குடைக்குள் பெய்யும் மகிழ்ச்சி

மழை இரவில் ஒரு கனவு,
சென்னை அண்ணா சாலை ஜெமினி மேம்பாலம்,
இருள் கவியும் நேரமாக இருக்க கூடும்,
முழுதாக முறுக்கியும்,
நடக்கும் வேகத்தில் என் இருசக்கர வாகனம் ஊர்கிறது,
எனக்கு முன்னே 16 சக்கரங்களோடு ஒரு ராட்சத வாகனம்,
இடதும் வலதுமாக நிலை தடுமாறி செல்கிறது,
அநேகமாக சென்னையில் நானும் அந்த தடுமாறும் ராட்சதனும் தான்,
பக்க சுவரை இடித்து நின்றது, என் இருசக்கரமும் நின்றது,
ஒரு சக்கர நாற்காலியில் கைலியும், முண்டா பணியனுமாக
மனிதன் ஒருவன் என்னை பார்த்து சிரித்துவிட்டு
கைகளால் அவன் சக்கர நாற்காலியை நகர்த்தி நகர்ந்தான்,
அந்த மனிதன் தான் அந்த ராட்சத வாகனத்தை ஓட்டி வந்தவனாக இருக்க வேண்டும்!
நான் என்ன உணர்வில் நின்றிருந்தேன் என்று நினைவில்லை!
பக்கச்சுவரை எட்டி பார்த்தேன், போக்குவரத்து நெரிசல், ஒலிப்பான்களின் ஓலம்.
ஏன் ஒரு வாகனமும் இந்த பாலத்தை கடக்க முற்படவில்லை?!...
ஒலிப்பான்களின் ஓலம் மழை நீரின் சலசலப்பாய் எஞ்சியது,
எப்போதும் போல 9 மணி, மாறாத வாழ்க்கை.
குடைவிரித்து சாலையில் இறங்கினேன்,
மழையே, என் கனவின் கேள்விக்கு உன்னிடம் விடை இருந்தால் மட்டுமே
நான் உன்னை ஏற்பேன்,
அதுவரை, எனக்கு இந்த குடைக்குள் மகிழ்ச்சி பெய்யட்டும்!

எழுதியவர் : கணேஷ் . க (12-Jul-16, 8:23 pm)
பார்வை : 65

மேலே