பிம்பம்

அந்தப் பாதையில் பதிந்திருந்த
என் பாதச் சுவடுகளைக்
கிழித்துக் கொண்டிருந்த
முட்களை அங்கு
வீசிச் சென்றது நானல்ல..
நான் அமர்ந்திருந்த
அந்தச்
சாய்வு நாற்காலிக்கு அருகே
சாய்ந்திருந்த மரத்தில்
படிந்திருந்த நிழல்
எனதல்ல..
இலை மேலிருந்து
தவறி விழுந்த
சிற்றெரும்பு ஒன்றை
என் விரல்கள்
ஏந்திக் கொண்டபோது
ஆற்று நீரில் விழுந்தது
என் பிம்பமல்ல..
அன்றொரு முறை
தொலைந்து சென்ற
பாதையொன்றில்
இப்போது
நடந்து கொண்டிருக்கிறேன்..
அடுத்த முறை
தொலைந்து போகவிருக்கும்
பாதையொன்றை
இன்று
கண்டுபிடித்து விடுவேன்..
இருட்டுக்குள் இருந்து
வெளிச்சத்துக்கு வந்து
மீண்டும்
இருட்டுக்குள் நுழைந்துவிட்டேன்..
தெருவோர மின்விளக்கு
கடந்து விட்டது..
முன்பொரு நாளில்
என் முகத்தை
வரைந்து அழித்து
பின்
இன்னொரு முறை
வரைந்து பின்
அழித்து விட்டேன்..
பின்பொரு நாளில்
என் முகத்தை
முழுமையாய்
வரைந்து முடித்த போது
என் முகம்
வேறாகியிருந்தது...
- கிருத்திகா தாஸ்...
நன்றி : குங்குமம்