நாம்

நாம்..!
ஆறறிவுள்ள உயிரிகள் அல்ல
ஆறறிவுள்ள கருவிகள்
பெட்ரோல் டீசலில் இயங்கும்
கருவியென கனம்
குறைத்துக் கொள்ள வேண்டாம்
மகத்தானக் கருவிகள் நாம் தான்
மதுவில் இயங்கி
அரசியலை இயக்குகிறோம்
இலவசக் கருவிகள் பொருத்தப்பட்டு
மேம்படுத்தப்பட்ட கருவிகள் நாம்..!
கொலை கொள்ளை கற்பழிப்பு
செய்திட அறியாததையும்
அறிந்து கொள்ள
இலவச தொலைக்காட்சி
பொருத்தப்பட்ட கருவி நாம்..!
உற்பத்தி செய்யாமல்
ஊதாரித்தனமாக உழைக்காமல்
உண்ண இலவச அரிசி தாங்கிய கருவி நாம்..!
ஆதாரமில்லாமல் கொலை செய்ய
இலவச எரிவாயு அடுப்பு
இணைக்கப்பட்ட கருவி நாம்..!
உடலும் திறனும்
உருக்குலையாமலிருக்க
இலவச மிக்சி கிரைண்டர்
பொருத்தப்பட்ட கருவி நாம்...!
கனவுகளைக் கலைத்து விட
இலவச கணினி கொண்ட கருவி நாம்..!
மொழி குணம் அடையாளம் மறக்க
இலவச ஆங்கில வழி கல்வி திருகாணி
சொருகப்பட்ட கருவி நாம்..!
இரவைப் பகலாய் இயக்க
இலவச மின்சாரம் புதிதாய்
புகுத்தப்பட்ட கருவி நாம்..!
ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை
இயந்திரத்தில் வாக்களிக்கும் கருவி நாம்..!
இப்போதெல்லாம்
விஞ்ஞானிகள்
ரோபோக்கள்
தயாரிப்பதில்லை
அரசியல் வாதிகள்
கருவிகளை உருவாக்கிக் கொள்வதால்..!