ஓர் இரவு...!

கறுப்பின் அடர்த்தியில்
நிறம்மாறிக் கிடக்கிறது
சற்றே முன் மரணித்த
பகலொன்றின் சடலம்!

சுடலை மரங்களின்
அமானுஷ்ய அமைதியில்
அசைய மறந்து
தூங்குகின்றன
இலைகள்;
சலனமற்ற இருளின்
தியானத்திற்குள்
மயங்கிக் கரைகிறது
ஆத்மா..!

அடங்குவதாய் நடிக்கும்
நிலத்தின் பேரெழுசசியை
ஆயுளை மணிக்கணக்கில்
அடகு வைத்தும்
ஊர்ந்தும் தவழ்ந்தும்
ஆட்சிப்படுத்துகிறது
நிசப்தம்;

ஒரு விடுதலைப் போரின்
நியாயமற்ற தீர்வை
அசரீரியில் சொல்லி
நத்தை வேகத்தில்
நகர்கிறது காற்று;

நிலமொட்டப் பறந்து
தன்னிருப்பை
தீனமாய் இசைக்கிறது
ஒரு பறவை;
நாளைக்கான ராகம்
ஒரு நூலிழையில்
பின்னிசைக்க..!

எழுதியவர் : தோழி (14-Jul-10, 9:51 pm)
பார்வை : 444

மேலே