பகலில் இனி நீ தூங்கிவிடு
எங்கோ தொலைவில்
ஓர் ஆந்தை அலறுகிறது!
குடிகாரன் பாடுகிறான்!
குடித்துவிட்டு உளறுகிறான்!
ஓங்காரமாய்
உரக்கக் கூச்சலிடுகிறான்!
காற்று மரக் கிளைகளின்
ஊடே ஊளையிடுகிறது!
மழை சன்னல் கண்ணாடியில்
சடசடவென அறைகிறது!
சுவர்க் கடிகாரம் டிக் டக்
டிக் டக் டிக் டக் என்கிறது!
முக்கியச் சாலையில் கனரக
வாகனங்கள் ’ஸூம்’ என விரைகின்றன!
சக்கரங்கள் தார்ச்சாலையில்
உராய்ந்து கிரீச்சிடுகின்றன!
தெருமுனை நாய்கள் குரைத்து
இரவு நிசப்தத்தைக் கலைக்கின்றன!
பக்கத்து வீட்டில் விழித்துக் கொண்டு
குழந்தை வீரிடுவது மனதைப் பிழிகிறது!
எங்கிருந்தோ அபாயமணி
தொடர்ந்து ஒலிக்கிறது!
எங்காவது கொள்ளையர்கள்
வீட்டில் புகுந்து விட்டார்களா?
ஏதோ சுரண்டும் ஒலி
கேட்கிறதே! என்ன! எங்கிருந்து?
பக்கத்து அறையில்
சுரண்டுவது சுண்டெலியோ!
ஒருவாறாக பொழுது புலர்ந்தது,
பால்காரனின் சைக்கிள் மணி!
மேசைக் கடிகாரமும் காலை
மணி ஆறு என அலறுகிறது!
எழுந்திருக்க வேண்டிய
நேரமும் வந்து விட்டது!
மருத்துவர்கள், விஞ்ஞானிகள்
சொல்கிறார்கள் யாவர்க்கும்!
’இனிமையான இரவுத் தூக்கத்தை
அடித்துக் கொள்ள இணையில்லை’ என!
இரவெல்லாம் எழும் சப்தங்கள்!
என் தூக்கம் கலைத்ததே! என் செய்வேன்!
பேசாமல்.. நிம்மதியாய்..
பகலில் இனி நீ தூங்கிவிடு!