மடிந்திட்ட உயிர்களும் திரும்பிடுமா
உள்ளத்தை உலுக்கியது இந்நிகழ்வு
உலகமே உறைந்தது காட்சிக்கண்டு !
ஈரமிலா இதயங்கள் பிறப்பதேனோ
ஈனப்பிறவிகள் வாழ்வதும் ஏனோ !
உயிருக்கு இங்கில்லை உத்தரவாதம்
உதவிக்கு வருவதில்லை ஆபத்திலும் !
வேடிக்கை பார்ப்பதற்கு கூட்டம்கூடுது
வேட்டை நாய்களின் எண்ணிக்கைஏறுது !
அலுவலகம் செல்பவரை வழியனுப்பிய
அன்றாடக் கடமையென நிறைவேற்றிய
அன்பான தந்தையோ ஆறாத்துயரத்தில்
ஈன்றெடுத்த தாயோ உயிரற்றஉடலாக !
சாக்கடையாய் மாறியதேன் சமுதாயம்
சுடுகாடாய் மாறுவதேன் தமிழ்நாடும் !
பலியாடாய் கொல்வதேன் சுவாதிகளை
கலிகாலமென சொல்வதேன் நிகழ்வுகளை !
உயிரென்ன பட்டமரமா வெட்டிசாய்த்திட
உடலென்ன ஒட்டிவைத்த கண்ணாடியா !
திட்டமிட்டு செயலாற்றும் சதிகாரனை
தீயிட்டு கொளுத்துக கொலைகாரனை !
செல்வங்களை இழந்திடும் பெற்றவர்களோ
செல்லரித்த இதயங்களாக வெற்றுடலாவர் !
விதியென்று நினைக்காதீர் நடப்பவைகளை
விதிகளை மாற்றுவதே நாட்டுக்குத்தேவை !
மறைந்திட்ட சுவாதியை காண்போமா
உறைந்திட்ட உள்ளமும் கரைந்திடுமா !
வடித்திட்ட கண்ணீரும் வற்றிடுமா
மடிந்திட்ட உயிர்களும் திரும்பிடுமா !
ஆறுதல்தான் கூறிட முனைந்தாலும்
ஆற்றிடதான் முடியாது உள்ளங்களை !
இனியாவது இதயங்களே முற்படுங்கள்
இதுபோல நிகழ்வுகளை தடுத்திடுங்கள் !
பழனி குமார்