எரிந்து சிதையும் நட்சத்திரங்கள்
அடிக்கடி பார்த்திருக்கிறேன் அவளை..!
அதே இடத்தில்..!
பார்க்கும் போதெல்லாம் வாடாமலேயிருக்கும்
அவள் சூடிய மல்லிகைப் பூக்கள்...!
கண்களில் அழுந்தி தீட்டப்பட்ட
கருமையான மை..!
எந்நேரமும்
வெற்றிலையோ பீடாவோ
சுவைத்தபடியேயிருக்கும்
அவளது சிவப்பேறிய உதடுகள்..!
நேர்த்தியாக கட்டப்பட்ட அவளது சேலை
சில இடங்களில் மறைக்க மறைந்திருக்கும்
இல்லை இல்லை ...
மறைக்க மறுக்கப்பட்டிருக்கும்...!
அவளின் உடல் மொழியிலும்
பேச்சிலும் கர்வம் மிகுந்திருக்கும்..!
அவளின் கண்களோ
செயற்கை பாதையிலேயே லயித்திருக்கும்...!
பல மாதங்கள் கழித்து
அதே இடத்தில் அவளைப் பார்க்கிறேன் ..!
உடல் மெலிந்து அழுக்கு தோய்ந்த உடலோடும்
கரை படிந்த உடையோடும்
பரிதாபமாய் சுருண்டு கிடந்தாள்..!
அவளுக்கு முன் சிதறிக் கிடந்தன சில்லறைகள் ..!
அவளின் வாழ்வினைப் போலவே..!
மனம் கனத்து அருகே பார்க்கிறேன்...!
அதே இடத்தில்
அவளுக்கு பதில் இன்று வேறொருத்தி ...!
கண்களில் அழுந்தி தீட்டப்பட்ட மையோடும்...
வாடாத மல்லிகையோடும்..!