அழகிய தமிழ் மகள்
அழகிய தமிழ் மகளே..!
கலைந்த உன் கூந்தல் காட்டில்
தொலைந்த என் இதயத்தை
அலைந்து தேடிக் கொண்டிருக்கிறேனடி..!
உன் இதழ்களிலிருந்து
உதிராத பிற மொழிகள்
தமிழைக்கண்டு பொறாமைக்கொண்டு
தற்கொலைக்கு
தயாராகின்றனவடி ..!
பரந்த உன் நெற்றியில்
புரளும் கேசத்தை
கனவில் வருடிக்கொடுக்கிறேனடி..!
உன் புருவ வில்லிலிருந்து
வெளியேறி
என் இதயம் துளைக்கும்
உன் காதலை
உன் நெற்றிப்பொட்டிட்டு மறைத்துக்கொள்கிறாயடி..!
என் ஆயிரமாயிரம் காதல் கனவுகளை
உன்திரு கண்களுக்கு தூதனுப்புகிறேன்..!
சட்டென்று
கன்னம் சிவக்க திரும்பிச்செல்கிறாய்..!
சிணுங்கிச் சிவக்கும்
உன் கன்னங்களிலிருந்து
கவிதை படித்துக்கொள்கிறேன் அனுதினமும்..!
உன் பார்வையிலிருந்து
விடுபடும் மின்னல்கள்
என்னில் அன்பெனும் தீபத்தை
ஏற்றி செல்கின்றன ஆதரவாய்..!
அழகியே..!
உன் மெல்லிடை தழுவும்
காற்றினால்
மிச்சமிருக்கிறதடி
என் சுவாசம்..!
உன் வெயிற்கால மேகங்களில்
எதிர்பார்க்கிறேனடி
எனக்கான மழையை..!
படிய வாரப்படும்
உன் பின்னல்களில் சூடிய
மல்லிகைகள்
உன் தோள்களில் தவழ்ந்து
மோட்சம் அடைகின்றனவடி..!
உன் அழகினை
கவிதைப் பண்ணப் பார்க்கும்
என்னைக் கண்டு
உரத்து குரலிட்டு சிரித்து
மின்னலாய் மறைகிறாயடி
அழகியவளே நீ..!