என் கிராமத்தின் பெருமை

பொது அறிவு அறியும்முன்
பொறந்த ஊரைப்பத்தி தெரிஞ்சுக்கோ
கரை (பிரிவு) பற்றி அறியும்முன் - அதன்
கதை சொல்றேன் புரிஞ்சுக்கோ

நாற்பதே வீடிருந்தாலும்
நமக்குன்னு தனி ஊரு
ஒரு ஆதிக்க சாதி கோடியிலும்
ஒடுங்கிப்போய் கிடக்கல

பொய்யக்கண்மாய் என்பது
பொதுச்சொத்தா இருந்தாலும்
பொய்யலூருக்கு மட்டும்தான்
பொறந்த உறவுரிமை

தொப்புள்கொடி நீள
தொலைவுதான் கண்மாய்க்கும் ஊருக்கும்
காட்டு வெள்ளம் வந்தபோதும்
கண்மாய் கரை ஒடஞ்சதில்ல!

கண்மாய்க்கரை தார்சாலையாகும் வரை
கண்ணுக்கெட்டிய தூரம்
கம்பீரமான பனைமரங்கள்
கணக்கில்லா புளியமரங்கள்

அதிவேகமா நாம் பயணிக்க
அத்தனையும் புடுங்கி எறிந்தோம்
வருடங்கள் பல கடந்தும் - அதன்
வாரிசா கூட ஒரு மரம் வைக்கல

மழைத்தண்ணி வழிந்தோடிய
மண் வாய்க்காலெல்லாம்
சிமென்ட் ரோட்டுக்குள்ள
சிறை பட்டுப்போச்சு

பல குடும்பம் பாரம்பரியமா
பயிர் செஞ்ச அய்யன் வயல் - இன்று
தனி ஒருவனோட சொத்தா
தரிசா செத்துக்கெடக்கு

பாதை மறைச்சு நின்ன
பயிர்கள் விலக்கி - கூத்தலூர்
பள்ளி சென்ற
பசுமை நினைவின்னும் மறக்கல

அம்பது நூறு வருஷ பனையெல்லாம்
அம்பதுக்கும் நூறுக்கும்
அறுத்து வித்துப்புட்டோம் - வெறும்
அரை பாட்டில் சாராயத்துக்கு

கிரிக்கெட்டே விளையாடின ஊருக்குள்ள - இன்று
கில்லி விளையாட இடமில்ல
வாரிசுகளின் வளர்ச்சியால
வயல்வெளிக்கு இடம்பெயர்ந்திட்டோம்

ஈசல் பூத்த இடத்திலெல்லாம்
இரும்புக்கம்பிய இறக்கிப்புட்டோம்
மாட்டுத் தொழுவத்திலெல்லாம்
மச்சு வீடு கட்டிப்புட்டோம்

கூடி வாழ்ந்த
கூரை வீட்டுச்சந்தோஷம்
மாடி வீட்டுக்கோடியிலும்
தேடியும் கிடைக்கல...!

எழுதியவர் : பொய்கை கணேஷ் (12-Jul-16, 2:44 pm)
பார்வை : 363

மேலே