எங்க ஊரு திருவிழா

வைகாசி 4
கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்த
இஷ்டத்துக்கு செலவு பண்ண
ஊரே ஒண்ணா கூடி குறிச்ச நாள்
எங்க ஊரு திருவிழா!

காசுள்ளவனுக்கும் ஆயிரம் ரூவா வரி
காலையில வேலைக்கு போனாதான்
'கஞ்சி'ங்கிரவனுக்கும் ஆயிரம் ரூவா வரி
எங்க ஊரு திருவிழா!

அப்பனுக்கு தெரியாம மகனும்
மகனுக்கு தெரியாம அப்பனும்
மகிழ்ச்சியாய் மது குடிக்கும் நாள்
மன்னிக்கவும்., மது குளிக்கும் நாள்
எங்க ஊரு திருவிழா!

நீ பெரிய ஆளா நான் பெரிய ஆளா - என
உறவுகளுக்குள்ளே காட்டிக்கொள்ள
போட்டி 'கட் அவுட்' வைக்கும்
போலியான நாள்
எங்க ஊரு திருவிழா!

அப்பா அம்மா
அண்ணன் தங்கச்சி
ஒண்ணா உக்காந்து
'ஆபாச' நாடகம் பார்க்க
அண்ணன் அறிவழகன்
அன்பளிப்பு அம்பதாயிரம்
பெரிய மனுஷன்ப்பா...!
எங்க ஊரு திருவிழா!

கலர் கலரா வான வேடிக்கை
கால் மணி நேரத்தில கரியாயிட
இருவத்தஞ்சாயிரம் ரூவா
இப்படிக்கு வெளிநாட்டு வாழ் இளைஞர்கள்
சும்மா அசத்திட்டாங்கப்பா...!
எங்க ஊரு திருவிழா!

ஆடல் பாடலா
கரகாட்டமா - என்ற
பெரும் விவாதத்திற்கு பிறகு
நாடகம் முடிஞ்ச மறுநாள்
நடைபெறும் ஏதோ ஒரு கருமத்துக்கு
செலவு ரூவா நாப்பதாயிரம்
சின்னப்பசங்களா சேர்ந்து நடித்தினாலும்
அமர்க்களப்படுத்திட்டாங்கப்பா...!
எங்க ஊரு திருவிழா!

வருஷத்துக்கு ஒரு தடவ
சில பல இலட்சங்கள இப்படி
வாரி இரைப்பதென்பது
என் கிராமத்துக்கு சில்லறைக்காசுதான்!

ஆனால்

இந்த நாகரீக உலகத்திலயும்
ஆம்பளைக்கு கருவக்காடும்
பொம்பளைக்கு கம்மாய்கரையும் தான்
எங்க ஊரு கழிப்பறைகள்

ஒரே படித்துறையில
இடது பக்கம் பொம்பள குளிக்க
வலது பக்கம் ஆம்பள குளிப்போம்
இதுதான் எங்க ஊரு குளியலறை

நம் மக்களின் வளர்ச்சி வெறும்
திருவிழா கொண்டாட்டங்களில் இல்லை
அவர்களின் வாழ்க்கை மாற்றத்தில் தான் இருக்கிறது
சிந்திப்போம் நண்பர்களே
திருவிழா கலாச்சாரத்தை தவிர்ப்போம்.

எழுதியவர் : பொய்கை கணேஷ் (11-Jul-16, 2:03 pm)
பார்வை : 176

மேலே