எண்ணக் குழந்தைகள்
நிமிட இடைவெளி கூட
இருப்பதில்லை
பிரசவித்து கொண்டே இருக்கிறது
சுகமாய் சில
வலியோடு சில
அறுவை சிகிச்சையில் சில
காலம் முழுவதும்
கர்பம் தரிக்கும்
இதற்கு
குடும்ப கட்டுப்பாடு செய்தவர்கள்
ஞானிகளாய்
என்றும் சலனமற்று
இருப்பதே இல்லை
ஏதோ ஒரு கல் விழுந்து கொண்டே
இருக்கிறது
எண்ணக் குழந்தைகளை
எண்ணற்று பிரசவிக்கும்
இந்த மனதை
கர்பமாக்கும் கயவன் யார்...?
நானா
ஆசைகளை அடக்காது
மனதோடு சரஸசமிட்டு
பின் நிம்மதி தேடி அலையும்
திராணியற்ற
அந்த ஏழை தகப்பன் நானா...?
என்னவோ இந்த மனதோடு
புணர்வதை நிறுத்த
முற்படுகையில் தான்
ஆசை ஆண்மையை தூண்டுகிறது
மீண்டும் அந்த மனம்
தன் எண்ணத்தை ஈன்று விடுகிறது