நீ ஒரு காதல் சங்கீதம்

அலைபேசி அறிமுகமாகி இருந்த,
காலம் அது...
தினம் தினம் அதை பற்றியே
பேச்சு..!
ஒரு தருணத்தில்,
ரிங்க் டோன் இல் பிடித்த
பாடலை ஒலிக்கவிடும்
வசதி இருந்ததால்....
எனக்கு மிகவும் பிடித்த,
காதல் ரசம் சொட்டும்
பாடலான....நீ ஒரு காதல் சங்கீதம்....
பாடலை செட் செய்திருந்தேன்....!
அந்த சூழலில் திளைத்திருந்த பொழுதுதான்,
முதல் முறை அவளைப் பார்த்தேன்.
பார்த்த பொழுது,
சராசரி அழகான பெண்ணென்றே நினைத்தேன்.
நினைத்த மறுகணமே,
மனதுக்குள் பல முரண்கள்
முளைத்து வெடித்தது....
அழகாய் தான் இருக்கிறாளோ ?
என்று நோக்கினாள்,
பேரழகாய் தெரிந்தாள்.
ரத்த ஓட்டம் சுனாமி
அலையாய் உயர்ந்து
சடாரென்று அடங்கியது.
ஓ! இதுதான் கண்டதும்
காதலென்பார்களோ?
காதலின் கண்கட்டி வித்தை
ஆரம்பித்திருந்ததை புரிந்ததாய்
முடிவு செய்தேன்.
தினமும் அவளை பார்க்க
சொன்னது, என் இதயம்.
புறக்கணிக்காமல் பல பல
வாய்ப்புகள் உருவாக்கி பார்த்து
பார்த்து பரவசமாகினேன்...!
அவளுக்கு வெட்கம் வந்தால்,
தலை கவிழ்ந்து சிரிப்பாள்...
அந்த அழகை ரசிக்க,
சில முறை லேசில்லாத சூவில்
லேஸ் கட்டுவது போல் கீழே
அமர்ந்து அவள் முகத்தை பார்ப்பேன்.
கொள்ளை அழகு...!
அவளிடம்,
எது சொன்னாலும் ஆச்சிரியம்தான்,
எதை செய்தாலும் பாராட்டுக்கள் தான்.
அவளுக்கு தெரிந்த உலகம்
மிக மிகச் சிறியது.
ஆசைகளோ அதை விடச் சிறியது.
அளவற்ற அன்பை வாரித்
தெறிப்பாள்.
எதிர் பார்ப்பும் ஏக்கங்களும்
குறைவுதான்...
பல நாட்கள் பழகி இருந்த நான்,
ஒரு முறை,
அவள் தன் சுருண்ட கூந்தலை
சரி செய்யும்போது,
என் மனது அவளிடம் சிக்கிக்
கொண்டதை உணர்ந்து.
சிக்கிய இதயத்தை கேட்டு பெற,
மனமின்றி,
அவளின் இதயத்தை தருமாறு,
வினவினேன்.
விடை கிடைக்க தாமதமானதால்,
வயதை வீணடிக்க மனமின்றி
அவளின் வீட்டுப் படி ஏறினேன்...!
காதலைச் சொன்னேன்....
கரம்பிடித்தேன்...!
மனைவியானாள்.
மாதங்கள் உருண்டோடியது,
முன் அனுபவம் இல்லாத,
கணவன் பதவி..!
ஊரில் தெரிந்த, அறிந்த
நல்ல கணவர்களை பார்த்து,
அவர்களை போலானேன்.
மனைவியானவளை காதலியாய்
பார்க்காமல் மனைவியாய் பார்க்கலானேன்.
இதைப் புரிந்த கொண்ட,
காதலியும் மனைவியாய் மாறினாள்...!
கணவன் மனைவிக்குள் வரும்
அதே சிக்கல்களும், சச்சரவுகளும்
எங்களுக்கும் வந்தது...!
தொலைந்துபோன காதலியை
தேடினேன்...தேடினேன் ...
கிடைக்கவில்லை....!
காணாமல் போன காதலையாவது
உயிர்ப்பிக்க உரமிட்டேன்....
துளிர்க்கவே இல்லை.!
கவனிக்கப் படாத,
கைவிடப்பட்ட காதல்,
நம்மை அனாதையாக்குமே தவிர,
அடிபணியாது என உணர்தேன்.
பல பரிசுகளும்,
அறிவார்ந்த உத்திகளும்,
அவளை வசியப் படுத்தவேயில்லை...!
இளமை கால காதலன் யூகங்கள்
தற்போதைய மனைவியிடம்
பலிக்காதென்பதை புரிந்துகொண்டேன்.
தற்போதுள்ள வயதிற்கான,
காதலனாய் உருமாற ஆயத்தமானேன்.
சில கால முயற்சிக்குப்பின்
காதலனாய் மாறியிருந்தேன்....!
இந்த கால இடைவெளியில்,
மனைவியாய் இருந்தவள்
தானாக காதலியாய் மாறி இருந்தாள்...!
இது எப்படி சாத்தியம்?
யோசித்ததில் புரிந்தது...
காதலி திருமணமாகியும்
காதலியாய் மட்டுமே
இருந்திருக்கிறாள் என்று.
வேதனையாய் பட்டது...
இத்தனை கால,
இழந்த காதலை,
ஒருசேர பகிர்ந்து விட
துடித்தது மனது.
காதல் ஊற்று
உயிர்ப்பித்திருந்த
காலை வேலையில்
நீ ஒரு காதல் சங்கீதம்.....!
பாடல் ரேடியோ வில் ஒலிக்கிறது....
தலை துவட்டியபடி,
கூந்தலை துண்டால் இரு சுற்று சுற்றி,
சடாரென்று பின் முதுகில் சுழற்றி யடிக்கிறாள்...!
இதை மேலே ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியும்,
சோபாவில் அமர்ந்திருந்த நானும் பார்த்த கணம்.
ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியும்,
என் இதயமும்,
சற்று நின்று, ஒடத் துடங்கியது....!!!