உணவும் உழவனும்

உணவும் உழவனும்

மனோ மிகவும் அலுப்புடன் வீட்டிற்குள் வந்தான். யாரையும் கவனிக்கத் தோன்றாமல் கையில் வைத்திருந்த சான்றிதள்களை சிறு எரிச்சலுடன் மேஜை மீது எறிந்தான். அவை வெறும் காகித குப்பைகளாகவே அவனுக்கு தோன்றியது. மதிப்பெண்களும், சான்றிதழ்களும் மட்டும் வேலைக்கான வாய்ப்பினை தந்து விடாது என்று நினைத்தான்..

வீட்டில் யாரையும் காணவில்லை, அம்மா என்று கூப்பிட்டுக்கொண்டே பின் வாசல் வரை வந்தான். வாழைக்கு மண் அணைத்து கொண்டிருந்த மனோவின் அப்பா தங்கவேலு ''வாப்பா மனோ போன விஷயம் என்ன ஆச்சு என்றார், மனோவின் சோகமான முக பாவனையை பார்த்ததும் அவன் பதிலுக்கு காத்திராமல் ''விடுப்பா இது இல்லேன்னா இன்னொரு வேலை, மனச மட்டும் விட்டுடாதப்பா'' என்றார்.

பதில் ஏதும் கூற தோன்றவில்லை மனோவிற்கு.இன்னும் எத்தனை நாள் இந்த ஆறுதல் வார்த்தைகள் கிடைக்குமோ தெரியவில்லை, அப்பா தண்டசோறுன்னு சொல்ற காலத்துக்குள்ளேயாவது நமக்கு ஒரு வேலை கிடைச்சா சரி என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டான், எங்கப்பா அம்மாவை காணல, எங்க போயிருக்காங்கன்னு கேட்டான். நம்ம பாஸ்கர் பொண்ண பிரசவத்துக்காக ஆஸ்பத்திரில சேர்த்து இருக்காங்க அதான் உங்க அம்மா போயிருக்கா. அம்மா இல்லாத அந்த பொண்ணுக்கு கூட இருந்து பார்த்துக்கிறது ஆள் இல்ல, பாஸ்கர் ரொம்ப பதறி போய் இருக்காரு, எத்தனை பேர் இருந்தாலும் அம்மாக்கு ஈடு இல்லைதான்,அவர் ரொம்பவே கவலைபடுறாரு.
எந்த உறவுகளுமே இல்லாத போதுதான் அவர்களுடைய இருப்பு நமக்கு அவசியமா படுமோ என்னவோ என்று அப்பா சொன்ன அந்த கடைசி வார்த்தை மனோவின் மனதை கவலையடையச் செய்தது.

மனோ கொஞ்சம் யோசித்தான். அம்மா இல்லாம அந்த பொண்ணு இவ்வளவு நாள் எத்தனை கஷ்டப்பட்டு இருப்பாளோ. நம்மால் இருக்கா முடியுமா, அம்மா இல்லாமல் ஒரு நாள் ..யோசிக்கவே முடியவில்லை அவனால்..இந்த நேரத்தில் யாரோ கூப்பிடுவது கேட்டு வாசலுக்கு வந்தான், அங்கே பழனிசாமி மாமா வந்திருந்தார். உள்ளே வாங்க மாமா என்று அவரை அழைத்து வந்தான், சிறிய நலம் விசாரித்தலுக்குப் பிறகு, வந்தவர் அப்பாவை பற்றி கேட்க, இருங்க மாமா அப்பாவை கூப்பிட்டு வரேன் என்று சொல்லி உள்ளே சென்றான்.

கைகளை துடைத்தவாரே வந்த தங்கவேலு, வாங்க மாப்பிள்ளை, இப்பதான் வீட்டுக்கு வர நேரம் கிடைச்சதா என்று செல்லமாக கடிந்து கொண்டு, வீட்டில் உள்ளவர்களை பற்றி விசாரித்தார். ஒரே ஊர்லதான் இருக்கோம் ஆனாலும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்க முடியல என்றார்.

எல்லோரும் நல்லா இருக்காங்க மாமா. நீங்க சொல்வது வாஸ்தவம்தான், வாரம் பூராவும் வேலை வேலைன்னு ஓட வேண்டியதா இருக்கு. பிள்ளைகள்கிட்ட கூட பேச நேரம் இருக்க மாட்டேங்குது, ஞாயிற்று கிழமை மட்டும்தான் நமக்கான வேலைகளை செய்ய முடியுது.ரொம்ப அலுப்பான நாட்களாய் போயிட்டு இருக்கு.ஊருக்குள்ளேயே இருந்து உங்கள் வேலைகளை செய்யும் உங்களை போன்றவர்களை பார்த்தால் கொஞ்சம் பொறாமையாகக்கூட இருக்கு. என்ன செய்ய எனக்கு ஊர் ஊரா திரியிற வேலை, காசு கிடைச்சாலும் மனசு அமைதிபட தகுந்த வேலை இல்ல மாமா, நாய் வேஷம் போட்டா குறைச்சு தானே ஆகணுமனுன்ற கணக்குல வண்டி ஓடிட்டு இருக்கு என்றார் பழனிசாமி.

என்ன பழனி இப்படி எல்லாம் பேசுற, எந்த வேலையா இருந்தாலும் குறை நிறைகள் இருக்கத்தான் செய்யும். வாழ்க்கைய ஓட்ட ஏதோ ஒரு வேலை செய்யத்தானே வேண்டும் என்றார்.

இடையில் மனோ தண்ணீர் கொண்டு வந்தான். இந்தாங்க மாமா எடுத்துக்கோங்க, அம்மா வீட்ல இல்ல அதான் ஒரு காபி கூட குடுக்க முடியல.. நா வேணா கடையில் போய் கூல்ட்ரிங்ஸ் வாங்கிட்டு வரவா என்று கேட்டான்..வேணாம்பா தண்ணி மட்டும் குடு, இப்பதான் வீட்டில சாப்பிட்டு வந்தேன் என்றார் பழனிசாமி. இதோடு மனோவின் வேலை தேடலை விசாரித்தவர், ஒன்றும் கவலை படாதே மனோ எனக்கு தெரிந்த இடங்களில் விசாரித்து உனக்கு நல்ல வேலைக்கு ஏற்பாடு செய்கிறேன் என்றார். மனோவும் வழக்கம் போல் தலையசைத்து விட்டு தன்அறைக்கு சென்று புத்தகங்களை புரட்டி கொண்டிருந்தான். மனம் ஏதோ குழப்பத்தில் இருப்பது மட்டும் தெளிவாக தெரிந்தது. தன் அப்பவும் மாமாவும் பேசிக்கொள்வது காதில் விழுந்தது.

தங்கவேலு, பழனியிடம் வந்த விஷயம் என்னவென்று கேட்டுக்கொண்டிருந்தார்.
பழனி,"அது வந்து மாமா நம்ம செங்கமடை வயல் குருசாமி அண்ணன்கிட்ட குத்தகைக்கு விட்டிருந்தோம்ல, அப்பா காலத்திலிருந்தே அவர்தான் விவசாயம் பண்ணிட்டு இருக்காரு. இந்த வருஷத்தோட குத்தகை கெடு முடியுது, மறு குத்தகைக்கு ஒப்புக்கொள்வார்ன்னு நினைச்சேன், ஆனால் அவரு சென்னையில் போய் அவரோட மகனோட இருக்க போறதா சொல்றாரு. அதனால் யாருக்காவது குத்தகைக்கு மாத்தி விடுங்கன்னு சொல்லிட்டு என் பதிலை கூட கேட்க நேரம் இல்லாம உடனே போய்ட்டாரு. அது சமபந்தமா தான் உங்களை பார்த்து யோசனை கேட்டுட்டு போகலாம்னு வந்தேன்.

சொல்லு பழனி நான் என்ன செய்யணும் என்றார் தங்கவேலு.

மாமா ஒரு மாதிரியா இருக்கு, குருசாமி அண்ணன் குடும்பம் காலங்காலமா சம்சாரியா இருந்தவுங்க.. முக்கியமா குருசாமி அண்ணன் விவசாயம் செய்றதே ஒரு அழகு, அவர் வயலையும், பயிர்களையும் தன் பிள்ளைகளை போல் பார்த்து வளப்பாரு, அவரே இப்ப இப்படி சொல்றது எனக்கு ரொம்ப பயத்தை தருது என்றார்.

உடனே தங்கவேலு, என்னப்பா பழனி இவ்வளவு யோசிக்கிற,அவர் இல்லேன்னா வேற யார்கிட்டயாவது குத்தகைக்கு விடலாம்ல.ஊர்ல ஆளா இல்ல, இதுக்கு போய் இவ்வளவு கலங்கி போய்ட்டியேப்பா என்றார்.

உடனே பழனி சாமி கூறினார், இல்லை மாமா இது கவலைப்பட வேண்டிய விஷயம் தான். ஊர்ல நிறைய பேர் இருக்காங்க, ஆனால் விவசாயம் பண்ணதான் ஒருத்தரும் இல்லை,நான் யார்கிட்டயும் இதை பத்தி பேசல,ஆனால் ஒரு தெளிவான முடிவுக்கு வந்துட்டேன், குருசாமி அண்ணன் போனா என்ன, இந்த பழனிசாமி அவர் விட்டதை தொடரலாம்னு வந்துட்டேன்,என் ஆரம்பம் நல்ல முடிவாக அமைய நீங்கதான் உதவி பண்ணனும்.
மாமா, காலம் எவ்வளவு மாறினாலும் மனுஷனோட பசியும் அதற்கான உற்பத்தியும் இருந்துதானே ஆகணும். உற்பத்தி ஏதோ ஒரு காலகட்டத்தில் நிறுத்தப்பட்டால் பசியும் நின்று விடுமா என்ன.உலக உயிர்களின் சப்த நாடியும் அடங்கிய ஒரு மிக பெரிய பிரமாண்டம் சுருங்கி கொண்டு வருவதை என்னால் தாங்கி கொள்ள முடிய வில்லை, அதனால என்னோட நிலத்தில் நானே விவசாயம் செய்யலாம்னு முடிவு பண்ணிட்டேன், நீங்கதான் எனக்கு அந்த அற்புத கலையை ஆணி பிசகாமல் கற்று தரணும் என்றார்.

இதை கேட்ட மனோவின் அப்பா, சரியான முடிவு தான் எடுத்து இருக்க பழனி, இப்படி ஒவ்வொருவரும் யோசித்தால் நீ சொன்ன அந்த பிரமாண்டம் அதன் நிலையிலேயே இருக்கும் என்றார்.

இத்தனை பேச்சுகளையும் கொண்டிருந்த மனோ அவர்கள் பேசிக்கொண்டு இருந்த வராண்டாவிற்கு வந்தான். இருவரும் என்ன என்பது போல் அவனையே பார்த்தனர்.

மனோவே ஆரம்பித்தான், அப்பா நான் காலையில் இருந்து மிகவும் குழப்பமான மன நிலையில் இருந்தேன், யாரும் வேலை தரவில்லை என்பது மட்டும் தான் என்னுடைய பெரிய கவலையாக இருந்தது, நாமே நமக்கு தேவையான வேலையை உருவாக்கி அதனால் பலருக்கும் நல்லது செய்ய முடியும்னு தெரியாம போச்சு, இப்ப மாமா சொன்னது அத்தனையும் உண்மை தான். எல்லோருமே தன்னோட வசதி வாய்ப்புகளை மட்டுமே யோசிச்சு முடிவு செஞ்சுகிறோம், எங்க தலை முறையில் இருக்கிற முக்கால்வாசி பேருக்கு விவசாயத்த பத்தி தெரியல. அதை தெரிஞ்சுக்க எந்த விருப்பமும் இல்ல, இது இப்படியே போனால் இனி வரக்கூடிய காலத்துல விவசாயம் என்ற மாபெரும் சக்தி மங்கி ஒரு நாள் மறைந்து விட்டா கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை .கடைசி நிமிடம் வரை கவலைப்படாமல் இருந்து விட்டு பின் யோசித்து என்ன ஆகி விட போகிறது. கூகுளிலும், யூ டுபீலும் விவசாயம் எப்படி செய்வதுன்னு படம் பார்த்து அவுங்கவுங்க கட்டி இருக்கிற பிளாட்டில் மாடித்தோட்டம் போட்டு பயிரிட வேண்டியதா இருக்கும். உங்களை போலவும் குருசாமி மாமா போலவும் விவசாயத்தையே நம்பி இருந்தவுங்களே இதை விட்டு போனா இதை எப்படி அடுத்த தலை முறைக்கு கொண்டு போவது,

எத்தனை மாடர்னா உலகம் மாறினாலும் யுகங்கள் கடந்தாலும் அறிவியல் வளர்ச்சி அடைந்தாலும் உயிரும் பசியும் ஒன்றாகத்தானே பயணிக்க முடியும், பசிக்கு தர என் பிள்ளைகளுக்கு எதை மிச்சம் வச்சுட்டு போறது, இரண்டு மூன்று கான்க்ரீட் பிளாட்களும், இன்சூரன்ஸ் பாலிஸியும், நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் அறிவையும் மட்டும் தர முடிந்த எனக்கு அவர்களின் பசி தீர்க்க எதை தருவது என்பது மட்டும் தான் மிக பெரிய கேள்வியாக உள்ளது. பாலிதீன் கலந்த மண்ணையும், வேதி உரத்தால் மலடாகி போன வயலையும் , நிலத்தடி நீர் இல்லாத கான்க்ரீட் குடியிருப்புகளையும், விவசாயம் என்ற விஷயத்தை அறியாத மனுஷங்களோடும் என் பிள்ளைகளை விட்டுட்டு போக கூடாது, அது நாம் அவர்களுக்கு செய்யும் கொலைபாதகச் செயலாகவே இருக்கும்.

நானும் மாமாவோடு சேர்ந்து விவசாயம் செய்ய போரேன், இது ஏதோ நான் ஆவேசத்திலும் அவசரத்திலும் எடுத்த முடிவு அல்ல, உறவுகளின் அருமை அவர்கள் இல்லாத போது தான் தெரியும்னு கொஞ்ச நேரம் முன்னாடி நீங்க சொன்னிங்கல்லப்பா அதே போல ஒருநாள் விவசாயத்தை இல்லாத இடத்தில போய் தேடி கவலைப்படாம,அது தொலைந்து போய் கொண்டு இருக்கின்ற இதே இடத்தில் அதை தேடுவதுதான் உத்தமம்.நம்ம சந்ததியை காப்பாத்த நாங்க முடிவு பண்ணிட்டோம்.

அவரவர் பரம்பரைக்காக அவரவர் உழைக்கட்டும். உழைக்க யோசித்து, ஒயிட் காலர் வேலையை மட்டுமே தேடி ஓடுபவர்கள் ஓடிக்கொண்டே இருக்கட்டும், பசி எடுத்தால் தன்னாலே இங்க வந்துடுவாங்க.கண் முன் இருக்கும் உணவு குவியல் அவர்களின் கண்களை மறைத்துள்ளது. குந்தி தின்றால் குன்றும் குறையும் என்பது அவர்களுக்கு விரைவில் புரியும். புரியாதவர்கள் அங்கேயே தேங்கி நிற்கட்டும்..

மனோவின் இந்த பேச்சை கேட்ட இருவரும் வாயடைத்து போய் விட்டனர். மனோவின் அப்பா கூறினார், நீங்கள் இருவரும் எடுத்த முடிவு என் மனச நிறைய வச்சுருச்சு, இன்றைய பிள்ளைகளுக்கு சோறு ஊட்ட்டிக் கொண்டிருப்பதை விட வருங்கால சந்ததிகளுக்கு சோறு ஊட்டிவிட கற்று கொடுப்பதே நல்லது.

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்".

பிறருக்காகவும் உழுது தாமும் உண்டு வாழ்பவரே வாழ்பவர். மற்றவர் எல்லாரும் பிறரைத் தொழுது ,அவர் தருவதை உண்டு, தருபவர் பின் செல்பவர் ஆவர் என்று, குரலின் வழி அவர்களுக்கு வாழ்த்து கூறினார் தங்கவேலு.

மனோ கூறினான் மாமா இனி விவசாயம் என்பது கவலைப்பட வேண்டிய விஷயம் இல்லை, கவனிக்க பட வேண்டிய விஷயம்.

எழுதியவர் : (13-Jul-16, 3:30 pm)
சேர்த்தது : thilagavathi
பார்வை : 331

மேலே