மழை வெள்ளம்

ஏ மழையே...

நீ வரும்போது நான் மறைவேனா என்று
ஆனந்தமாகத்தானே பாடினோம் - இப்போது
நீ வந்தே எங்களை மறைத்துவிட்டாயே
ஆணவம் என்று நினைத்துக்கொண்டாயோ?

உன் தவணை முறை தரிசனத்தை
ஒரே தவணையில் தந்துவிட்டால் - நாங்கள்
என்ன செய்வோம்?, எங்கு செல்வோம்?

தேவை என்கிற போதெல்லாம்
நீ முகம் திரும்பிக்கொண்டாய்
போதும் என்கிறோம்
நீயோ சீறிக்கொண்டிருக்கிறாய்!

உன் வீட்டை உடைத்து
நாங்கள் வீடு கட்டிக்கொண்டோம் - தவறுதான்
வேறு வழியில்லை பெருகிவிட்டோமே
கொஞ்சம் பொருத்துக்கொள்ளக்கூடாதா?

உன் வழித்தடத்தை விட்டிருந்தாலாவது
உன் வழி பொறுமையாய் ஊர்ந்து நீ
உப்பு நீரோடாவது உறவு கொண்டிருப்பாய்
இப்படி அடைத்திருக்கும் கதவையும்
உடைத்துக்கொண்டு உள்புகுந்திருக்கமாட்டாய்

இலவசங்களுக்காய் நாங்கள் கையேந்தியவர்கள்தான் - ஆனால்
இன்றோ எங்கள் உடைமைகள் தொலைத்து
உணவுப் பொட்டலங்களுக்காக கையேந்தும்பொழுது
உன்னோடு சேர்ந்து ஓடுகிறது எங்கள் கண்ணீரும் வெள்ளமாக...

எங்கள் மீது ஒரு சில தவறுகள் இருந்தாலும்
உன் மீதும் நிறைய தவறுகள் இருக்கிறதென்பதை
ஒப்புக்கொண்டே ஆக வேண்டும் நீ

உன் வரவு முறையாக இருந்திருந்தால்
விவசாய நிலம் ஏன் வீட்டு மனை ஆகப்போகிறது?

உன் வரவு முறையாக இருந்திருந்தால்
நாங்கள் ஏன் தலைநகரம் (நரகம்) தேடிப்போகிறோம்?

முந்தானை விரித்து காத்திருப்பவளை தவிக்க விட்டு
வேசி வீட்டுக்கு செல்பவன் போல் நீதான்
உன் முறை தவறி செல்கிறாய்

மண்வெட்டியுடன் காத்திருப்பவனை தவிக்க விட்டு
கணினியுடன் குடும்பம் நடத்துபவனை ஏன்
காயப்படுத்த செல்கிறாய்?

எங்கள் கண்மாய்கள் நிரம்பி கால் நூற்றாண்டுகள் ஆயிடுச்சு
எங்கள் நடவு விவசாய முறை மாறி பல வருஷம் ஆயிடுச்சு
விளைஞ்ச அரிசிக்கு பதிலா விலைக்கு அரிசி வாங்கி
கொண்டாட பழகிட்டோம் தமிழர் திருநாளையும்!

எழுதியவர் : பொய்கை கணேஷ் (11-Jul-16, 8:24 pm)
Tanglish : mazhai vellam
பார்வை : 315

மேலே