அறிவுச் சொத்துரிமை யாருக்கானது

உலகமயம் உருவாக்கிய அமெரிக்காவின் மிக பெரிய ஆயுதம் - அறிவுச் சொத்துரிமை

1980 - களில் IBM, Pfizer, Microsoft, Bristol-Myers, Du Pont, General Electric, General Motoros, Monsanto, Rockwell International, Warner Communication, Johnson & Johnson, Merck, FMC Corporation போன்ற அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் ஒன்று கூடி Advisory Committee for Trade Negotiations (ACTN) என்ற குழுவை எற்படுத்தினர். உலகெங்கும் வலுவான அறிவுச் சொத்துரிமை (Intellectual Property Rights) சட்டங்களை நிறுவ இந்த குழு அலோசித்தது.

1981 இருந்து இக்குழுவுக்கு Pfizer என்ற பன்னாட்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எட் பிராட் தலைவர் பொறுப்பில் இருந்தார். இவருடைய நிறுவனத்தின் மருத்துவ பொருட்களை காப்பி அடித்து பல நிறுவனங்கள் மருந்துகள் செய்வதாக இவர் எண்ணினார். Microsoft நிறுவனத்தின் கணினி மென் பொருட்களை பலர் அனுமதி இல்லாமல் பயன்படுத்துவதை தடுக்க உலகெங்கும் பதிப்புரிமை சட்டம் வலுப்படுத்த வேண்டும் என்று அந்த நிறுவனம் கருதியது. குறிப்பாக இந்தியா போன்ற ஏழை நாடுகள் இத்தகைய செயலில் ஈடுபடுவதாக கூறப்பட்டது. இவற்றை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் நிறைந்த அறிவுச் சொத்துரிமை சட்டம் அவசியம் என்று இந்த குழு எண்ணியது.

உலகெங்கும் இத்தகைய சட்டங்களை பரப்ப “காட்” (GATT) கூட்டத் தொடரில் அறிவுச் சொத்துரிமை குறித்தான ஒப்பந்தை முன்வைக்க வேண்டும் என்று USTR என்கிற அமெரிக்க வணிக துறையிடம், இவ்வமைப்பு ஆலோசனை வழங்கியது. அந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்ட அமெரிக்க அரசு 1987 நடந்த GATT மாநாட்டில் வணிகம் தொடர்பான அறிவு சொத்துரிமைக்கான ஒப்பந்தம் (Trade - Related Intellectual Property Rights Agreement) என்கிற புதிய ஒப்பந்தத்தை முன் வைத்தது.

1987ல் துவங்கிய இந்த உருகுவே சுற்று என்று அழைக்கப்படும் காட் ஒப்பந்த (GATT) பேச்சுவார்த்தையில் தான், சில மாற்றங்களுடன் அறிவு சொத்துரிமை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வது என 1994ல் முடிவானது. மேலும் இந்த காட் (GATT) கூட்டத்தொடரில் தான் WTO - உலக வர்த்தக நிறுவனம் என்னும் புதிய அமைப்பை ஏற்படுத்தவும் முடிவானது. இதன் பயனாக உலக வர்த்தக நிறுவனம் 1995ல் உதயமானது.

இவ்வாறு திட்டமிட்டு அறிவு சொத்துரிமை சட்டங்கள் ஏழை நாடுகள் மீது காட் மாநாட்டின் மூலமாக அமெரிக்காவால் திணிக்கப்பட்டது. அதோடு மட்டும் அல்லாமல் அமெரிக்காவில் வணிக சட்டம் 1974 (TRADE ACT 1974) என்று ஒரு சட்டம் உள்ளது. இச்சட்டத்தில் பிரிவு 301 அறிவு சொத்துரிமை சட்டங்களை சரியாக நடைமுறை படுத்தாத நாடுகளுடன் வர்த்தகம் செய்துக் கொள்ள தடை விதிக்கிறது. ஆக அறிவு சொத்துரிமை சட்டங்களை அமெரிக்க அளவுகோள்படி இயற்றியிருந்தால் மட்டும் அமெரிக்காவுடன் இந்திய வர்த்தக உறவு சாத்தியம். இந்த ஆண்டு வரை மேற்கூறிய சட்டத்தின் கீழான கண்கானிப்பு பட்டியலில் இருக்கிறது இந்தியா.

90-களின் பின் மத்தியில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், பாரதிய ஜனதா இரண்டு தேசிய கட்சிகளுமே அமெரிக்காவுடனான நட்பை விரும்பின. அதன்படி அறிவு சொத்துரிமை சட்டத்தில் தொடர்ந்து பல மாற்றங்களை செய்தன.

அறிவுச் சொத்துரிமை யாருக்கானது ?

இப்படி பன்னாட்டு/இன்னாட்டு நிறுவனங்கள் அறிவு சொத்துரிமை ஆவசியத்தை வழியுறுத்துவதின் நோக்கம் என்ன? வர்த்தக நிறுவனங்களுக்கு அறிவுச் சொத்துரிமை என்ற பெயரில் ஏகபோக உரிமை தருவதுதான்.

TRIPS ஒப்பந்திற்கு பின் எல்லா துறை சார்ந்த கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை 20 ஆண்டுகளுக்கு கொடுக்கும் வகையில் இந்திய காப்புரிமை சட்டம் மாற்றப்பட்டது. இதன்படி மருந்து முதல் விவசாயிகளுக்கு தேவையான உரம், விதை, பூச்சி மருந்து வரை அனைத்திற்கும் காப்புரிமை கொடுக்கப்படுகின்றன. இதனால் மருந்துக்கும், உணவுக்கும், அன்றாட அத்தியாவசிய பொருட்களுக்கும் நாம் பன்னாட்டு/இன்னாட்டு நிறுவனங்களை நம்பி இருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

கணினி மென்பொருளுக்கான 90 சதவித பதிப்புரிமையை பெற்றுள்ள MICROSOFT நிறுவனம், தன்னுடைய அனுமதி இல்லாமல் உலகில் கணினி இயங்காது என்று கூறுகிறது. பல மென்பொருளுக்கு பதிப்புரிமை பெற்ற இந்நிறுவனத்தின் அனுமதி இல்லாமல் இந்த மென்பொருள்களை ஆய்வு செய்ய முடியாது. இதன்படி இந்நிறுவனத்தின் மென்பொருளை நாம் பயன்படுத்த முடியுமே தவிர அவற்றை மாற்றுவதையோ மேம்படுத்துவதையோ பதிப்புரிமை சட்டம் தடை செய்கிறது.

இதற்கு மாற்றாக COPYLEFT என்கிற அடிப்படையில் LINUX என்கிற பொது மக்களுக்கான மென்பொருள் இன்று பரவலாக அறிமுகமாகியுள்ளது. இந்த வகை மென்பொருள் பயன்படுத்துவோரே, தங்கள் தேவைக்கு ஏற்ப அவற்றை மாற்றிக்கொள்ளும் வகையில் இந்த மென்பொருட்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கேரள அரசு கூட LINUX மென்பொருளை மட்டுமே அரசு அலுவலகத்தில் பயன்படுத்த வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது.

TRIPS ஒப்பந்திற்கு பின் இந்திய பதிப்புரிமை சட்டத்தில் தொலைக்காட்சி ஒளிப்பரப்புக்கும் பதிப்புரி்மை சட்டப்படி ஒளிப்பரப்பு உரிமை (BROADCASTING RIGHT) கொடுக்கப்பட்டது. அதன் பயன் இன்று கிரிக்கெட் விளையாட்டை ஒளிபரப்பு செய்வதற்கு பல ஆயிரம் கோடிகள் விலை நிர்ணயிக்கப்படுவதை நாம் அறிவோம்.

இப்படி நம்மை சுற்றியுள்ள எல்லா கண்டுப்பிடிப்புகளுக்கு காப்புரிமையும், கலை சார்ந்த படைப்புகளுக்கு பதிப்புரிமையும் பெற்றுள்ள நிறுவனங்கள் தன் கட்டுப்பாட்டில் உலகத்தையே வைத்துள்ளன. தங்களுக்கு உரிமையான பொருட்களை வேறுயாரும் தயாரிப்பதை தடுக்க தங்கள் பொருட்களின் மீது வணிக குறியீடு இடுகின்றனர். இவ் வணிக குறியீடும் ஒரு அறிவு சொத்துரிமை தான், இதற்கான சட்டம் TRADE MARK ACT 1999 (TRIPS ஒப்பந்திற்கு பின் பலவாறு மாற்றப்பட்டது). இச்சட்டம் ஒரு நிறுவனத்தில் வணிக குறியீட்டை வேறுயாரும் பயன்படுத்த தடை விதிக்கிறது.

பன்னாட்டு/இன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடைய பொருட்களின் தரத்தை மேம்படுத்துவதைவிட அவற்றை விற்பனை செய்வதற்கான விளம்பரத்திற்கு பல ஆயிரம் கோடிகள் செலவு செய்கின்றன. மக்கள் மனதில் இந்நிறுவனங்களின் வணிக குறியீடு (TRADE MARK) பதிவு செய்யப்படுகிறது. இத்தகைய வணிக குறியீடுகளை கொண்டு அப்பொருளின் தரத்தை நாம் உயர்வானதாக கருதுகிறோம்.

தரத்தை நிர்ணயம் செய்வதற்கு இந்திய அரசு தரநிர்ணய சட்டத்தை இயற்றியுள்ளது. இந்த சட்டத்தில் உள்ள தரத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படும் வணிக பொருட்களுக்கு ISI / BIS என்கிற முத்திரையை இட்டுக்கொள்ள இச்சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் எல்லா வணிகபொருட்களும் இந்த முத்திரையை அவசியம் பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதனால்தான் பூச்சி மருந்துகள் உடைய பெப்சி - கோக் எவ்வித தடையும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. பெப்சி - கோக் நிறுவனங்களின் வணிக குறியீடு நம் மனதில் பதிய வைக்க பலநூறு ஆயிரம் கோடிகள் செலவு செய்யப்படுகின்றன. இதில் இவை பூச்சி மருந்தை கொண்டது என்பது யார் காதுக்கும் எட்டாமல் போய்விடுகிறது.

பெப்சி - கோக் மட்டும் அல்ல இந்தியாவில் விற்பனையாகும் எந்த பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களும் ISI முத்திரை இல்லாததைக் கொண்டு இந்திய தரநிர்ணய சட்டப்படி இவை தயாரிக்கப் படுவதில்லை என்பதை நாம் அறியலாம். தொடர் விளம்பரங்கள் மூலம் இந்நிறுவனங்களின் வணிக குறியீட்டை நம் மனதில் பதியவைப்பது மூலம், ஒருவித நுகர்வு கலாச்சாரம் வளர்க்கப்படுகிறது.

இதை தவிர உலக வர்த்தக நிறுவனத்திற்கு பின் இந்தியாவில் இயற்றப்பட்டுள்ள புதிய அறிவு சொத்துரிமை சட்டம்

• பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பாரம்பரிய பொருட்களை உற்பத்தி செய்ய அனுமதிக் கொடுக்கும் GEOGRAPHICAL INDICATIONS OF GOODS (REGISTRATION AND PROTECTION) ACT, 1999.

• பொருட்களின் வடிவமைப்புகளுக்கு பதிப்புரிமை வழங்கும் DESIGNS ACT, 2000.

• மின் பொருள் வடிவமைப்புகளுக்கு பதிப்புரிமை வழங்கும் SEMICONDUCTOR INTEGRATED CIRCUITS LAYOUT-DESIGN ACT, 2000.

• தாவரம், விதை, மரம் போன்றவற்றுக்கு காப்புரிமை கொடுக்கும் PROTECTION OF PLANT VARIETIES AND FARMERS RIGHTS ACT, 2001.

ஆக நம்மை சுற்றியுள்ள யாவும் அறிவு சொத்துரிமை சட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தப் படுகின்றன. அக்கட்டுப்பாட்டை நிறுவனங்கள் பெற்றுள்ளன. இத்தகைய நிறுவனங்கள் பெருமளவு அமெரிக்க நிறுவனங்களாக உள்ளன !!

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (10-Jul-16, 11:03 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 187

மேலே