விவசாயம் தொழிழல்ல-கங்கைமணி

விவசாயம் தொழிழல்ல !

காலமும் நேரமும் இதற்கில்லை
குறித்த நேரத்தில் நித்திரை தானுமில்லை.!
மந்திரி வீட்டில் இருந்தாலும்.,
மயக்கம் போட்டே கிடந்தாலும்.,!
மழை வரும் சேதி கேட்டாலே .,
கொல்லையை திருப்பி விடவேண்டி ....
மம்பட்டி எடுத்து ஓடவேண்டும் !
மழையில் நனைந்தே தீரவேண்டும் !
ஆதலால் ....,
விவசாயம் தொழிழல்ல !

விடுமுறை நாட்கள் ஏதுமில்லை .,
விடுப்பு எடுத்தவர் மீண்டும் வருவதில்லை -இதற்கு
சீருடை ஏதும் தேவையிலை,
சிறுதொழில் பெருதொழில் பேதமில்லை .,!
ஆதலால் .....,
விவசாயம் தொழிழல்ல !

முதலைப்போட்டவன் முதலாளி-இதில்
முதலைப்போட்டவன் உழைப்பாளி !,
ஒய்வைச்சொல்ல யாருமில்லை -இதில்
வயது வரம்பு ஏதுமில்லை !.
ஆதலால்.....,
விவசாயம் தொழிழல்ல !

அலுவலகம் என்று ஏதுமில்லை.,
ஆண்டுக்கணக்கும் பார்ப்பதில்லை !,
இலாபம் வந்தால் பெரிதெமக்கு-அதில்
உழைப்பைக்கழித்தால் என்ன இருக்கு.?!
ஆதலால்.....,
விவசாயம் தொழிழல்ல !

விளைபொருள் கண்ட விவசாயி -அதற்கு
விலை வைக்கமுடியாத ஏமாளி!

தேநீர்க்கடையும் ஒரு தொழில்தான் !,
தெருமுனை பாட்டியின் கடையும் சிறுதொழில்தான்,-தினம்
அஞ்சோ.. பத்தோ..எடுத்திடுவர் -அதில்
ஆனந்த வாழ்வைக்கழித்திடுவர் .,

விவசாயி நிலையோ அதுவன்று !?...
விதைத்தவை முதலில் விளையவேண்டும்
விளைந்தவை வீட்டுக்கு வரவேண்டும்
வந்தவை விலையாகிப்போகவேண்டும்!
விவசாயி நிலையும் விலையும் நிரந்தரமில்லை !....,

விதி செய்யும் சதி.,
விலையில்லை என்றால்…
என்னவாகும் எங்கள் கதி!?.

பொய்யைச்சொல்ல தேவையில்லை -இதில்
போட்டி போறாமை ஏதுமில்லை !
இதை விட்டுப்போக முடியவில்லை ....,
இதை விட்டால் வேறு பிழைப்புமில்லை !...

விவசாயம் தொழிழல்ல!...
எங்கள் வாழ்க்கை !
எங்கள் உலகம் !
எங்கள் உணர்வு
எங்கள் உயிர் !

ஒரு விவசாயி இறக்கையில்-அவனோடு
ஒரு விவசாயமும் இறக்கிறது !!.
-கங்கைமணி

எழுதியவர் : கங்கைமணி (9-Jul-16, 2:04 am)
பார்வை : 174

மேலே