உதகைக் குளிரினில் உல்லன் நீ அணிந்து வந்தால்
உதகைக் குளிரினில்
வெள்ளை உல்லன் நீ அணிந்து வந்தால்
ஊட்டி மலர் காட்சியும் தோற்குமடி
கண்ணம்மா என் கண்ணம்மா !
குற்றால அருவியில்
குளித்து நீ குடலைப் பின்னலிட்டு செண்பகம் சூடி வந்தால்
சித்தனும் பித்தனாவானடி
கண்ணம்மா என் கண்ணம்மா !
பொய்கைக் கரையினில்
பூவாய் நீ சிரிக்க விரிந்து மலர்ந்த தாமரையும்
நாணத்தில் இதழ்கள் மூடுமடி
கண்ணம்மா என் கண்ணம்மா !
ஐவகை நிலங்களில்
ஆரணங்கு நீ அழகாய் நடந்து வர
சங்கத் தமிழில் என் மனம் சந்தக் கவிதை எழுதுதடி
நெடுநல் வாடை நக்கீரனும் பொறாமையில் பார்க்கிறானடி
கண்ணம்மா என் கண்ணம்மா !
~~~கல்பனா பாரதி~~~