கனவு நனவாகட்டும்

கனவு நனவாகும் என்கிறார்களே
ஒருபோதும் விரும்பியதில்லை நான்
ஒன்றைத்தவிர....

உறக்கம் ஊனமானதால்
நினைவெரும்புகள் கண்விழித்து
மூளை வெடிப்புகளில் பயணிக்கிறது.

கடிவாளமில்லா
காயக்குழம்புகள் இன்னும்
காட்சிக்கு வந்து போகிறது.

என்றோ
பொய்யுதட்டின் விசமவெட்கத்தில்
மனம்
மறுபிரதியெடுக்காதபோதும்
காம ஊடுருவலில் நுழைந்தவள்
காலம் கடந்தும்
காட்சிக்கு வந்துபோகிறாள்.

எத்தனையோ எவ்வளவோ
வண்ணக்குளிர்வில்
மயில்விழி நனைந்தாடின
அத்தனையும் நொய்யப்புடைக்கிறது
அரைநொடிக்கனவு.

நான் வீசியயெறிந்த உறவுகள்
விளக்கணைத்தபின்
விழிவாசல்வரை வந்துபோகிறார்கள்

என்
காயப்பட்டியலின் எண்ணிக்கையில்
சதம் கண்டவர்களும்
சமிக்கை செய்கிறார்கள்

இவையனைத்தும்
நனவாக வேண்டாம்.

கடைசியில் என்கனவுப்படம்
ஒருநாள் என்
மரணக்காட்சிகளை ஒளிபரப்பியது.

தொலைந்தானென்று பெருமூச்சு
விடும் உறவுகள்.

அய்யோயென அலறல்வழி
விளம்பரம் தேடும் பொய்யர்கள்

மௌனக்கண்ணீரால் முகம்கழுவும்
அன்பர்கள்.

இவையனைத்தும்
நனவாக வேண்டாம்

எனை புதைகுழிக்கு எடுத்துச்செல்லும்
நால்வரின் முகங்கள்.

இவை மட்டும் நனவாகட்டும்.

நால்வரின் முகமட்டும்
நனவாகட்டும்

எழுதியவர் : அ.ராஜா (23-Jun-16, 4:30 pm)
பார்வை : 93

மேலே