இருள் துகள்கள்

உள்ளங்கை நீருக்குள்
நிரம்பியிருந்த
என்
தலைகீழ் பிம்பம்
சிதறிப் போவதற்கு
கொஞ்சம் முன்பு
உடைந்து போயிருந்தது
மலைகளுக்குப் பின்
மறைந்து கொண்ட
சூரியனுக்கும் எனக்கும்
இடையிலான நீள் தொலைவு..

தயக்கங்களினூடே
உலவிக் கொண்டிருந்த
அந்த ஒற்றை மௌனம்
என் இறுதிச்
சொற்றொடரின் முடிவில்
தனித்து விடப்பட்டிருந்தது ..

என் சுட்டுவிரல்
நுனித் தீண்டலில்
கொஞ்சம் கொஞ்சமாய்
நகர்த்திக் கொண்டிருக்கிறேன்
இந்த இரவின்
ஒவ்வொரு காட்சியையும்..

இனி வரவிருக்கும்
அடுத்த காட்சியை
வண்ணங்களால் வரைய நினைத்து
தொலைந்து போய் விட்ட
என் தூரிகையைத்
தேடித் கொண்டிருக்கிறேன்
இப்போது..
நகர்ந்து போய் விட்ட
முந்தையக் காட்சிக்குள்...

நிசப்தங்கள் உலவிக் கொண்டிருந்த
நடுநிசி இருளுக்குள்
கண்ணாடி ஜன்னல்களின் கீறல்களும்
எனக்குக்
கை அசைத்துச்
சென்று விட்ட தொலைவுகளும்
என்னைத் தொடர்ந்து
கொண்டிருந்த இருளுக்குள்
கொஞ்சம் மறைந்து தான் போனது..

காற்றோடு ஒளிந்திருக்கும்
தூசிகளுக்குள்
புகுந்து கொள்ள முடியுமென்னால் எனில்
இன்றைய இரவின் விளிம்பில்
மிச்சமாகிப் போன
கடைசித் துளி
இருளின் துகள்களுக்குள்
ஒளிந்து கொள்வேன் நான் இப்போது...



- கிருத்திகா தாஸ்


நன்றி : கீற்று

எழுதியவர் : கிருத்திகா தாஸ் (6-Jul-16, 11:30 am)
Tanglish : irul thukalkal
பார்வை : 247

மேலே