ என்று தனக்குத்தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.
மதியம் சாப்பிடவே மணி இரண்டரை ஆனது. சற்று கண்ணயர்ந்த வேளையில் “கேஸ்.. சார் கேஸ்” என்று குரல் வர வெடுக்கென விழித்துக் கொண்ட மூர்த்தி “வர்றேன்” என்றாவாறு கூடத்தில் படுத்திருந்த மாமியாரை லாவகமாகக் கடந்து போனான். காஸ் சிலிண்டரை வாங்கி வைத்த கையோடு கடிகாரத்தைப் பார்த்தான்.. மணி மூணரை. இனி எங்கே படுப்பது.. போய் மகனை பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்து வர வேண்டும். மூர்த்தி வேகமாகக் கிளம்பினான்.
“என்ன ராகுலப்பா, ரேசன்ல இந்த அம்பது ரூவா சாமான்லாம் வாங்கிட்டீங்களா?” பையனை அழைத்துப்போக வந்திருந்த ராஜன் விசாரிக்க, மூர்த்தி சலிப்போடு “எங்க வாங்கறது.. மொதல் வாரம் போனா ‘அப்புறம் வா’ங்குறான். கடைசி வாரம் போனா இல்லேங்குறான். நமக்கிருக்குற வேலைல சரியா போக முடியாது.. இன்னிக்கு கூட போகலாம்னா.. மிளகா, மல்லி வேற காய வச்சிருக்கேன். கொழம்புப் பொடியே இல்ல.. அத மொதல்ல அரைச்சிட்டு வரணும்.. இன்னொரு பையனிடம் பேசிக்கொண்டே விளையாடிக்கொண்டு வந்த ராகுலைக் கண்டதும் “டேய் இங்க வாடா..” அவசரமாய் கையைப் பிடித்து இழுத்தான். கண்கள் பையன் மேல் இருந்தாலும் மனம் அடுத்த வேலையில் மூழ்கியிருந்தது.

மிளகாய்த்தூள் அரைத்து வருவதற்குள் காத்திருப்பும் புழுக்கமும் இன்னொருமுறை குளிக்கலாம் போலிருந்தது.. இந்தக் களைப்புக்கு யாராவது ஒரு காபியோடு வந்து கையில் கொடுத்தால் அப்படியே கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் போல உடல் ஏங்கியது.. “காபியா போட்டிருக்க.. மணி ஆறாகுதேன்னு கேட்டேன்..” மாமியார் குரல், நினைப்பில் தீ மூட்ட.. அடுப்படிக்கு நகர்ந்தான்.
ஏய் காப்பி குடிச்சிட்டு.. புக்க எடுத்து வச்சு படி.. நான் காயற துணிய எடுத்துட்டு வந்துடறேன்.. இந்தாங்க.. மாமியாருக்கு காபி டம்ளரை தந்துவிட்டு அடுத்த வேலைக்கு நகர்ந்தான் மூர்த்தி.
மூர்த்தி ! ஏம்பா ராத்திரிக்கு என்ன செய்யப் போற!.. சாப்பாடா? டிபனா?.. இடுப்பொடிய வேலை பார்த்துவிட்டு சற்றுநேரம் வேலைகளை மறந்து தலைசீவிக் கொண்டிருந்தவனை மரகதம்மாளின் பேச்சு எரிச்சலூட்டியது. பீறிட்டுவந்த கோபத்தை அடக்கிக் கொண்டவன் நையாண்டி தோரணையில் ஏன்! என்ன வேணும் உங்களுக்கு? என்று நேர்படவே கேட்டான்.
எனக்கு ஒண்ணுமில்ல.. பொழுதுக்கும் சோறு, சோறுன்னு மூஞ்சில அடிச்சமாதிரி இருக்கும்பா உன் வீட்டுக்காரி.. காலைலயே வேற மொணவிகிட்டு போனா.. அவளுக்கு பூரின்னா புடிக்கும்.. பேசாம, பூரியே போட்டுறேன்..

அவளுக்கு புடிக்குமோ, உனக்கு புடிக்குமோ! என்று வாய்க்குள்ளேயே முணகிக் கொண்டவன்.. வெங்காயத்தையும் அரிவாள்மனையையும் எரிச்சலோடு கொண்டுவந்து வைத்தான். “மர கழண்டு போச்சு.. சே!” என்று மூர்த்தி சலித்துக்கூற.. வெடுக்கென ஆனந்தம் டி.வி. தொடரில் மூழ்கியிருந்த மாமியார் திரும்பினாள். சுதாரித்துக் கொண்ட மூர்த்தி “வாங்கி ஒரு மாசம் கூட ஆகல தேங்கா துருவி கழண்டுகிச்சு..!” என்றான் மாமியாரைப் பார்த்தவாறு.. தேங்காய் துருவியையும், மருமகன் கண்களையும் மாற்றி மாற்றி பார்த்தபடி மரகதம்மாள் சந்தேகப் பார்வையுடன் டி.வி. பக்கம் முகத்தைத் திருப்பியபடியே “வாங்கறப்பவே பாத்து வாங்கலேன்னா இப்படித்தான்” என்றாள் தன் பங்குக்கு. “பாக்குறப்ப எல்லாம் நல்லாத்தான் தெரியுது.. பழகப் பழகத்தானே தெரியுது.. சுத்த வேஸ்ட்டுன்னு..” மூர்த்தியும் விடுவதாயில்லை. மரகதம்மாளும் ஏதோ கூற வாயெடுக்க.. அலுவலகப் பையைக் கழட்டிய களைப்புடன்.. சுதா வீட்டிற்குள் நுழைந்தாள்.

மனைவி வந்ததும் அரிவாள்மனையைப் படுக்க வைத்தபடி ஒரு டம்ளர் தண்ணீரோடு பின் தொடர்ந்தான் மூர்த்தி.. என்ன வெங்காயம் வாட வருது.. அதே கையோட தண்ணி மொண்டியா.. கைய கழுவிட்டு வேற எடு.. அய்யோ!.. என்று தலையில் தட்டிக் கொண்டாள்.
அப்பாடா இந்த பஸ்ல வர்றதுக்குள்ள உடம்பே விண்டு போவுது.. என்று அவள் முடிப்பதற்குள் கூடத்தில் டி.வி.க்கு நேராக ஈஸி சேரை தயாராக வைத்தான் மூர்த்தி. டி.வி.யின் ஆனந்தத்தில் அவளும் பங்கெடுத்துக் கொண்டாள். பார்த்துக் கொண்டே இருந்தவளுக்கு கண் எரிச்சல் தந்தது. சுற்றும் முற்றும் பார்த்தவள் “அறிவில்ல இப்பதான் அலுத்துப் போயி வந்து உட்கார்ந்துருக்கேன்.. பக்கத்துல உக்காந்து வெங்காயம் நறுக்குறியே.. கண் எரியுதுல்ல.. இதைக் கூட சொல்லணுமா.. எடு .. அந்தப் பக்கம்.. போ உள்ளாற.. சத்தமாகக் கத்தினாள்.

அதானா.. நான் கூட ரொம்ப நேரம் டி.வி. பாக்குறோமே, அதான் கண் எரியுதோன்னு பார்த்தேன்.. ஏம்பா அந்த வெங்காயத்த தண்ணியில போட்டு நறுக்கக் கூடாது.. மாமியாரும் சேர்ந்து கொண்டாள். டி.வி. பார்க்கும்போது குறுக்கே மிக்சி போட்டால் வேறு மனைவிக்கு கோபம் வரும் என்பது தெரிந்ததால், துருவியவைகளை அரைக்காமல், முதலில் தயார்செய்து வைத்திருந்த பூரிமாவை வட்டவட்டமாக பூரிக்கட்டையால் தேய்க்கத் தொடங்கினான். கூடத்தில் உட்கார்ந்தாலாவது கொஞ்சம் காற்றோட்டம் வாய்த்திருக்கும்.. ஆறுக்கு மூணு அடுப்படியில் புழுங்கித் தொலைத்தது, முதுகுத்தண்டில் வலி ஊர்ந்தது. அவனைப் பார்த்து பரிதாபப்பட்ட மாதிரி பூரிமாவு அவன் இழுத்த இழுப்புக்கு கொஞ்சம் இணங்கி வந்தது.

என்ன ரெடியா? மொதல்ல அவனுக்கு வையி.. மகனுக்கு கேட்கும் சாக்கில் அடுப்படி நிலவரத்தை ஆராய்ந்தாள் சுதா. தோ குருமா.. ரெடியாயிடுச்சு.. ராகுல் தட்டில் ஆவி பறந்தது. பூரியும், குருமாவும் அப்படியே எனக்கும் வச்சிடேன்?.. தோ எடுத்துட்டு வர்றேன்.. மனைவிக்கு கருகாமல் எடுக்க வேண்டுமே என்ற பயத்துடன் கொதிக்கும் எண்ணெயிடம் இரக்கம் வேண்டியவனைப் போல பார்த்தான் மூர்த்தி.
இந்தாங்க.. சுதாவுக்கு பூரி வைத்த வேகத்தில் அடுப்படிக்கு ஓடினான். “தண்ணி உங்க அப்பன் வைப்பானா? தண்ணி வக்கிற பழக்கமே கிடையாது.. வளர்த்திருக்காங்க பாரு.. சுதா முன்பு பதட்டத்துடன் வந்து டம்ளரை வைத்தான். சுடச்சுட நாலு பூரியை அமைதியாக விழுங்கியவள், “ஊம் இது என்ன குருமாவா சரவண பவன்ல வெக்கறானே அது எப்படி இருக்கு? அவன் மட்டும் என்ன வானத்துலேர்ந்து வர்ற பொருளை வச்சா செய்யுறான்.. உனக்குந்தான் எல்லாப் பொருளும் வாங்கித் தர்றேன்.. ஒரு டேஸ்ட் இல்ல. நீ எல்லாம் டிபனுக்கு லாயக்கில்ல… வேஸ்டு… பேசாம சோறு பொங்க வேண்டியதுதான்.. அதுக்குத்தான் லாயக்கு.. எங்க சோறு இருக்கா? அதையாவது தின்னு தொலைக்கலாம்.. சுதாவின் கோபம் பூரி போடுகையில் கையில் தெறித்த எண்ணெயை விட மூர்த்தியின் மேல் தனலாக விழுந்தது.

அய்ந்தாறு பூரி தின்ற பிறகு வழக்கம்போல அவள் இப்படி ஆரம்பிப்பாள் என்று தெரிந்து, ஏற்கெனவே அவன் கொஞ்சம் சோறு செய்திருந்தது நல்லதாகிப் போனது. ஏதோ வேண்டா வெறுப்பாகச் சாப்பிட்டதைப் போல முழுச் சோற்றையும் சாப்பிட்டாள் சுதா.. சாப்பிட்டு முடித்து அடுத்து வெற்றிலை பாக்கைப் போடுபவள் போல.. டி.வி.க்கு நேராகப் போய் ‘அரசி’ ராதிகாவின் வசனத்திற்கு ஏற்ற மாதிரி வாயை அசைத்துக் கொண்டு கிடந்தாள். ஒரு இடத்தில் ராதிகா தேசப்பற்றோடு வசனம் பேச தன்னையறியாமல் கொட்டாவி விட்டபடி படுக்கைக்குப் போனாள்.

மாமியாரும், மகனும் கூட படுத்துவிட்ட கூடத்தில் ‘அரசி ராதிகா’ தனியாகப் பேசிக் கொண்டிருந்தாள். டி.வி.யைக் கூட யாரும் அணைக்கவில்லை. அடுப்படியில் எந்த சுவாரசியமும் இல்லாமல் ஒரு பாத்திரம் விடாமல் துலக்கி வைத்தான் மூர்த்தி.. பொத்தென்று விழுந்து படுத்தால் தேவலாம் என்று நினைத்தான். மனைவிக்கு கால் அமுக்காவிடில் அதன் பாதிப்பு மறுநாள் பேச்சில் வரும் என்பதால்.. சுதாவின் கால்களைப் பக்குவமாகப் பிடித்துவிட்டான். இதமாக இருக்க.. அப்பா அப்படித்தான் இந்தக் காலையும் புடி.. என்று புரண்டு படுத்தாள் சுதா.. தூக்கத்தை விடுத்து அமுக்கிவிடச் சொல்வதிலேயே குறியாக இருந்தாள் .. ஏய்! அதே இடத்துலேயே அமுக்குறீயே.. ஒருநாள் சொன்னா தெரியாதா.. இந்தப் பாதத்தைப் புடியேன்.. தானா அறிவா யோசிக்க மாட்டியா!.. கண்களைப் பிசைந்த தூக்கத்தைக் கலைத்தபடி அவள் சொன்னபடியெல்லாம் கைகளை அழுந்தினான்.
அப்படித்தான்.. ரெண்டு நாளா அந்தப் பையன் டவுசர்ல பட்டன் இல்லாம.. ஊக்க மாட்டி வுடறியே ஒழிய.. சும்மா இருக்குற நேரத்துல அதை தச்சி வைக்கக் கூடாது.. இல்ல டெய்லர்கிட்ட தரக்கூடாது.. எல்லாம் உனக்கு சொல்லணும்.. என்ன மூளையோ.. சுதா பொரிந்து தள்ள.. அழுகை பீறிட்டது மூர்த்திக்கு.. காலைலேர்ந்து படுக்குற வரைக்கும் உடம்பு நோவுது.. ஒரு நேரம் ஓய்வில்ல.. ஆள் வைக்காமல் அவ்ளோ வேலை பாக்குறேன்.. உங்களுக்கு இரக்கமே இல்லையா.. சும்மா இருக்குறப்பன்னு சொல்றீங்களே.. எப்போ சும்மா இருக்குறேன் சொல்லுங்க.. மறுமொழி பேசியதுதான் தாமதம், சுதாவுக்கு சூடு ஏறியது. “ஓகோ! அப்ப நான்தான் சும்மா இருந்தனா.. இதுல எனக்கு இரக்கம் வேற இல்லாம வேல வாங்குறனா!.. திமிரு அதிகந்தான் ஆயிடுச்சு.. வாய்க்கொழுப்ப கொறச்சா சரியா போயிடும்.. விடு கால..” என்று கடுப்போடு ஓங்கி ஒரு உதை உதைத்தாள்.

அந்த உதை நெஞ்சில் நங்கென்று விழ.. நிலை குலைந்த மூர்த்தி ‘ஆ’ என்று அலறியே விட்டான்.
மூர்த்தியின் அலறலைக் கேட்டு பதட்டத்துடன் கணவன் அருகே வந்தாள் சுதா. கையில் கொண்டு வந்த பால் டம்ளரை தள்ளி வைத்துவிட்டு, கணவனின் தோளை உலுக்கியபடி என்னங்க.. என்னங்க.. என்று எழுப்பினாள். வெடுக்கென்று தூக்கத்தில் இருந்து விழித்த மூர்த்தி ஒருவாறு பிரமை பிடித்தவன் போல மனைவியை உற்றுப் பார்த்தான். கண்களைக் கசக்கியபடி மீண்டும் இமைகளை உதறி ஏதோ எல்லாம் தலைகீழாய் மாறிப்போனது போல அதிர்ச்சியடைந்தவன் சுற்றுமுற்றும் பார்த்தபடி மனைவியை வெறித்தான். “ஏங்க, என்னங்க ஆச்சு.. ஏன் அலறுனீங்க? தூக்கத்துல ஒரே சத்தமா கத்துனீங்க.. ஏதாவது கெட்ட கனவா.. என்றபடி ஆதரவாக அவன் கைகளைப் பிடிக்க, இவ்வளவு நேரம் நடந்ததெல்லாம் கனவுதான் என்ற புரிதல் மூர்த்திக்கு வந்தது. இருந்தாலும் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பாமல் அவன் கண்களில் பீதி உறைந்திருந்தது. சரி, சரி எதாவது பயந்தா கொணமா இருக்கும்.. நான் வேலைய முடிச்சுட்டு வர்றதுக்குள்ள தூங்கிட்டீங்க. இந்தாங்க இந்தப் பாலைக் குடிங்க.. என்று டம்ளரை எடுத்தவள், “அய்யய்ய, பால் திரிஞ்சிடுச்சு.. இருங்க வேற ஆத்தி எடுத்துட்டு வர்றேன்” என்று அவனிடம் ஆறுதலாகப் பேச அவனோ ஏதோ யோசித்தவன் போல “பரவாயில்ல.. கொடு..! கொடு” என்று அவள் முகத்தையே வெறித்தபடி டம்ளரை வாங்கப் போனான்.

அவனுடைய நடவடிக்கை விசித்திரமாகப்பட, லேசான சிரிப்புடன், “என்ன கனவு கண்டதுல ஆளே மாறிட்டீங்களா.. நல்லா கத்துனீங்க. இருங்க வேற கொண்டாறேன்’’, என்றபடி நகர்ந்தாள். மனைவி சென்றதையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் மூர்த்தி. அப்பாடா நல்லவேளை கனவு என்பது போல விழித்தான்.

நன்றி: துரை. சண்முகம, வினவு

எழுதியவர் : முகநூல் (22-Jun-16, 10:37 am)
பார்வை : 139

மேலே