காதல் ஒரு இதிகாசம் போல
காதல்
ஒரு அறியா திசையிலிருந்து
தென்றலாய் வரும்,
விலாசம் தேடி அது வருவதில்லை,
விழிகளில் பட்டு இதயத்தில் தெறிக்கும்
உணர்வுகளில் கலந்து புது உறவென உருவெடுக்கும்.
அந்த தென்றல் வரும்
தெருவில் தடைகள் இல்லையெனில்
தினம் வசந்தம் தரும்,
அப்படியில்லையெனில்
தினம் திருடு போகும்,
மனதுடன் வாழ்க்கையும்.
காதல் வந்து குறுக்கிட்டால்
மனம் என்னும் ஒரு புதிய உறுப்பு
இதயத்தில் வந்து முளைக்கும்,
அந்த மனதுடன் மட்டுமே
வாழ்ந்து கிடக்கும் காதல் வயப்பட்ட ஜீவன்..!
சுற்றும் முற்றும் மறந்து
கனவில் கற்பனையில்
அட. காதலில் தான்
இந்த உலகமே இயங்குவது போல
உள்ளும் புறமும் தோன்றும்.
இரும்பைக்கண்டவராய் இந்த உலகெங்கும்
சஞ்சரித்தவர்கள் காந்தத்தில்
கட்டுண்டு கிடப்பது
இந்த காதலில் தானே..!
உருண்டோடும் வாழ்வில்
எத்தனை எத்தனை காதல்கள்..
சில பயணம் செய்யும் தூரம்
சில நொடிகள், இன்னும் சில
சில மாதங்கள், இன்னும் சில
சில வருடங்கள், இன்னும் சில
சில காலங்கள், ஏன் இன்னும் சில
சில ஜென்மங்கள் கூடத்தான்..
வாழ்ந்து முடித்தவர்களுக்கு
அந்த காதல் ஒரு இதிகாசமாய்
எத்தனை கதைகளை சொல்லிப்போகிறது?
எத்தனை விஷயங்களை தெளிவு படுத்துகிறது?
எத்தனை சோகங்களை விழுங்கி விடுகிறது?
ராமாயணத்தில் ஒழுக்கம் போதனை என்றால்
மகாபாரதத்தில் தர்மமே பாடமாவதைப்பார்த்து
பழகிய மானிடமே
காதல் இதிகாசத்தில்
நீ கற்று தருவதென்ன தெரியுமா?
அழகில் மயங்கு;
ஆசையில் மிதந்து
இன்பத்தை நெருங்கு.
பின் மீளாத்துன்பத்தில் வீழ்ந்து
வாழ்வினை புரிந்து
பேச்சு மூச்சின்றி போ.!