ஆகச் சிறந்த தலைமைக் குரங்கு

குரங்கு
என் வீட்டுக் கூரையின்
இரண்டு ஓடுகளைப்
பிறித்து உடைத்து விட்டது

என் வீட்டிற்குள் வெளிச்சம்
வியாபித்ததில் வியந்தேன்

உள்ளே இறங்கிய குரங்கு
என் உணவுக் களஞ்சியத்தைச்
சூறையாடியது

எனக்கான உணவைப்
பரிமாறப் போவதாகப்
பக்குவமாய் அமர்ந்திருந்தேன்

உள்வீட்டில் நுழைந்த குரங்கு
என் உடைகளைக் கிழித்து
ஊஞ்சலாடியது

புதுவகை உடைகள்
தந்தெனைப் புதுப்பிக்கப்
போவதாகப் பூரித்திருந்தேன்

தாண்டவமாடித்
தரைமட்டமாக்கியது வீட்டை
அக் குரங்கு

காடுவாழ் விலங்குகளிலேயே
கடவுள் போன்றது அக்குரங்கு
என யாரோ சொல்லக் கேட்டேன்

உணவு உடை இருப்பிடம்
ஒருசேர அழிந்தது...
வாயில்லாத அந்த வானர வடிவில்
நான் வாயு நாதனைத் தரிசித்து
வழிபட்டேன்...

உடைக்கப்பட்ட அன்றே
ஓடுகளை மீண்டும் வேய்ந்து
கூரையைச் சரிசெய்துவிட்டுக்
குரங்கை அண்டவிடாமல்
வீட்டிற்குக் காவல் வைத்த
அந்த அண்டைவீட்டு ஆசாமி
இன்று தனது மாடிவீட்டில்
பால் காய்ச்சிக் கொண்டிருக்கிறான்

அவனது வீட்டருகில்
என் வீடு
நேற்று இருந்தது..!


#மணிமீ
23-Jun-16

எழுதியவர் : மீ.மணிகண்டன் (24-Jun-16, 6:26 am)
பார்வை : 102

மேலே