நாவா நானா

1 வஞ்சகச் சொல்லுடையார்
கற்றுத் தந்ததுவா...? நீ இன்று
எடுத்து தூவுவதெல்லாம்..
இளைய மொழி,
கிளியிசை இன்னிசையாய்
ஒவ்வொரு இடியையும் இறக்கி வைக்கிறாய்....

2 .பேயிடம் போய் கேட்டு வந்தியா..?
பேய்ச்சியைப் போல் பேயாட்டம்
நடத்துகிறாய்....
போதும் போதும் கொஞ்சமாய்
அடங்கி விடு அடுத்தவரும்
பார்க்கிறார்கள்....

3. எரிமலையின் ஒரு துளியில்
உருக்கொண்டாயோ....?
இப்படி உருக்கித் தள்ளுகிறாயே
உருகுகிறது உள்ளம்,
உண்மை உருக்காட்டி
கொஞ்சம் ஊமையாய் இருந்து
கொள்ளேன்...

4. புரியாத குளிர்க்காற்றில்
என்னை போர்வையாக்கிக் கொள்கிறாய்...
எனக்குள் இருந்து கொண்டே
ஊதுகலையும் தோற்க உயிர்க்கச்
செய்கிறாய் என்நெஞ்சை

5. நிஜத்தின் நிசப்தத்தில்
தினம் ஒரு நாடகம் நடத்துகிறாய்,
பொய்யான பாத்திரங்களைப்
பொறுக்கி நீயே
காவியத் தலைவனாகிறாய்..
கருவும் நீயே கண்டெடுக்கிறாய்...

6. கற்பனையும் காணா உலகம்
காட்சியாக்குகிறாய்...
எந்த பிரபஞ்சத்தின் பிரதியைக்
கொணர்ந்தாயோ.,?
அச்சிட்டு அரங்கேற்றுகிறாய்
அத்தனை நரம்புகளும் அடங்கிப் போகின்றன...

7. மொழிகளால் பழிமாலை கோர்க்கிறாய்...
அசைவில் என்னை ஆட்டிப் படைக்கிறாய்..
எனக்குள்ளே நெளிந்து வளைந்து
புரண்டு நிமிர்ந்து
சத்தமாய் சாபம் விடுகிறாய்..
மொத்தமாய் என்னை அடக்கி
ஆளுகிறாய்....

8. நீ நானெனும் முகமூடி கொண்டு
என் பெயர் பூண்டு
என்னையே வஞ்சிக்கச் செய்கிறாய்..
எதிரெதிர் பகைத்தீ மூட்டி
நண்பர்கள் உறவுகள் என்று
துரோகத்தை தூவி புதினம் பார்க்கிறாய் புரியாமலே.....

9. உன்னால் மட்டும் எப்படி முடிகிறது
இன்னொருத்தருக்குள் இருந்து கொண்டு
இராச்சியம் பன்ன...?


Aski

எழுதியவர் : M.F.Askiya (28-Jun-16, 6:12 am)
பார்வை : 73

மேலே