உணவே நம் உடலுக்குத் தீங்கு ஏற்படுத்துவதோடு தொந்தரவும் செய்தால் அது நல்ல உணவா

அநேக வீடுகளில் இன்று அடுப்பு எரிகிறதோ இல்லையோ, வீட்டில் இருப்பவர்களின் வயிறு நிச்சயம் எரிகிறது! தண்ணீர் குடிப்பதுபோல் ஜெலுசிலையும், இன்னபிற ரசாயனங்களையும் கலக்கிக் குடித்துக்கொண்டிருக்கிறோம். இந்த எரிச்சலுக்குக் காரணம் அல்சர், அசிடிட்டி போன்ற பிரச்னைகள்தான். உடல் உழைப்பு இல்லாததும், முறையற்ற உணவுப் பழக்கங்களும் வயிறை எரியவைக்கின்றன. உணவு என்பது, உடற்சக்திக்காகவும் ஆரோக்கியத்துக்காகவும் உண்பது. ஆனால், அந்த உணவே நம் உடலுக்குத் தீங்கு ஏற்படுத்துவதோடு தொந்தரவும் செய்தால்... அது நல்ல உணவா?

மனித நாகரிக வளர்ச்சியில் மிக முக்கியமான கண்டுபிடிப்பு, நெருப்பு. பாட்டனுக்குப் பாட்டன், அவனுக்கும் முப்பாட்டன் என ஆதியில் கண்டுபிடித்த நெருப்பில் இருந்து ஆரம்பிக்கிறது நம் சமையலறையின் கதை. விலங்குகளைப்போல் பச்சைக் காய்கறிகளையும் மாமிசங்களையும் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஆதிமனிதர்கள், உணவை நெருப்பில் சுட்டுச் சாப்பிடத் தொடங்கிய பின் உணவின் வேறொரு சுவையை அறிய தொடங்கினர். நேரடியாக உண்ண முடியாத உணவுப் பொருட்களை, ஒன்றோடு ஒன்று சேர்த்து சுவையாக ஆரோக்கியமான உணவாகப் பக்குவப்படுத்துவதே சமையல்.

நாகரிகம் வளர வளர, சமையல் முறையை இடம், பொருள், கால நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொண்டே வந்திருக்கிறார்கள் மனிதர்கள். மாற்றம் இயல்பானதுதான்... ஆனால், உணவு என்பது நம் ஆரோக்கியத்துக்கானது என்ற அடிப்படையையே மாற்றிக்கொண்டதுதான் வேதனை.

கால இயந்திரத்தில் ஏறி 50 - 60 வருடங்கள் பின்னோக்கிச் சென்றால், கிராமங்களில் சமையல் என்பதன் வேறொரு வடிவத்தைக் காணலாம். இன்றைய சமையலுக்கு சம்பந்தமே இல்லாத அக்கறையான ஒரு சமையல் முறை அது. உலை கொதிக்கும் சத்தமும், தாளிக்கும் வாசமும், தயிர் கடைதலின் ரீங்காரமும், அம்மியில் அரைபடும்போது எழும் மணமுமாக, 'அப்பிடைஸர்கள்’ இல்லாமலேயே பசியைத் தூண்டும் செய்முறை அது.

மண்ணில் விளைந்த பொருட்களை, ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஏற்ற வகையில் பக்குவப்படுத்துவதே சமையலின் சூத்திரம். இது குடும்பத்துக்குக் குடும்பம், இடத்துக்கு இடம், நாட்டுக்கு நாடு மாறுபடும். விளைபொருட்கள், தட்பவெப்பம், மக்களின் உடல்வாகு... என ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வோர் உணவு முறை பின்பற்றப்படுகிறது. ஆனால், அதை கார்ப்பரேட் நிறுவனங்களின் வணிக நலனுக்காக உலகம் முழுக்க பொதுமைப்படுத்தும் முயற்சிதான், ஆரோக்கியத்தின் அஸ்திவாரத்தையே அசைக்கிறது.

'இந்த அவலை ஒரு கிண்ணத்தில் போட்டு, கொஞ்சம் பாலை உற்றினால் சத்தான காலை உணவு தயார்’ என்கிற விளம்பரத்தை நம்பி, பாக்கெட் பாக்கெட்டாக அதை அதிக விலை கொடுத்து வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால், அது எந்த நாட்டு உணவு, யாருக்கான உணவு, எப்படி விளைவிக்கப்பட்டது... போன்ற எந்தத் தகவலும் நமக்குத் தெரியாது. 'இந்த டப்பாவில் கொஞ்சம் வெந்நீரை ஊற்றினால், காய்கறிகள் கலந்த நூடுல்ஸ் ஒரே நிமிடத்தில் தயார்’ என்பதை அப்படியே நம்புகிறோம். ஆனால், அதில் எந்த அளவுக்கு நச்சுத்தன்மை இருக்கும் என்பதை நாம் யோசிக்க மறந்துவிட்டோம்.

போன தலைமுறை வரை, சமையலையும் சமையல் அறையையும் இந்த அளவுக்கு உதாசீனப்படுத்தவில்லை. ஜலதோஷம், காய்ச்சலுக்கு சமையல் அறையில் இருந்து சுக்கையோ, மிளகையோ டக்கென எடுத்து, தோட்டத்தில் உள்ள துளசியைப் பறித்து கஷாயம் வைத்துத் தருவார்கள். உடலின் ஆரோக்கியத்துக்கு எப்படி உணவு காரணமோ, அதே உணவு ஆரோக்கியக் குறைவையும் சரிசெய்யும் என்ற அனுபவ நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. ஆனால் இன்றைக்கு, சமையல் என்பது நமக்கு வேண்டாத ஒரு வேலையாகிவிட்டது. 'மாடுலர் சமையல் அறைகளைக் கட்டி, அதை மூடியே வைத்திருக்கிறோம்; மூன்று வேளையும் ஹோட்டலில்தான் சாப்பிடுகிறோம்!’ எனச் சொல்வதில் ஏனோ நம்மவர்களுக்கு ஒரு பெருமிதம்! நமக்காக நம்மவர்கள் சமைத்த உணவை, குடும்பத்துடன் மொட்டை மாடியிலோ, ஆற்றங்கரையிலோ, முற்றத்திலோ உட்கார்ந்து சாப்பிடுவதன் மகிழ்ச்சியை ஹோட்டல் உணவுகள் என்றைக்காவது தந்திருக்கின்றனவா?

யாரோ சாப்பிடப்போகிறார்கள் என்ற ஹோட்டல் சமையல்காரரின் மனநிலை, வீட்டில் சமைப்பவர்களிடம் இருக்காது. வீடுகளில் சமைப்பவர்கள் தங்கள் நேசத்துக்குரியவர்களுக்காகச் சமைக்கிறார்கள். பார்த்துப் பார்த்து வாங்கும் காய்கறிகளில் இருந்து ஆரம்பிக்கிறது அடுப்படி ரகசியம். சுவைக்காக அஜினமோட்டோவையோ, நிறத்துக்காக துணிகளின் சாயத்தையோ, வீணாகக் கூடாது என்பதற்காக பழைய இறைச்சியையோ வீட்டுச் சமையல் அறைகள் தயாரிக்காது.

சமையல் நேரத்தை மிச்சமாக்குவதற்காக நிறையக் கண்டுபிடிப்புகள் வந்துவிட்டன. ஆனால், அவை சமையலின் நேரத்தைக் குறைப்பதுபோல, நம் ஆயுளையும் குறைத்துவிடுகின்றன. மிக்ஸியில் அரைக்கும் துவையல், சில மணி நேரங்களில் கெட்டுவிடுகிறது. ஆனால் அம்மியில் அரைக்கும் துவையல், பல மணி நேரம் கழித்தும் அதே மணத்துடன் இருக்கிறது. பிரஷர் குக்கர்கள், அதிகமான அழுத்தத்தில் உணவின் சத்தை

உறிஞ்சிவிடுகின்றன. எண்ணெய் தேவைப்படாது என நாம் சமைக்கும் நான்ஸ்டிக் பாத்திரங்களில் பூசப்படும் நஞ்சையும் சேர்த்துத்தான் விழுங்கிக் கொண்டிருக்கிறோம். குளிர்சாதனப் பெட்டியில் ஒரு வாரம் வைத்துச் சமைக்கப்படும் உணவைவிட, அன்றைக்கு வாங்கிச் சமைக்கும் காய்கறிகளில்தான் சத்தும் சுவையும் அதிகம்.ரெடிமேட் துணிகளைப்போல ரெடிமேட் உணவுகளும் விற்பனைக்கு வந்து அடுப்படியின் அவசியத்தைக் குறைத்துவிட்டன.

ஆரோக்கியத்தைக் குறைக்கும் இந்தக் கலாசாரத்துக்கு, பெண்களை மட்டும் குறை சொல்லிப் பயன் இல்லை. போன தலைமுறை வரை பெரும்பாலான குடும்பங்களில் ஆண்கள் வேலைக்குச் செல்ல, பெண்கள் வீட்டில் இருந்து குடும்பத்தைக் கவனித்துக்கொண்டார்கள். ஆனால், இன்று நிலைமை மாறி இருக்கிறது. பெண்களும் வேலைக்குச் செல்லத் தொடங்கிவிட்டார்கள். அலுவலகத்தில் இருந்து 7 மணிக்கு வீடு திரும்பும் பெண்களிடம் அம்மியில் துவையல் அரைக்கச் சொல்வது வன்முறைதான். சமையல், பெண்களுக்கானது மட்டுமல்ல; சாப்பிடும் எல்லோருக்குமானது என்கிற நம் மனநிலையை மாற்றிக்கொள்வது ஒன்றுதான் இதற்கான தீர்வு. சமையலறையில் ஆணும் பெண்ணும் இணைந்து சமைக்கும் கலாசாரம், எல்லோர் வீடுகளிலும் உருவாகிற அன்றுதான் ஆரோக்கியமும் ஆனந்தமும் நம் இல்லங்களில் தவழும்!

- நன்றி: விகடன் - நல்ல சோறு -7

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (1-Jul-16, 8:51 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 174

மேலே