பசி தீர்க்கும் விஞ்ஞானி

கூவும் சேவலோடு எழுந்து
கூடி நின்று பணி செய்து
கூட்டிற்குள் சேவலையும் சேர்த்தபின்
கட்டாந்தரையிலும் கயறு கட்டிலிலும்
கண்ணயர்ந்து கனகாண்கிறான்
என் தலைவன் விவசாயி என்னும் விஞ்ஞானி

இவன் மழைத்துளியை ரசிப்பதில்லை
மாறாக அதை ருசிக்கிறான், ருசிக்க தருகிறான்
தனக்கென்று உழைப்பதாய் எண்ணி
தரணிக்கு அன்னமிடுகிறான்
தூசிகண்டு தூரமாய் ஓடாமல்
வெயில் கண்டு வெம்பாமல்
அனைத்திலும் அமைதியை அங்கலாய்க்கிறான்
மண்ணிற்குள் மணிக்கணக்காய்
மண்ணிற்காய் மனிதனுக்காய் உழைக்கிறான்

செருப்பில்லாத கால்களோடு செப்பனிடுகிறான் நிலத்தை
பஞ்சடைந்த கண்களோடும் பஞ்சம் போக்கும் வித்தையறிந்தவன்
கணிதம் அறியாவிட்டாலும் பசி தீர்க்க தெரிந்த கல்வியாளன்
வெடிப்புள்ள பாதங்களோடும் வெட்டி வெட்டி தீர்க்கிறான் வரப்புகளை

வாய்க்கால் வரப்புகளில் வழிந்தோடி மாடுகளிடமும் மனிதருக்காய்
எதை எதையோ பெற்று தருகிறான்
பூமித்தாயிடம் பொன்மொழி பேசி பூ பூக்க வைக்கிறான்

இவனை விட விஞ்ஞானி வேறு ஒருவன் இருப்பதாய் தெரியவில்லை
இருந்தால் சொல்லுங்கள் பசி தீர்க்கும் பாமரனை விட
பகுத்தறிவுள்ளவன் எவனெனும் இருக்கின்றானா
பாமரனின் தோற்றம் கொண்ட என் பாட்டாளியின் பாதம்
தொட்டு வணங்கா விட்டாலும் அவன் வாழ்ந்த சுவடுகளை சேமிப்போம்
அவன் வழி செல்வோம்...
பசி தீர்த்த பின் பன்னாட்டு சந்தையின் ஏற்ற இறக்கங்கள் பற்றி பேசுவோம்

எழுதியவர் : திலகவதிமுத்துகிருஷ்ணன் (13-Jul-16, 3:20 pm)
சேர்த்தது : thilagavathi
பார்வை : 105

மேலே